17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காங்கிரஸ் - ஆங்கிலேயருக்கு எதிரான மக்களின் விடுதலை உணர்வுகளை அறுவடை செய்தது. புதிய சிந்தனைகளை விதைக்கும் முயற்சியின்மையால் படிப்படியாக தேய்ந்து வருகிறது. திமுக - தமிழக மக்களின் தனி அடையாள மீட்புணர்வுகளை குழுவாக தட்டியெழுப்பி வளர்ந்த கட்சி. அதிமுகவின் எழுச்சிக்குப் பின் கட்சியைக் காப்பாற்றுவதே கொள்கையாகிப் போனதால் அந்தச் செயல்பாடுகளால் மட்டும் நின்று கொண்டிருக்கிறது. நடுவண் அரசில் அமரும் கட்சிகளுக்கு, தங்கள் கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள தமிழக அடிப்படை உரிமைகள் பலவற்றை அடகு வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக - திமுகவின் மீது நம்பிக்கையின்மையில் தொடங்கி, எம்ஜியார் என்கிற பிரபலத்தால் படிப்படியாக வளர்ந்தது. செயலலிதா அவர்களின் சிலபல அதிரடிகளால் தொடர்ந்து தக்க வைக்கப் பட்டது. எம்ஜியாருக்குப் பின்னால் செயலலிதா என்றால் செயலலிதாவிற்கு பின்னால் சசிகலா என்று இயல்பாக தலைமையேற்றிருக்க வேண்டிய சசிகலாவை, செயலலிதா இருந்தவரை, சசிகலாவிற்கு அடிபணிந்து இயங்கியவர்கள், சசிகலா செயலலிதாவிற்கு எதிரானவர் போல் கற்பித்து, செயலலிதாவின் தவறுகளுக்கும் சசிகலாவே காரணம் என்று கற்பிக்க முயன்று, பாஜகவின் துணையோடு வலிந்து உருவாக்கப் பட்ட சிக்கல்களில் பிணைத்து, செயலலிதாவால் அங்கிகரிக்கப் பட்ட மற்றொருவர் என்கிற அடையாளத்தை மூலதனமாக்கி, காய் நகர்த்திய பன்னீர் செல்வத்தால் அதிமுக முழுமையாக மக்கள் செல்வாக்கு இழந்து நிற்கிறது. ஒற்றை மனிதனாக அதிமுகவை இயல்பு நிலைக்குத் திருப்ப தினகரன் களம் இறங்கியிருக்கிறார். அதிமுகவை மீட்டெடுப்பாரா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும். பாஜக - திமுகவின் வீழ்ச்சியில் அதிமுக எழுந்தது போல் காங்கிரஸின் வீழ்ச்சி பாஜகவிற்கு சாதகமானது. தமிழகத்தில் பாஜகவிற்கு கொள்கை அடிப்படையில் எந்த அங்கிகாரமும் இல்லை; இனி எப்போதும் இருப்பதற்கான கொள்கையையும் பாஜக கொண்டிருக்கவில்லை. தேமுதிக - விஜய்காந்த் என்கிற தனிமனிதரின் வீரியமான செயல்பாடுகளால் வளர்த்தெடுக்கப் பட்ட கட்சி. அவர் மட்டுமே அந்தக் கட்சிக்கான படைபலம் என்பதால் அவரின் உடல்நலக் குறைவு அந்தக் கட்சியைப் பலவீனப் படுத்தியிருக்கிறது. மதிமுக - வைகோ என்கிற மாமனிதர். நல்லவர்; கள்ளம் கபடம் இல்லாதவர். தமிழ் மக்கள் எதிர்பார்க்கிற நிருவாகத் திறமையை வளர்த்துக் கொள்ளாததால், இரண்டாவது இடத்திலேயே இயங்கி பழக்கப் பட்ட இவரால், நிருவாகத் திறமையை வளர்த்துக் கொள்ளவும் முடியாது என்கிற காரணத்தால் கட்சி இருந்து கொண்டு மட்டும் இருக்கிறது நாம்தமிழர்கட்சி - எல்லா அடிப்படைகளோடும் மிகமிக மெதுவாக வளர்ந்து கொண்டிருக்கிற இயக்கம். தட்டுத் தடுமாறாதிருக்குமானால், திமுக எந்த நோக்கத்திற்காக தமிழ் மக்களால் தூக்கி விடப் பட்டதோ அதனினும் சிறப்பாக தமிழர்களுக்கு அரணாய் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வெற்றி சீமான் கையில் இருக்கிறது. ரஜினி தொடங்கப் போகும் கட்சி - பாஜகவின் மற்றொரு வடிமாகவே ரஜினியின் அடிப்படை கொண்டுள்ளது. தமிழக அடிப்படைகளுக்கு அவருடைய அடிப்படைகள் எதிரானவை. தமிழர்கள் உழைப்பாளிகள்! கடவுள் மீது பாரத்தைப் போட்டு விட்டு ஓடிக்;;;; கொண்டேயிருப்பார்கள்! மற்றவர்கள் உழைப்பைச் சுரண்டும் ஆன்மீக ஆராய்ச்சிகள் எல்லாம் தமிழர்களுக்கு ஒத்து வராது. ரஜினி தன் கட்சியை பாஜகவிற்கு மாற்றாக அகில இந்திய அளவில் முன் வைப்பாரேயானால் மோடி இடத்திற்கு அவர் உறுதியாக வரமுடியும் ஆனால் தமிழகத்தில் ஒரு ஆணியும் பிடுங்க முடியாது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,654
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



