Show all

ஆதாயமா, விரயமா! இந்தியா மேற்கொள்ள முயலும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள்

அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து, நடுவண் அரசு மேற்கொள்ளும் பெட்ரோல் வணிகத்தில், உற்பத்தி நாடுகளை விடவும், சந்தைப்படுத்தும் வணிக நிறுவனங்களை விடவும், இந்திய அரசுக்கு இரட்டிப்பு ஆதாயம் இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனவே இந்தியா மேற்கொள்ள முயலும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் இந்தியாவிற்கு விரயமே.

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து, நடுவண் அரசு மேற்கொள்ளும் பெட்ரோல் வணிகத்தில், உற்பத்தி நாடுகளை விடவும், சந்தைப்படுத்தும் வணிக நிறுவனங்களை விடவும், இந்திய அரசுக்கு இரட்டிப்பு ஆதாயம் இருப்பது  புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் உண்மையாகும்.

ஆனால், நமது நாட்டிலேயே பெட்ரோல் என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடும் முயற்சியாக, சிறு சிறு அளவுகளில் ஹைட்ரோகார்பன்கள் புதைந்திருக்கும் நிலப்பரப்புக்களை பாஜக அரசு கண்டுபிடித்திருக்கிறது. சிறிய அளவில் இருப்பதால் அதை எடுக்க செலவு அதிகம், எனவே அரசு அதை தனியார் நிறுவனத்திடம் ஏலத்திற்கு விடுகிறது. மொத்தம் 31 நிலப்பகுதிகள் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியும், மற்றும் காரைக்கால் பகுதியும் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

அதே போல அசாம் மாநிலத்தில் 11 இடங்களும், ஆந்திர மாநிலத்தில் 4 இடங்களும், ராஜஸ்தானில் 2 இடங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் குஜராத் மாநிலத்தில் 5 இடங்கள் என இதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் மீண்டும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு நடுவண் பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  

இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க. எரிவாயு உற்பத்திக்கான முதலீட்டை அதிகப்படுத்த மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்க, எரிபொருட்கள் இறக்குமதியை குறைக்க என்று கார்ப்பரேட்டுகளுக்கு ஆதாயமான சாரங்களை பாஜக அரசு முன்வைக்கின்றது. 

இந்தத் திட்டத்தை இயற்கை ஆர்வலர்கள், வேளாண் பெருமக்கள் எதிர்க்கிறார்கள். விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்ற கொதிக்கின்றார்கள். நிலத்தடி நீரும், நீர் நிலைகளும் அழிந்து போகும். உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். செடி கொடிகள், மரம் மட்டைகள் மறைந்து போகும். கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகும். என்று பட்டியல் இடுகின்றனர். 

ஹைட்ரோகார்பன் நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்றவற்றை சுவாசிப்பதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். சிறுநீரகங்கள், மூளை, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். ஹைட்ரோகார்பன்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மை உடையவை. மூடிய அறைகளுக்குள் இவை எரிந்தால், மிகவும் ஆபத்தான கார்பன்-மோனாக்சைடு உருவாகும். இம்மாதிரியான காரணங்களால்தான் எண்ணெய்க் கிணறுகளில் வேலை செய்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைவாக காணப்படுகிறது. 

இது கார்ப்பரேட்டுகளுக்கும் மட்டுமான ஆதாயம் மட்டுமே என்பதை நடுவண் பாஜக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், இயல்அறிவுத் (சயின்ஸ்) திட்டங்களை நிறைவேற்றும்போது இயற்கைக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே சுற்றுச் சுழல் ஆர்வலர்கள் அரசின் முன் வைக்கின்ற கோரிக்கையாக உள்ளது.

இது மாதிரி எந்தப் பாதிப்புகளும் இல்லாமல் பெட்ரோல் நாடுகளில் இருந்து வாங்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை 17.79 ரூபாய் மட்டுமே. இந்தத் தொகைதான் பெட்ரோல் உற்பத்தி நாடுகளுக்குப் போகிறது. அந்தத் தொகையில்தாம், அந்த நாடுகள் தம் மக்களுக்கு சொத்துவரி, வருமானவரி ஆகிய வரிகள் இல்லாமல் மக்களைச் செல்வச் செழிப்போடு வைத்திருக்கிறது. அந்த நாடுகளுக்கு வேலைவாய்ப்பு நாடிச் செல்லும் அயலவர்களுக்கும் சம்பளமாக வாரிவாரி வழங்குகிறது.

இவ்வாறாக இறக்குமதி பெட்ரோல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அடக்கவிலை ரூ.17.79 மட்டும். அந்த பெட்ரோலை சந்தைப்படுத்தும் வகைக்கான செலவுகள் ரூ17.46 மட்டும். மீதமுள்ள 37.89 ரூபாய் நடுவண் அரசுக்கு செலுத்தப்படும் வரிகள்.

ஆக பெட்ரோல் இறக்குமதி என்பது, பெட்ரோல் உற்பத்தி வகை பாதிப்புகள் எதுவும் இல்லாத இலாபகரமான ஆதாயமே. ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே ஆதாயம் அளிக்கிற இந்தியாவின் இயற்கை வளத்தை சீரழிப்பதற்கான திட்டங்கள். இதனை நடுவண் பாஜக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். கொள்ளாவிட்டாலும் மக்கள் புரிந்து கொண்டால் அவர்களுக்கு புரிய வைத்து விடலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.