1,700 ஏழைமக்கள் வங்கி கணக்குகளில் தலா ரூ.10 ஆயிரம் வைப்பு செய்யப்பட்ட தகவல் கசிந்தது. அதையொட்டி தேர்தல் ஆணைம், வருமான வரித்துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. 20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தலையொட்டி ஏழைமக்கள் வங்கி கணக்குகளில் ஒரு அரசியல் கட்சி வேட்பாளர் சார்பில் தலா ரூ.10 ஆயிரம் வைப்பு செய்யப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பு குழுவுக்கு புகார்கள் வந்தன. உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள 1,700 ஏழைமக்கள் வங்கி கணக்குகளில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் கடந்த சில நாட்களில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவினர் இதனை கண்டுபிடித்துள்ளனர். இது ஏதாவது ஒரு அரசியல் கட்சி வேட்பாளர் தனக்கு ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு கொடுத்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக விசாரணை அமைப்புகளிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளது. அதேபோல சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கும் இந்த பணப்பரிமாற்றம் தொடர்பான விவரங்களை அறிக்கையாக பதிகை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது எந்தக் கட்சி வேட்பாளரின் பணம் என்பது தேர்தலுக்கு முன்னதாக கண்டுபிடிக்கப் பட்டு விடுமா என்பது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பொது மக்கள் சிலரிடம் இது தொடர்பாக கருத்து கேட்டதில், நம்ம கணக்குக்கு பணமும் வர வேண்டாம், வாதம் வழக்குகள் என்று அலையவும் வேண்டாம் என்கின்றனர். மற்ற சிலர் நமக்கெல்லாம் இந்த மாதிரியான ஆகூழே கிடையாதுங்க என்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,111.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.