அகநானூறும் புறநானூறும்- காந்தர்வமும் பகவத்கீதையும் சருக்கரையும் உப்பும் போல மாறுபட்ட வாழ்க்கை முறைகளைத் தூக்கிப்பிடித்தவை. இருவேறு நெறிகளையும் ஒன்றுபடக் காட்டி குழப்புவது ஹிந்துத்துவா. தமிழர் நெறிகளை மீட்டுருவாக்கம் செய்ய ஒரு தலைவனும் இன்னும் தமிழகத்தில் எழவில்லை. 07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அகநானூறும் புறநானூறும்- காந்தர்வமும் பகவத்கீதையும் சருக்கரையும் உப்பும் போல மாறுபட்ட வாழ்க்கை முறைகளைத் தூக்கிப்பிடித்தவை. அகநானூறும் புறநானூறும் பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே மண்ணில் வாழ்ந்து, “நாடாகொன்றோ, காடாகொன்றோ அவலாகொன்றோ, மிசையாகொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர்; அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்று நிலத்தை குறிஞ்சி, முல்லை மருதம் நெய்தல் பாலை எனத்திருத்தி வாழ்ந்து அறிந்த தமிழர்களின் நெறி. காந்தர்வமும் பகவத்கீதையும் பாலஸ்தீனத்திலிருந்து கிளம்பிய ஒரு குழுவினர் உடன் பயணிக்க முடியாத பெண்களை ஆங்காங்கே திருப்பி அனுப்பிவிட்டு குறைந்த பெண்களோடு, அதிக ஆண்கள் கைபர் போலன் கணவாய் வழியாக நாவலந்தேயத்தின் வட பகுதி கங்கைக் கரையில் வந்து நிலைத்தது வரையிலான நடோடி அனுபவத்தில் கிடைத்த ஆரியர்களின் நெறி. தமிழர் இலக்கியங்களில் வரும் ஒரு காதல் காட்சி: நம் தமிழினத்தின் நாகரிகத்தினைப் படம்பிடித்துக் காட்டும் பாடலிது. இது குறுந்தொகையில் 40 ஆவது பாடல், தலைவனும் தலைவியும் எதிர்பாராமல் சந்திக்கின்றனர். காதலிக்கின்றனர், அங்கே சாதி, மத வேறுபாடில்லை. ஆனால், தலைவிக்கு தலைவன்மேல் ஒரு ஐயம் வருகிறது. இவன் நம்மைப் பிரிந்துவிடுவானோ என்பதுதான் அது! அவளின் இந்த உள்ளக் குறிப்பைக்கூட, அவள் கூறாமலே உணர்ந்து கொள்கின்றான் தலைவன். அவர்கள் கண்ணெதிரே, மழை நீர் மண்ணோடு கலந்து ஓடுகிறது. தலைவியின் அச்சத்தை, எதைச் சொல்லி, எப்படிச் சொல்லித் தெளிவிப்பது? என்று நினைத்தத் தலைவனுக்குக் கண் முன்னே தோன்றும் நீரும் நிலனுமே கைகொடுக்கிறது. “இந்த நிலத்தோடு பிரிக்க முடியாதவாறு மழைநீர் சேர்ந்துவிட்டதல்லவா? அதைப் போன்றதுதான் நம் அன்பும்” என்கிறான் தலைவன். தலைவனின் அன்பு மொழிக்கு முன் தலைவியின் அச்சம் காணாமல் போவது இயல்பு தானே? இதோ பாடல்…. ஆரியர்கள் எட்டுவகை திருமண முறைகளைப் பட்டியல் இடுகின்றார்கள். ஆறாவது வகையான காந்தர்வ திருமணத்தைத்தான் சகுந்தலை செய்திருக்கிறாள்;. விசுவாமித்திரரை மயக்க இந்திரலோக பேரழகி மேனகையை இந்திரன் அனுப்புகிறான்;. அவளும் மயக்கியதுடன் மயங்கியும் விட்டாள். அதனால் அவளுக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது; அதுவே சகுந்தலா என்ற இந்த காவியத்தின் கதைத்தலைவி. மேனகையையும் அவள் குழந்தையையும் விசுவாமித்திரர் கோபத்தில் விரட்டி விட்டார். மேனகை இந்திர லோகம் சென்றுவிட்டாள்; குழந்தையை