Show all

அதிர்ச்சியில் இந்தியா! குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் படையில் சாதிக்கு முதன்மைத்துவமா

11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் படையில் சேர்வதற்கு குறிப்பிட்ட மூன்று சாதிகளைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களை தேர்வு செய்ய மறுக்கிறார்கள்- என்ற அதிர்ச்சிப் புகார் டெல்லி உயர் அறங்கூற்று மன்றத்தில் வழக்காக பதிகை செய்யப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து இன்று நடுவண் பாதுகாப்புத் துறை அமைச்சகம், ராணுவத் தலைமைத் தளபதி, குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் படைத் தலைவர், ராணுவ வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் ஆகியோருக்கு கவனஅறிக்கை அனுப்பியிருக்கிறது டெல்லி உயர் அறங்கூற்றுமன்றம்.

ஹரியானாவைச் சேர்ந்த கௌரவ் யாதவ் என்பவர் தொடுத்த இந்த வழக்கில், 'குடியரசுத் தலைவரின் பாதுகாவலர்களுக்கான வேலைவாய்ப்பு கோரி கடந்த ஆண்டு விண்ணப்பித்தேன். நான் அஹிர் என்கிற யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவன். நான் குடியரசுத் தலைவரின் பாதுகாவலருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளேன். ஆனால், நான் ஜாட், ராஜபுத்ரா, ஜாட் சிக் ஆகிய மூன்று சமூகங்கள் தவிர வேறு சமூகம் என்பதால் எனக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை' என்று முறையிட்டுள்ளார்.

கௌரவ் யாதவ்வின் வழக்கறிஞர் நரேஷ் யாதவ், 'குடியரசுத் தலைவரின் பாதுகாவலர் படையில் குறிப்பிட்ட இந்த மூன்று சமூகத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அனைத்து வகையிலும் தகுதி பெற்றிருந்தாலும் மற்ற சமூகத்தினருக்கு வாய்ப்பு இரண்டாம் பட்சம்தான்' என்று கூறியுள்ளார்.

நான்கு கிழமைகளுக்குள் பதில் அளிக்குமாறு அறிவிப்பு அனுப்பிய உயர் அறங்கூற்றுமன்றம் வழக்கை நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,013.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.