Show all

தயவு கூர்ந்து ஏப்ரல் 14க்குப் பிறகும் தொடர வாய்ப்பளித்து விடாதீர்கள்! மக்கள் உயர்ந்த விலை கொடுத்து, செயல்படுத்தும் ஊரடங்கு என்னும் நடவடிக்கையை

இன்னும் பத்து நாட்களே ஊரடங்கை முடித்துகொள்வதற்கான காலமாகும். மக்கள் மிகமிக அதிக விலைகொடுக்கும் அந்த ஊரடங்கை முடித்துக் கொள்ள நடுவண்அரசு, விளக்கணைத்தேற்றல் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. நம்ம தமிழக அரசின் விஜய பாஸ்கர் மற்றும்  பீலா இரேஜஷ் போல நடுவண் அரசின் நலங்குத் துறை அமைச்சரையும் நலங்குத் துறை செயலாளரின் பெயர்களை மட்டுமாவது இந்திய மக்களுக்கு தெரிவியுங்கள். 

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு நடுவண் அரசு 21நாட்களுக்கு ஊரடங்கை அறிவித்து, அவ்வப்போது மக்களுக்கு பொழுது போக வேண்டும் என்பதற்காக கைத்தட்டுதல், மணிஅடித்தல், விளக்கை 9 நிமிடங்கள் அணைத்து, ஏற்றி இந்தியா முழுவதும் இருக்கிற பொது மக்களுக்கு மகிழ்ச்சியும், மின்சார வாரிய ஊழியர்களுக்கு கடுமையான அறைகூவலையும் கொடுத்து வருகிறது. 

இணையத்தில் கை வலிக்க வலிக்க பகடிப்படங்களை வெளியிட, தகவல் பரிமாற்றத் துறையில் இந்தியாவை உலகின் முதன்மை நாடாக இளைஞர்களுக்கு சிறந்த பயிற்சியை அளித்து வருகிறது. 

இளைஞர்கள் வெளியிடும் கருத்துக்களில் கொஞ்சம் பகடியும், தீயும் குறைவாக இருக்குமானல் எச்.இராஜா, எஸ்வி.சேகர், துக்ளக் குருமூர்த்தி  போன்றவர்களைக் களம் இறக்கி சூடேற்றும் முயற்சியைச் சிறப்பாக செய்து வருகிறது. 

தமிழக அரசு இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி கொரோனா பரவலைத்தடுப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. முதலாவதாக குடும்ப அட்டைக்கு ஆயிரம் கொடுப்பது- வருமானத்தை தொலைத்து விட்டு வீட்டில் இருக்கும் அன்றாடக் கூலிகளுக்கு குறைந்த பட்ச பயன் உள்ளதாக இருக்கும். 

இரண்டாவதாக அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் கொரோனாவிற்கு தனிப்பிரிவு ஒதுக்கி நோயாளர்களைக் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா நோய் தனக்கு வந்துள்ளதாக தெரிவித்தால் அரசு கைதியைப் போல் பிடித்துக் கொண்டு போய் விடும் என்று நிறைய பேர்கள் அஞ்சுகிறார்கள். அதனாலேயே கொரோனாவை மறைத்து தப்பி தப்பி ஓடுகின்றார்கள்.

நடுவண் அரசு ஆரோக்கிய சேது என்ற ஒரு செல்பேசி செயலியைக் கொண்டு வந்திருக்கிறது. அதன் மூலம் நமக்கு அருகமையில் இருக்கும் கொரோனா நோயாளியை அடையாளம் கண்டு ஒதுங்கலாம் என்னும் சிறப்பான நோக்கத்தைச் செயல்படுத்துவதற்காக. ஆனால் நாம்தான் அதில் நம்மை கொரோனா நோயாளி என்றும், கொரோனா நோயாளி இல்லை என்றும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது அந்தச் செயலியில் உள்ள குறையாக அறிய முடிகின்றது. 

