அணு எரிபொருள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு நியமனத்திற்கான முதல்படித் தேர்வுக்கு தமிழ்நாட்டில் ஒரு மையமும் அமைக்கவில்லை. தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிப்பதா? என்று ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் பாராளுமன்ற உறுப்பினர் கண்டன மடல் அனுப்பியுள்ளார். 15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய அரசின் தேர்வுகளில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டி உள்ளார். உயர்கல்வி விழுக்காட்டிலும், எண்ணிக்கையிலும் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள ஒரு மாநிலத்தை ஒன்றிய அரசு இப்படித்தான் அணுகுமா? என்று அவர் கேட்டுள்ளார். அணுசக்தி துறை தலைவர் முனைவர் தினேஷ் சிறி வஸ்தவாவுக்கு மடல் எழுதியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: அணு எரி பொருள் வளாகம் கடந்த திங்கட் கிழமை அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி அணு எரிபொருள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு நியமனத்திற்கான முதல்படித் தேர்வு 23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123 அன்று (07.07.2021) நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத இந்தியா முழுவதும் 6 மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு மையம் கூட தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வர்கள் பெங்களூரில் போய் தேர்வெழுத வேண்டும். தனித்திரு என்கிறது அரசின் கோவிட் வழிகாட்டுதல். டெல்டா பிளஸ் எச்சரிக்கை வேறு. ஆனால் மாணவர்களை மாநிலம் விட்டு மாநிலம் அலையவிடுகிறது ஒன்றிய அரசு. கோவிட் பெருந் தொற்றின் இரண்டாவது அலை முடியவில்லை. நேற்று கூட கர்நாடகா முழுவதும் 2576 புதிய தொற்றுகள், 93 மரணங்கள். இவற்றில் பெங்களுர் 20விழுக்காடு எனில் எப்படி மன அமைதியோடும், உரிய கவனத்தோடு தேர்வர்கள் அலைந்து தேர்வு எழுத முடியும். டெல்டா பிளஸ் எச்சரிக்கைகள் வேறு விடுக்கப்படுகின்றன. உயர்கல்வி விழுக்காட்டிலும், எண்ணிக்கையிலும் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள ஒரு மாநிலத்தை ஒன்றிய அரசு இப்படித்தான் அணுகுமா? தொடர்ந்து ஒன்றிய அரசின் தேர்வுகளில் எல்லாம் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதும் நாம் குரல் எழுப்புவதும் தொடர் கதையாக உள்ளது. தலைமைஅமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள அணுசக்தித்துறை தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும். தமிழகத்திலும் ஒரு தேர்வு மையம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அணுசக்தி துறை தலைவர் டாக்டர் தினேஷ் சிறி வஸ்தவா அவர்களுக்கு மடல் எழுதியுள்ளேன். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.