அப்படியே காட்டில் போட்டுவிட்டு போய்விடுகிறாள்;. சகுந்தல பறவைகள் அந்தக் குழந்தையை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறது. அந்தக் காட்டில் தவம் செய்யும் கன்வ முனிவர் பார்த்து அந்தக் குழந்தையை வளர்க்கிறார்;. சகுந்தல பறவைகள் வளர்த்ததால் அவளுக்கு சகுந்தலா என்ற பெயரை வைக்கிறார்; பருவம் அடைந்த சகுந்தலா காட்டில் உலா வருகிறாள்; அப்போது, அந்த நாட்டு இளவரசன் துஷ்யந்தன் காட்டுக்கு வேட்டைக்கு வந்தவன் இவளைப் பார்க்கிறான்; இவளும் இளவரசனைப் பார்க்கிறாள்;. காதல் மலர்கிறதாம்;. கற்பை இழக்கிறாள்; திருமணம் செய்யும்படி கேட்கிறாள்; அவனும் திருமணம் செய்து கொள்கிறான்; எந்த சாட்சியும் இல்லாமல் நடக்கும் திருமணம்; காந்தர்வ அல்லது கந்தர்வ காதல் திருமணம் இது. இளவரசன் நாடு திரும்புகிறான்; போகும்போது ஒரு மோதிரத்தைக் கொடுத்து, அவன் அடையாளமாக அரண்மனைக்கு வரச் சொல்கிறான்; கர்ப்பமாகிறாள்; கணவனின் நினைவு வருகிறது; படகில் பயணம்; அற்று நீரில் கையை வைத்து விளையாடிக் கொண்டே வருகிறாள்; கையில் அணிந்திருந்த அரச முத்திரை மோதிரம் ஆற்று நீரில் நழுவி விடுகிறது; இவளுக்குத் தெரியவில்லை; அரண்மனைக்கு போகிறாள்; அங்கு கணவன் துஷ்யந்தனை சந்திக்கிறாள்; அவனுக்கு நினைவு வரவில்லை; இவள் யாரென்று தெரியவில்லை; மறுத்து விரட்டி விடுகிறான்; சோகத்துடன் காட்டிற்கே திரும்பி வருகிறாள்; கர்ப்பிணியான சகுந்தலா ஒரு மகனை ஈன்றெடுக்கிறாள்; அவனே பரதன். வாலிபன் ஆகிறான்; வீரம் மிக்கவன்; சிங்கத்தின் வாயைத் திறந்து எத்தனை பற்கள் இருக்கின்றன என்று எண்ணிப் பார்ப்பானாம். சகுந்தலா ஆற்றில் நழுவ விட்ட மோதிரத்தை ஒரு மீன் விழுங்கிவிடுகிறது; அதை ஒரு மீனவன் பிடிக்கிறான்; அதன் வயிற்றில் மோதிரத்தை கண்டு அதை சகுந்தலாவிடம் கொடுக்கிறான்; ஒருநாள், காட்டுக்கு துஷ்யந்தன் வருகிறான்; அங்கு பரதன் சிங்கத்தின் வாய்க்குள் விரலைவிட்டு பற்களை எண்ணிக் கொண்டிருப்பதை பார்த்து அவனை நெருங்கி, பரதனின் கையில் கட்டிய கயிறு அவிழ்ந்து விட்டதை எடுத்து கட்டிவிட்டு, நீ யார் என்று கேட்கிறான்; இந்தக் கயிறை கட்டும் திறமை என் தந்தைக்கு மட்டுமே உண்டு என்று கூறி நீங்கள்தான் என் தந்தை என்று தன் தாயிடம் அழைத்துச் செல்கிறான்; அவளும் கணவனை அடையாளம் கண்டு, கணவனும் மனைவியை அடையாளம் கண்டு, அனைவரும் அரண்மனைக்குச் சென்று அரச வாழ்வை தொடங்குகிறார்கள். இந்த பரதனின் வழி வந்தவர்கள்தான், மகாபாரதக் கதையின் கௌரவர்களும் பாண்டவர்களும் என்று மகாபாரதக் கதையை தொடங்குகிறார்கள். கடந்த இரண்டாயிரத்துக்கு மேலான ஆண்டுகளாக தமிழர் யாரும் இந்த இரு வகை வாழ்க்கை முறைகளையும் பிரித்துப் பார்க்கவில்லை. நம்முடைய வாழ்க்கை முறையை நம்மில் யாரும் தூக்கிப்பிடிக்க முயலவில்லை. தமிழையும் வடமொழியையும் கலந்து எழுதி மணிப்ரவாளம் என்றார்கள். பாஞ்சாலிக்கு