Show all

இன்று, வேளாண் பெருமக்கள் முன்னெடுக்கும், மாபெரும் நாடு தழுவிய போராட்டம்! பதினெட்டு கட்சிகள் ஆதரவு

ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நாடுதழுவிய முதல் போராட்டம் மாபெரும் வேளாண் சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்படுகிறது. அடாவடி பாஜக அரசுக்கு, நல்ல பதிலடியாக அமைய வேண்டும் என்கிற நோக்கத்தோடு பதினெட்டு எதிர்க்கட்சிகளும் இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பை நல்கி ஆதரிக்கின்றன.

09,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டமுன்வரைவை எதிர்த்து வேளாண் பெருமக்கள் நாடு முழுவதும் “இந்தியமுடக்கப்” போராட்டம் இன்று நடத்துகிறார்கள். இந்தியாவின் பல பகுதிகளில் சாலை போக்குவரத்து, தொடர்வண்டிப் போக்குவரத்து முடங்க வாய்ப்பு உள்ளது.

ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டமுன்வரைவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் உழவர்கள் தலைநகர் டெல்லியை எல்லா பக்கத்திலும் இருந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது.

இந்திய வேளாண் அமைப்புகள் அறிவித்துள்ள இன்றைய “இந்தியமுடக்கப்” போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. திமுக, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. அத்துடன் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன.

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக இன்று வேளாண் சங்கங்கள் இந்தியமுடக்கப் போராட்டம் அறிவித்துள்ளன. இந்தியாவின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் தொடர்வண்டித் தடங்களில் போக்குவரத்து தடைசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டெல்லியின் அண்டை மாநிலமான ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் எதிர்ப்புக்கள் அதிகமாக உள்ளதால், உழவர்ள் அங்கிருந்து மொத்தமாக வந்து டெல்லியை சுற்றி வளைக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர்களை தடுக்க காவல்துறையினர் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர். 

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு, அகில இந்திய கிசான் மகாசங் மற்றும் பாரதிய கிசான் யூனியன் ஆகியவை நாடு தழுவிய இந்த முடக்கப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 

பஞ்சாபில் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி  தொடர்வண்டி மறியலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், கோவிட் -19 பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் முதல்வர் அமரீந்தர் சிங் உழவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் போராட்டத்தை ஆதரிக்கின்றன. டெல்லி-என்.சி.ஆர் எல்லைகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு உழவர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

உத்தரபிரதேசத்தில் உள்ள உழவர்கள் தங்கள் கிராமங்கள், நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளைத் தடுக்குமாறு பி.கே.யூ அழைப்பு விடுத்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு உள்ளூர் வர்த்தக அமைப்புகளிடமிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது.

இடதுசாரிகளுடன் இணைந்த அகில இந்திய கிசான் சபா பல இடங்களில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளைத் தடுப்பதன் மூலம் வங்காளத்தில் பெரும் போராட்டத்தைப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. விவசாயத் தொழிலாளர்கள், குறு உழவர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோரின் சுயாதீன தொழிற்சங்கமான பாசிம் பங்கா கெத் மஸ்டூர் சமிதியும் பந்திற்கு ஆதரவளித்து வருகிறது.

மகாராஷ்டிராவின் மிகப்பெரிய வேளாண் குழுக்களில் ஒன்றான ஏஐகேஎஸ் மாநிலத்தில் 3,00,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, இது 21 மாவட்டங்களில் போராட்டங்களை நடத்துகிறது. சம்யுக்த கர்ஷக சமிதி கேரளா முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு வெளியே போராட்டங்களை நடத்தும். தொழிற்சங்கத் தலைவர்களின் கூற்றுப்படி 250 மையங்களில் போராட்டங்கள் நடத்தப்படும்.

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள உழவர் அமைப்புகள் இந்தியமுடக்கத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளன. வாடகைகார் மற்றும் லாரி ஓட்டுநர் சங்கங்களும் உழவர்களுக்கு ஆதரவளித்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.