Show all

கொண்டாடத்தக்கதுதானா என்பதே கேள்வி! ரூ.1,052 கோடி சொத்துக்கள் முடக்கம்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

நடப்பு நிதியாண்டில், வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.1,052 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கொண்டாடத்தக்கதுதானா என்று ஆராய்வோம்.

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரி ஏய்ப்பாளர்களின் ரூ.1,052 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளதாக தனது பெருமிதத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். உண்மையில் இது இந்தியாவிற்கான மகிழ்ச்சியா? என்று கணக்கிட்டுப் பார்த்தால் நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் பெருமிதம் கொள்ள வேண்டிய செய்தியே அல்ல. தீர்வு காண வேண்டிய செய்திதான் என்பது புலனாகும்.

நடப்பு நிதியாண்டில், வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.1,052 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு நடுவண் நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் அளித்த பதில்: நடப்பு நிதியாண்டில், வருமான வரித்துறை, 893 நிறுவனங்களில் நடத்திய சோதனையில், வரி ஏய்ப்பு தொடர்பாக, 1,052.79 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 

இதே போன்று கடந்த நிதியாண்டில், 983 நிறுவனங்களில் சோதனை நடத்தி, 1,584 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. வரி ஏய்ப்பு குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரி ஏய்ப்பு தொடர்பான புகார்கள் வரும்போது எல்லாம், சோதனை, பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

நடப்பு நிதியாண்டில் முடக்கப்பட்ட சொத்து மதிப்பு ரூபாய்: 1,052.79 கோடி. 
சொத்துக்குரிய நிறுவனங்கள்: 893
சராசரி ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பு: ரூபாய். 1,17,89,362.00
ஆக நடப்பு ஆண்டில் 893 குறு நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த நிதியாண்டில் முடக்கப்பட்ட சொத்து மதிப்பு ரூபாய்: 1,584 கோடி
சொத்துக்குரிய நிறுவனங்கள்: 983
சராசரி ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பு: ரூபாய். 1,61,13,937.00
ஆக கடந்த ஆண்டில் 983 குறு நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் வருமான வரிவரம்பை ஐந்து இலட்சமாக மாற்றியிருந்தாலே இந்த 1876 நிறுவனங்கள் சட்ட சிக்கல் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்திருக்கும். 

இந்த 1876 குறு நிறுவன முதலாளிகளைக் குற்றவாளிகள் ஆக்கி, அவர்கள் சொத்துக்களை முடக்கி, இந்தியாவின் தொழில் வளர்ச்சியை பாதித்த இவர்களால்- கீழ்கண்ட பெருங்கதையாடலில் வெட்கப்பட வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது.  

நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் உத்தரவாத மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய நிலையில், அமெரிக்காவில் நீரவ் மோடி நிறுவனத்தின் திவால் வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 27 இலட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 20,27,70,000.00) செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

அண்மையில், தகவல்பெறும் உரிமை சட்டத்தின் மூலம், கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கிகளில் எவ்வளவு தொகை மோசடி நடந்துள்ளது என்ற விவரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் மூலம் பெறப்பட்டது. அதில் கிடைத்த அதிர்ச்சியளிக்கும் வகையிலான தகவல்: அதிர்ச்சியளிக்கும் வகையில் சராசரியாக ஆண்டுக்கு 4,546 வழக்குகள் மூலம் 16,107 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதையெல்லாம் வசூலித்து பெருமிதம் கொள்ள வேண்டிய இந்தியாவின் மாண்புக்குரிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்- 1876 குறு நிறுவன முதலாளிகளைக் குற்றவாளிகள் ஆக்கி, அவர்கள் சொத்துக்களை முடக்கி, இந்தியாவின் தொழில் வளர்ச்சியை பாதித்த வகைக்காக பெருமிதம் கொண்டிருப்பதில், இந்தியா மகிழ்ச்சி கொண்டுவிட முடியாது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.