கோயில் கட்டினார்கள், கங்கையம்மன் கோயில் எல்லாம் இன்றும் கட்டிக் கொண்டிருக்கிறோம். கோயில்களின் மதில்களில் ஆரியர்களின் காமசூத்திர, கொக்கோக இலக்கியங்களின் காட்சிகளை சிற்பங்களாக்கி வெட்கப்படாமல் நடைபோடுகிறோம். தமிழகத்தைச் சேர்ந்த சன்குழுமத்திற்கு தென்னகம் முழுவதும் சன், சூரியா, உதயா என்று காட்சிமடைகள் இருக்கின்றன. அதிலும் கூட அகநானூற்று காட்சிகளோ, புறநானுற்றுக் காட்சிகளோ, குறுந்தொகை காட்சிகளோ கதையாகவோ காட்சிகளாகவோ முன்னெடுக்கப் படுவதில்லை. மாறாக ஆரிய காந்தர்வம் பகவத்கீதை அடிப்படையான கதைகள் காட்சிகளே இடம் பெறுகின்றன. திராவிட இயங்கங்களும் ஆரியக் கோட்பாடுகளோடு ஊடல் கொள்வதையே தங்கள் கோட்பாடாக முன்னெடுத்ததால் இன்று அவற்றோடு கூடி முயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆம் திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் எடப்பாடியார் நேற்று விநாயகர் சதுர்த்தியை வீட்டில் இருந்தே கொண்டாடினாராம். திமுக தலைவர் ஸ்டாலினும் நாங்களும் ஹிந்துக்கள்தாம் என்று சொல்லத் தலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழர் நெறிகளை மீட்டுருவாக்கம் செய்ய ஒரு தலைவனும் இன்னும் தமிழகத்தில் எழவில்லை.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
பாடலைப் பாடியவர்- செம்புலப் பெயல்நீரார்
குறிஞ்சித்திணைப் பாடல்.
1. பிரம்மா: வேதம் கற்ற யோக்கியனுக்கு, பெண்ணின் தகப்பனார் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது இந்த வகை.
2. தெய்வ: மதகுருவுக்கு, பெண்ணை ஆபரணங்களுடன், பெண்ணின் தகப்பனார் திருமணம் செய்து கொடுப்பது.
3. அர்ஷ: ரிஷிகளுக்கு பெண்ணைக் கொடுப்பது; ரிஷியிடம் பசுமாட்டை பெற்றுக் கொண்டு பெண்ணின் தகப்பன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது;
4. பிரஜா பத்தியா: மணமகனுக்கு, மணமகளுக்கும் வாழ்த்துச் சொல்லி, நீங்கள் இருவரும் உங்கள் வாழ்வின் கடமைகளை செய்துவாருங்கள் என வாழ்த்தி பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது.
5. அசுர: மணமகன் வசதிக்கேற்ப, பொன்னும் பொருளும் மணமகளுக்கும் அவளின் தந்தைக்கும் கொடுத்து திருமணம் செய்து கொள்வது
6. காந்தர்வ: பெற்றோருக்குத் தெரியாமல் ஆணும் பெண்ணும் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்வது.
7. ராட்சச: பொண்ணைக் கடத்திக் கொண்டுபோய் திருமணம் செய்து கொள்வது; இதில் பெண்ணின் உறவினர்களை கொலையும் செய்வார்கள்.
8. பைசாச: முதலில் பெண்ணை அவளின் தூக்கத்தில் கெடுப்பது; அல்லது மயக்க மருந்து கொடுத்த கெடுப்பது; அல்லது கடத்திக் கொண்டுபோய் கெடுப்பது. பின்னர் திருமணம் செய்து கொள்வது.
மகாகவி காளிதாசன் இந்த கதையை “அபிஞான சகுந்தலம்” என்ற காப்பியமாகப் படைத்திருக்கிறான். மகாபாரதக் கதையான சகுந்தலாவை கவி நயத்துடன் காளிதாசன் படைத்திருக்கிறான்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



