நீட் தேர்வு பாதிப்பை ஆராய அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து பாஜக தமிழ்நாட்டுக் கிளை வழக்கு தொடர்ந்திருக்கிறது. 15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை எதிர்த்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ளது. மாணவர்கள் 12 ஆண்டுகள் படித்து அதில் பெரும் மதிப்பெண்களை திறமையின் அளவுகோளாக கருதாமல் நாடு முழுவதும் நீட் தேர்வு வைப்பது, நீட் பயிற்சி மையங்களுக்கே பயன்பாடு என்று தெளிவுபடுத்தி எதிர்ப்பு தொடர்கிறது. வசதியானர்வர்கள் மட்டுமே நீட் பயிற்சிக்கு செல்ல முடியும் என்பதுடன், அவர்களே மருத்துவர்கள் ஆகும் நிலை உள்ளது என்றும், இந்த முறை கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்றும் தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கான காரணம் தொடர்ந்து தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றவும், கிராமங்களில் மருத்துவ சேவையாற்றவுமான மருத்துவர்களுக்குப் பஞ்சம் ஏற்படும் தெரிவிக்கப்படுகிறது. ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வு நடத்துவதில் பிடிவாதம் காட்டி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழ்நாட்டு சட்டசமன்றத்தில் கடந்த அதிமுக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தையும் குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிவிட்டார். இந்நிலையில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு நீக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்த திமுக, தற்போது ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது. நீட் தேர்வை நீக்குவது தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழக அரசு. சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்று ஆராய, ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் தலைமையில், 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்தக் குழு இன்றுடன் 3 முறை கூடி ஆலோசனை நடத்தி உள்ளது. செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் ஏ.கே. ராஜன், 86,342 பேர் நீட் தேர்வு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என பெரும்பாலோர் கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வுக்கு ஆதரவாக சிலரின் கருத்துகள் வந்துள்ளன. நீட் குறித்து பலரும் விரிவான கருத்துகளை தெரிவித்துள்ளனர். அனைத்து கருத்துக்களும் ஆராயப்பட்ட பிறகே அறிக்கை பதிகை செய்யப்படும். ஒரு மாதத்துக்குள் ஆய்வை முடிக்க முயற்சிக்கிறோம். ஆய்வு முடியாவிட்டால் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது என்றார். இந்நிலையில் பாஜக தமிழ்நாட்டுக் கிளையின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து கட்சிளும் வலியுறுத்தி வருகின்றன. வடஇந்தியக் கட்சியின் கிளை அமைப்பாக தமிழ்நாட்டில் செயல்படும் பாஜக மட்டும் நீட்டுக்கு ஆதரவு நிலையை வலிந்து பாராட்ட வேண்டிய கடப்பாடு கொண்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.