பொய்யான வறட்சியை காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் மறுத்துக் கொண்டிருந்த கர்நாடகத்திற்கு, போதும் போதும் என்று சொல்லுகிற அளவிற்கு மழையை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது இயற்கை. தற்போது கொடுக்க வேண்டிய அளவிற்கு அதிகமாகவே தமிழகத்திற்கு தண்ணீரைத் திருப்பி விட்டு அடுத்த ஆண்டுக் கணக்கில் வைத்துக் கொள்ளப் போகிறது கர்நாடகம். பெலகாவியின் 74 கிராமங்களில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். சில பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் தொடர் கன மழை பெய்து வருவதால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நீர் கர்நாடகாவின் எல்லை மாவட்டமான பெலகாவியில் பாய்வதால் அப்பகுதியில் எங்கு பார்த்தாலும் கடல் போல் காட்சியளிக்கிறது. பெலகாவியின் சிக்கோடி வட்டம் ஹரிகிராந்தி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் 74 கிராமங்களில் அபாய எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தலா இரண்டு படையினர் பெலகாவியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அச்சம்நிலவுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக ராணுவத்தினரை வரவழைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடுவண் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சிக்கமகளூருவின் சார்மாடி காட் வனப்பகுதியில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பல மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளன. மலையிலிருந்து பெரிய கற்கள் சாலையில் சரிந்துள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற பலர் வனப்பகுதியில் சிக்கினர். தகவலறிந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தி அவர்களை மீட்டனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் மண்சரிவு மற்றும் மரங்கள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளனர். நல்லமழையோடும், போதுமான பாதுகாப்போடும் மகிழும் கர்நாடகம், உபரிநிரை தமிழகத்திற்கு திருப்பி விட்டு அடுத்த ஆண்டுக் கணக்கில் சேர்த்துக் கொள்ள அணியமாகி விட்டது. நேற்று ஆடிப்பெருக்கு விழாவை, 120 அடி கொள்ளளவு மேட்டூர் அணை 51 அடி நீருடன் கொண்டாடியது. அடுத்து வரும் ஆடி 28க்கு அணை நிரம்புமா என்று ஆசையோடு காத்திருக்கிறது தமிழகம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,234.
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு, கலபுரகி, பெலகாவி, தார்வாட் உட்பட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.