ஊரடங்கில் கண்ணியம் காத்து பொது மக்களின் நல்ல பெயரை காவல்துறையினர் ஈட்டி வந்த நிலையில், ஊரடங்கு தளர்வில் சிறுவணிகர்களிடம் அடாவடி மாமுல் என்று காவலர்கள் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டதும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களும் சட்ட நடவடிக்கைகளை திறனாய்வு செய்யும் போக்கிற்கு வந்திருப்பதும் நிகழ்கிறது. 10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சிறுவணிகம் புரியும் மக்களிடம் நேரக்கட்டுப்பாடு விதிப்பதும், அடாவடி செய்வதும், மாமுல் வாங்குவதும் காவல்துறையினரின் பகுதிநேர பணியாக இருந்து வருவது துறை சார்ந்தவர்கள் தெளிவாக அறிவார்கள். சிறுவணிகர்களும் போனால் போகட்டும் என்று தங்களின் குறைந்த வருமானத்தில்- கந்து வட்டிக்காரன்கள், பிச்சைக்காரர்கள் ஆகியோருக்கு ஒதுக்குவது போல காவலர்களுக்கும் ஒரு தொகையை ஒதுக்கி வைத்துக் கொடுப்பார்கள். இந்த ஊரடங்கு பாதிப்பால் சிறுவணிகர்கள் காவல்துறையினருக்குத் தொகை ஒதுக்க மறுத்து வருகிறார்கள். ஆனால் காவலர்களோ ஊரடங்குக்கு முந்தைய காலத்தை விட தற்போது கூடுதல் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் விளைவு தூத்துக்குடியில் அப்பா மகன் காவல்துறையினரின் அடாவடிக்கு பரிதாபமாக படுகொலையான நிகழ்வு. அங்கே மக்கள் போராட்டத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மதுரை அறங்கூற்றுமன்றம் தாமாக முன்வந்து தூத்துக்குடி அப்பாமகன் படுகொலை வழக்கை கையில் எடுத்திருக்கிறது. இந்த அவல நிலையில் கோவையில் அரங்கேறியிருக்கிறது மற்றொரு அடாவடி. கோவை இரத்தினபுரி சாஸ்திரி வீதியில், ஒரு இணையர் தள்ளுவண்டிக் கடை நடத்தி வருகின்றனர். கோவையில் உணவகங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும் என்று மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, கடந்த கிழமை அந்தத் இணையர் மற்றும் பள்ளியில் படிக்கும் அவர்களின் 16 அகவை மகன் ஆகியோர் இரவு உணவுக் கடை நடத்தி வந்துள்ளனர். இரவு 9 மணியளவில் அங்கு ஊர்க்காவல் பணிக்கு வந்த காவலர்கள் கடையை மூடச் சொல்லியுள்ளனர். ஆனால் அந்தத் இணையர், ‘நாங்கள் தாமதமாகத்தான் கடையைத் திறந்தோம்’ என்று சொல்லி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த காவல்துறை துணைஆய்வாளர் செல்லமணி, அவர்களை ஒருமையில் பேசி எச்சரித்துள்ளார். இந்த நிகழ்வை அவர்களது மகன் காணொளி எடுக்கவே, அதைப் பிடுங்கிக்கொண்டு உடனடியாக கடையைக் காலி பண்ண வேண்டுமென செல்லமணி மீண்டும் எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். அப்போது, அந்த இணையரின் மகன் தனது செல்பேசியைக் கேட்டு, செல்லமணியின் இருசக்கர வாகன சாவியைப் பிடுங்கியுள்ளார். இதனால், கோபமடைந்த செல்லமணி வண்டியிலிருந்து கீழே இறங்கி அந்த 16 அகவைச் சிறுவனைத் தாக்கியுள்ளார். பெற்றோர் அவர்களிடமிருந்து தங்களது மகனை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அங்கிருந்த மற்றொரு காவலர் சிறுவனை லத்தியால் தாக்கியுள்ளார். மேலும், ‘சிறுவனை சிறையில் அடைத்துவிடுவோம்’ என்றும் காவலர்கள் மிரட்டியுள்ளனர். காவலர்கள் தாக்கியதில் சிறுவனின் சட்டையும் கிழிந்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல், சிறுவனின் தாய் சாலையில் அமர்ந்து அழுதார். இதையடுத்து, காவலர்கள் சிறுவனை ஜீப்பில் ஏற்றி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பலர் தடுத்தும் காவலர்கள் கேட்கவில்லை. இந்தச் நிகழ்வைக் காணொளி எடுத்த ஓர் இளைஞரின் செல்பேசியைப் பிடுங்கிக்கொண்டு, செல்லமணி அவரையும் அடித்துள்ளார். சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து, அவரிடம் மன்னிப்புக் கடிதம் மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர். சிறுவனின் தந்தை மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து விடுவித்தனர் காவல்துறையினர். காவலர், சிறுவன் சண்டை காணொளி சமூக வலைதளங்களில் தீயாகி மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. தற்போது, கொரோனா காலகட்டத்தில் பெரிதாக எந்த வழக்கையும் விசாரிப்பதில்லை. ஒரு பாலியல் வழக்கிலேயே, குற்றவாளியான ஒரு சிறுவனைக் காப்பகத்துக்கு அனுப்பாமல் விடுவித்துவிட்டனர். அதனுடன் ஒப்பிடும்போது இந்த வழக்கு ஒன்றுமில்லை. அந்த துணை ஆய்வாளர் தன்னுடைய அதிகாரத்தை நிரூபிக்க வேண்டுமென்ற ஆதிக்கம் அதில் நன்றாகத் தெரிந்தது. சிறுவர்களை சீருடை அணிந்த காவலர்கள் விசாரிக்கக் கூடாது, ஜீப்பில் ஏற்றக் கூடாது, காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்று சட்டம் தெளிவாகச் சொல்கிறது. தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் மட்டும்தான் சிறுவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முடியும். இந்தச் நிகழ்வில் சிறுவனின் குடும்பம்தான் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், சம்பந்தப்பட்ட காவல்ஆய்வாளர் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல, தமிழக அரசும் சிறுவனின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோருகின்றனர் அந்தப்பகுதி மக்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.