Show all

பெட்ரோல் மீதான இந்தியாவின் வரி வருமானம் கூடுதலாம்! பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின், பெட்ரோல் உற்பத்தி வருமானத்தை விட

எரிபொருள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளின் விலையிலும், 69.3 விழுக்காடு வரியாக மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது மற்ற நாடுகளை காட்டிலும் மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில், இத்தாலியில் ஒரு லிட்டர் எரிபொருளின் விலையில், 64 விழுக்காடு வரியாக உள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் எரிபொருளின் மீதான வரி 63 விழுக்காடாகவும், பிரிட்டனில், 62 விழுக்காடாகவும் உள்ளது. ஸ்பெயினில், 53 விழுக்hடாகவும், ஜப்பானில் 47 விழுக்காடாகவும், உள்ளது. கனடாவில் 33 விழுக்காடாகவும், அமெரிக்காவில் ஒரு லிட்டர் எரிபொருளின் மீது 19 விழுக்காடாகவும் வரியாக விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் தான் உலக அளவில், அதிகமாக பெட்ரோல், டீசல் மீது வரி விதிக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் மீதான உற்பத்தி வரி, 9 ரூபாய் 48 காசுகளாக இருந்தது, ஆனால் தற்போது 32 ரூபாய் 98 காசுகளாக அதிகரித்துள்ளது. இது சுமார் 248 விழுக்காட்டு உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அதாவது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லிட்டர் டீசல் மீதான உற்பத்தி வரி 3 ரூபாய் 56 காசுகளாக இருந்தது. ஆனால் தற்போது சுமார் 31 ரூபாய் 83 காசுகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் 794 விழுக்காட்டு உயர்வு. கடந்த ஆறு ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி 12 முறை உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் இரண்டு முறை மட்டுமே வரி குறைக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா காலத்தில், பெட்ரோல், டீசலின் பயன்பாடு 70 விழுக்காடு குறைந்தது. கச்சா எண்ணெய்யின் விலை குறைந்த போது, எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 7 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் வாங்கி இருப்பு வைத்துள்ளன. இதே காலத்தில், இந்தியாவின் ஒட்டு மொத்த தேவையில், 20 விழுக்காடு எரிபொருளை இந்தியா சேமித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சங்கத் தமிழ் நூலான புறநானூறில் வரும் 'யானை புகுந்த நிலம்” என்ற பிசிராந்தையாரின் பாடல் வரியை சுட்டிக் காட்டி நிர்மலா சீதாராமன் கடந்த வரவு-செலவு திட்ட உரையை நிகழ்த்தினார். இப்போது இந்தப் பெட்ரோல் வரிச் செய்தியோடு அதை பொருத்தி நினைத்துப் பார்த்தால் நடுவண் பாஜக அரசு மீது எல்லையில்லாத கோபம் நமக்கு வரும்.

அன்றைய தமிழ் மண்ணில், அதுவும் மன்னராட்சி காலத்தில், மாமன்னனை தமிழ்ப்புலவன் சாடிப் பாடும் நிலையிருந்தது. இன்றைய மக்களாட்சி காலத்தில் இவ்வளவு கேவலமாக வரிவிதிக்கும் அரசை, தட்டிக் கேட்க ஒரு நாதியும் இல்லை. தட்டிக் கேட்கவும் முடியாது என்பது வெட்கக் கேடானது. 

கடந்த ஆண்டு நடுவண் வரவு-செலவுத்திட்டத்தைப் பதிகை செய்தபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: அப்போது வரிவிதிப்பு தொடர்பான புறநானூற்றுப் பாடலை பாடி அதன் பொருளையும் அவர் எடுத்துக் கூறினார்.

யானை புக்க புலம்! - இந்தப் பாடலைப் பாடியவர் பிசிராந்தையார். இவர் காலத்து பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி.

பாண்டியன் அறிவுடை நம்பி தன் குடிமக்களிடம் கூடுதல் வரி வசூல் செய்துவந்தார் என்று தெரியவருகிறது. அவனிடம் சென்று அவன் தவறுகளை எடுத்துரைத்து அவனைத் திருத்த யாரும் முன்வரவில்லை.

அந்த நிலையில் அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குமாறு அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர். அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அறிவுடை நம்பியிடம் சென்று ஓர் அரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். இதைக் கேட்டு அவன் தன் தவறைத் திருத்திக் கொண்டான். அத்தகைய சிறப்பு பெற்ற பாடல் இது.

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே.

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும்.

ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.

அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாருடன் ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெட்டு அழிய நேரும் என்பதுதான் இந்தப் பாடலின் பொருள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.