Show all

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக உழவர்களுக்கு ஆதரவாக உ.பி., அரியானா உழவர்கள்

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 200க்கும் மேற்பட்ட உழவர்கள் அதிரச்சி மரணம், தற்கொலை என உயிரிழந்துள்ளனர்.  எனவே தமிழகத்தில் உழவர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட உழவர்கள் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 14 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று எலிக்கறி தின்னும் போராட்டம் நடத்தினர்.

     தமிழக உழவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட உ.பி. மாநில பாரத் கிசான் யூனியன் உழவர் அமைப்பினர் கூறுகையில், இந்தப் போராட்டம் தமிழக உழவர்களுக்கானது மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து உழவர்களின் போராட்டம். இதற்கு நடுவண் அரசு சரியான தீர்வு காணவில்லை என்றால் நாடு தழுவிய உழவர்களின் போராட்டமாக மாறும் என்று எச்சரித்தனர்.

     போராட்டத்தில் டெல்லியின் பக்கத்து மாநிலங்களான உ.பி., அரியானா ஆகியவற்றில் இருந்து ஏராளமான உழவர்கள் வந்து கலந்து கொண்டனர்.

      டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜந்தர் மந்தருக்கு பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பதாகைகள் ஏந்தியபடி வந்தனர்.

     டெல்லியில் நடக்கும் உழவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் காமராசர் சிலை அருகே தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று காவல்துறை தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முன்பாக நேற்று கல்லிக்குடி, அடிப்புதுச்சேரி, காணூர் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.     அரியலூர் அரசு கலைக்கல்லூரி முன்பு மாணவ, மாணவியர்கள் தங்களது வகுப்புகளைப் புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து வீடு திரும்பினர். இதுபோல் தமிழகத்தில் பல இடங்களில் உழவர்ளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

     தமிழக உழவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருவதால், தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, நாடாளுமன்ற துணை பேரவைத்தலைவர் தம்பித்துரை ஆகியோர் நேற்று இரவு டெல்லி சென்றனர். இன்று காலையில் உழவர்களையும், நடுவண் அமைச்சர்களையும் சந்தித்துப் பேசுகின்றனர்.

     தமிழக உழவர்கள் தலைநகர் டெல்லியில் கடந்த 2 வாரங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டம் நடத்துவதால் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. நடுவண் அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராதா மோகன் சிங் உள்ளிட்டவர்களை சந்திக்க நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்தபோதிலும், நடுவண் அரசு கண்துடைப்பு அளவுக்கே விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

     நாட்டில் வேளாண்மை அழிந்தால் நாடும் பேரழிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படும் என்றும், நடுவண், மாநில அரசுகள் விழித்து எழ வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கண்ணீருடன் கூறினர். அவர்களின் கண்ணீர் குரல்களைக் கேட்டு வேளாண்மையைக் காக்க வேண்டும் என்று மாணவர்கள் ஆவேசமாக முழக்கம் எழுப்பினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.