01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் கடந்த 8 நாட்களாக கொட்டித் தீர்த்த பெருமழைக்கு இதுவரை 324 பேர் பலியாகி உள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் வருத்தத்துடன் கீச்சில் பதிவு செய்துள்ளார். உதவும் உள்ளங்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அளித்து கேரள மக்களுக்கு உதவலாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாகப் பெருமழை பெய்து வருகிறது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 16 ராணுவ பட்டாலியன்கள், 28 எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவுகள், 39 பிரிவு தேசிய பேரிடர் மீட்புப்படையினர், 42 கடற்படை குழுவினர் ஆகியோர் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதலாக 14 குழு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வர உள்ளனர். இதில் பத்திணம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 52 ஆயிரத்து 856 குடும்பங்கள் வெள்ளம், மழையால் பாதிக்கப்பட்டு வீடு, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அதிகாரப்பூர்வ கீச்சு பக்கத்தில் புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் கேரளத்தில் கடந்த 10 நாட்களாகப் பெய்து வரும் பெருமழைக்கு இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் உள்ள 80 அணைகள் நிரம்பித் திறந்துவிடப்பட்டுள்ளன. 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்குவதற்காக 1,500 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தாரளமாக உதவி செய்யுங்கள். முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி உதவலாம் என்று தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,882.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



