வருமான வரித்துறை கணக்கு அட்டை இல்லாமல், ஆதார் எண் மூலம் வருமான வரி கணக்கு பதிகை செய்வதில் புதிய நடைமுறை குறித்து நடுவண் நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தற்போதைய நிலையில், 120 கோடிக்கு மேற்பட்டோருக்கு ஆதார் எண்ணும், சுமார் 41 கோடி பேருக்கு வருமான வரித்துறை கணக்கு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், 22 கோடி வருமான வரித்துறை கணக்கு எண்;கள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, ஆதார்-வருமான வரித்துறை கணக்கு எண்கள் இணைப்பை உறுதி செய்ய, பான் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை குறிப்பிட்டு வருமான வரி கணக்கு பதிகை செய்ய நடுவண் அரசு அனுமதிக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வரவு செலவுத் திட்ட உரையில் கூறினார். இதனால், வருமான வரித்துறை கணக்கு எண்; தேவையற்றதாகி விட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நடுவண் நேரடி வரிகள் வாரிய தலைவர் பிரமோத் சந்திர மோடியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது: வருமான வரித்துறை கணக்கு எண்;, நிச்சயமாக செயலிழந்து போகவில்லை. வருமான வரித்துறை கணக்கு எண் இல்லாமல், ஆதார் எண் மட்டும் இருப்பவர்கள், வருமான வரி கணக்கு பதிகை செய்வதற்கான புதிய நடைமுறையாகவே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்தகையவர்களுக்கு வருமான வரி கணக்கு மதிப்பீட்டு அதிகாரிகள், தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, தாங்களாக முன்வந்து புதிய வருமான வரித்துறை கணக்கு எண் ஒதுக்குவார்கள். இதற்கு சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை கணக்கு எண் ஒதுக்கிய பிறகு, சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் எண்ணும், வருமான வரித்துறை கணக்கு எண்ணும் இணைக்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார். பாஜக நடுவண் அரசு மக்களிடம் இருந்து பிடுங்கும் விசயங்களில்தாம் தெளிவாக இருக்குமே. எல்லாம் சரியாகவே நடக்கும். பாஜக கொடுப்பதாக எந்த திட்டத்தையும் அறிவிக்காது, அப்படி ஒருவேளை அறிவித்தாலும், அந்த விசயங்களில் நாம்தாம் தேடித் தேடி மாய்ந்து போக வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,207.
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆதார் திட்டம் செல்லும் என்று கடந்த ஆண்டு உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து, ஆதார் எண்ணையும், வருமான வரி கணக்கு எண்ணையும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இணைக்க வேண்டும் என்று நடுவண் அரசு உத்தரவு இருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.