அந்தச் செயலியை கொரோனா இல்லாதவர்கள் பதிவிறக்க அஞ்சுகிறார்கள். தான் கொரோனா நோயாளிக்கு நெருக்கமாக இருப்பதை கண்டுபிடிப்பதற்கும் இந்தச் செயலியைப் பயன்படுத்தும் தானே அரசு. நான் தவறுதலாகக் கொரோனா இருப்பவரோடு தொடர்புக்கு வந்து விட்டால் உடனடியாக என்னைக் குறைந்த பட்சம் 21 நாட்கள் தனிமைப்படுத்த அரசு தூக்கிக் கொண்டு போய்விடுமே என்று அஞ்சி அந்தச் செயலியை தரவிறக்கம் செய்ய மறுக்கிறார்கள். இப்படி மக்களுக்கு அச்ச உணர்வு இருந்தால் அந்தச் செயலியை எப்படிப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரமுடியும் என்ற கேள்வி எழுகிறது.  

அப்படியானால் மக்கள் அச்சம் இல்லாமல் தாங்களுக்கு தோதுப்படும் மருத்துவ மனையில், குடும்பத்தாருக்கு தான் எங்கேயிருக்கிறோம் என்று தெரியும் வகையாக சேர அரசு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் அதற்கான வாய்ப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. 

எந்தெந்த மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற, மக்கள் தேடலுக்கு விடைவழங்கும் வகையில், தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் தமிழகம் முழுவதும் உள்ள 110 தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனாவற்கு சிகிச்சை  வழங்கும் தனியார் மருத்துவமனைகள்:- நமது இன்னொரு செய்தியில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும், கொரொனா பரிசோதனையில் இன்னும் தமிழக அரசில் சுணக்கம் இருக்கிறது. அன்றாடம் மிகக் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்ய தமிழகஅரசிடம் கருவியும் வாய்ப்பும் இருக்கிறது. அதை அதிகப்படுத்த தமிழக அரசுக்கு நடுவண் அரசு உடனடியாக ஒத்துழைக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் நடைமுறையில் இருக்கிற ஒட்டுண்ணி மருந்தான ஐவர்மெக்டின் என்ற மருந்து 48 மணி நேரத்திலேயே சிறப்பான பலன் அளிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு இந்த மருந்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து குணப்படுத்துதலை அதிகமாக்கினால் இந்த ஊராடங்கிற்கான தேவை இல்லாமல் போய்விடும். உண்மையில் ஊரடங்கு என்ற பெயரில் நாம் 21நாட்கள் கொரோனா நுண்ணுயிரிக்கு நம்மை மறைத்துக் கொள்ளும் நடவடிக்கையையே முன்னெடுக்கிறோம். இது மிகமிக விலைஉயர்ந்த பலன் குறைந்த நடவடிக்கை ஆகும். அந்த விலையைக் கொடுப்பதும் அரசு அல்ல மக்களே.

இன்னும் பத்து நாட்களே ஊரடங்கை முடித்துகொள்வதற்கான காலமாகும். மக்கள் மிகமிக அதிக விலைகொடுக்கும் அந்த ஊரடங்கை முடித்துக் கொள்ள நடுவண்அரசு இதுபோன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. தமிழக அரசின் முயற்சிகள் அனைத்துக்கும் வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும். நிறைய மருத்துவத் துறையினரை பணியில் அமர்த்தும் தமிழக அரசின் முயற்சிக்கு சட்டப்பாடாகவும், பொருளாதார அடிப்படையிலும் நடுவண் அரசு கடுமையாக ஒத்துழைக்க வேண்டும். 

மோடியை மட்டும் கொரோனாவிற்கு எதிராக களமிறக்கினால் தனிமனிதர் என்ன செய்வார்? இதுபோன்ற சித்து விளையாட்டுகளில்தான் ஈடுபடுவார். நம்ம தமிழக அரசின் விஜய பாஸ்கர் மற்றும்  பீலா இரேஜஷ் போல நடுவண் அரசின் நலங்குத் துறை அமைச்சரையும் நலங்குத் துறை செயலாளரின் பெயர்களை மட்டுமாவது இந்திய மக்களுக்கு தெரிவியுங்கள். தயவு கூர்ந்து மக்கள் கொடுக்கும் உயர்ந்த விலையில் ஊரடங்கு என்னும் கண்ணாமூச்சி விளையாட்டை ஏப்ரல் 14க்குப் பிறகும் தொடர வாய்ப்பளித்து விடாதீர்கள்! 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.