01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பெருமாள் கோவில் காலனியில் வசிப்பவர் முத்துராஜா அகவை40 எடப்பாடியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா அகவை40 இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 8 அகவையில் ஒரு மகன் உள்ளான். சந்தியாவுக்கு தனது பணியிடத்தில் நட்புகள் அதிகம். பணி முடிந்து வீட்டுக்கு வந்தாலும் கையில் செல்பேசியை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே இருப்பாராம். யாரும் அழைப்பு விடுக்கா விட்டாலும் தானே அழைத்து பல மணி நேரம் பேசுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்தால் பையனை கவனி, மற்ற வேலைகளை கவனி, அதிக நேரம் செல்பேசியல் பேசுவதை நிறுத்து என்று கணவர் முத்துராஜா பலமுறை கண்டித்தும் சந்தியா அதை கண்டுக்கொள்ளவில்லை. அவரது வேண்டுகோளுக்கு செவி சாய்க்காத சந்தியா செல்பேசி அழைப்புகளுக்கு செவி சாய்த்ததால் கடும் ஆத்திரமடைந்த கணவன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என் பேச்சை கேட்காமல் செல்பேசி பேச்சுக்கு காது கொடுக்கிறாயா என்று ஆத்திரத்தில் அருகிலிருந்த அரிவாள் மனையை எடுத்து காதை வெட்டியுள்ளார். இதில் சந்தியாவின் காது துண்டானது. கன்னத்திலும் காயம் ஏற்பட்டது. கணவன் மனைவி சண்டையில் ஏற்பட்ட கூச்சலை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கணவன் அரிவாள் மனையுடனும், மனைவி காதில் வெட்டுக்காயத்துடன் ரத்தம் சொட்ட கையில் செல்பேசியுடன் நிற்பதை பார்த்து மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காது வெட்டுப்பட்ட மனைவி சந்தியா அளித்த புகாரில் எடப்பாடி காவல் துறையினர் கணவர் முத்துராஜாவை கைது செய்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,882.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



