Show all

வரவு-செலவுத் திட்டத்தில் ஹிந்திக்கு 50 கோடி ஒதுக்கீடு! ஹிந்தியைப் பேசாத மாநிலங்களில் ஹிந்தி ஆசிரியர்களை நியமிக்கவாம்.

இந்தியாவின் அலுவல் மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில், ஒற்றை மொழி ஹிந்தியை மட்டும் கொண்டாடுவது மக்களாட்சிக்கு எதிரானது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் அரசில் ஆளும் பொறுப்பில் முன்பு காங்கிரசும், தற்போது பாஜகவும் இருக்கிறது. காங்கிரசிலும் சரி, பாஜகவிலும் சரி ஹிந்தியை தாய் மொழியாய் கொண்டவர்களே அதிகாரத்தில் இருக்கின்றனர். 

ஆதனால் நேற்று காங்கிரசும் சரி, இன்று பாஜகவும் சரி தங்கள் தாய்மொழியான ஹிந்தியை மற்ற மாநில மக்கள் மீது திணிக்கும் வேலையை, இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே ஆங்கிலேயர் அதிகாரத்தில், இரட்டை ஆட்சி முறையிலிருந்தே தொடங்கி நடத்தி வருகின்றார்கள். 

இந்தியாவிற்கு ஆட்சி மொழியாக வெள்ளையர்கள் இருந்த போது ஆங்கிலம் இருந்தது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு ஆட்சி மொழி என்று இந்தியாவின் எந்த மொழியையும் நிறுவ முடியவில்லை. 

மாறாக எட்டாவது அட்டவணை மொழிகள் என்று, 1.தமிழ் 2.அசாமிய மொழி 3.பெங்காலி 4.போடோ மொழி 5.டோக்ரி மொழி 6.குசராத்தி 7.ஹிந்தி 8.கன்னடம் 9.காசுமீரி 10.கொங்கணி 11.மைதிலி மொழி 12.மலையாளம் 13.மெய்தி மொழி 14.மராத்தி 15.நேபாளி மொழி 16.ஒரிய மொழி 17.பஞ்சாபி 18.சமஸ்கிருதம் 19.சந்தாளி மொழி 20.சிந்தி 21.தெலுங்கு 22.உருது. ஆகிய 22மொழிகள் இந்தியாவின் அலுவல் மொழிகளாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றன.

ஹிந்தி தங்கள் தாய்மொழி என்பதற்காக, நடுவண் அரசில் அதிகாரத்தில் இருந்தவர்கள், ஹிந்தி மொழிக்கு அதிக முதன்மைத்துவம் கொடுக்கும் வகையில், தொடர்ந்து பல்வேறு வகைகளில் செயல்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில்தான், ஹிந்தி பேசாத மாநில மக்களுக்கு ஹிந்தியை கற்பிக்க ஆசியர்களை நியமிப்பதற்காக நடப்பு வரவு-செலவுத் திட்டத்தில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் மக்கள் தொகை: 136.23 கோடி, (இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 17.74 விழுக்காடு ஆகும்.) இந்தியாவில் ஹிந்தியைத் தாய்மொழியாக் கொண்டவர்கள் 18.2கோடி. ஏறத்தாழ 13 விழுக்காட்டினர். ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும், ஏறத்தாழ சம எண்ணிக்கையில் உள்ளனர். வங்காள மொழி பேசுகிறவர்கள் மீதும் ஹிந்தி திணிக்கப் பட்டு வருகிறது. 

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 13 விழுக்காட்டினர் பேசும் ஹிந்தி மொழியை 87 விழுக்காடு உள்ள மற்ற மொழியினர் மீது திணிக்க இந்திய வரவு-செலவுத் திட்டத்தில் ஐம்பது கோடி ஒதுக்கப் பட்டிருக்கிறது. 

பிரிட்டிஷ் இந்தியாவில், ஆங்கிலேயர்கள் அனைத்து மொழிகளுக்கும் சமமான முதன்மைத்துவம் அளித்தது வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் உண்மையாகும். இந்தியாவில் முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்களில் கூட தமிழ், தெலுங்கு, உருது, பெங்காலி, பர்மிஸ், குஜராத்தி, கன்னடம் மற்றும் கெய்தி ஆகிய எட்டு மொழிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. 

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அச்சடிப்பட்ட ஒரு ரூபாய் முதல் 500 ரூபாய் வரையில் எந்த ரூபாய் தாளிலும் ஹிந்தி மொழி அச்சிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இந்தியா விடுதலை பெற்ற பின்னர் தான் ரூபாய் தாள்களில் ஹிந்தி மொழி அச்சடப்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு  ஹிந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் வரலாறு காணாத போரட்டத்தை நிகழ்த்தி, தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை நிலை நிறுத்தியது. ஹிந்தித் திணிப்பு திட்டம் திரும்பப் பெறப்பட்டது. 

தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஹிந்தியை நாடு முழுவதும் திணிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,207.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.