பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா நுண்நச்சு மருந்துகளை விற்க ஆயுஷ் அமைச்சகம் தடை. சளி, காய்ச்சல் மருந்து என்ற அடிப்படையிலேயே பதஞ்சலி மருந்துக்கு உரிமம் வழங்கினோம் உத்தரகண்ட் அரசு விளக்கம். 10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பதஞ்சலி நிறுவனம் நேற்று கொரோனில் எனும் பெயரில், கொரோனா நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்து, வெளியிடவும் செய்தது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்து குறித்த ஊடக செய்தி தங்களின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், மருந்து குறித்த விவரங்கள் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும், அதுவரை இந்த மருந்து குறித்த விளம்பரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தங்கள் மருந்து தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அளித்துள்ளதாகவும், தகவல் தொடர்பு இடைவெளி தற்போது நிரப்பப்பட்டுள்ளதாகவும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்ய பாலகிருஷ்ணா கீச்சுவில் தெரிவித்துள்ளார். ஆயுர்வேத மருத்துவத்துக்கு ஊக்கத்தையும் பெருமையையும் இந்த அரசு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதஞ்சலி நிறுவனத்தால் கூறப்பட்ட மருத்துவ ஆய்வுகள் குறித்த தகவல்கள் அமைச்சகத்திற்கு தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை குணப்படுத்தும் எனக் கோரப்பட்ட மருந்தின் பெயர், கலவை, இந்த ஆய்வு நடத்தப்பட்ட இடங்கள், மருத்துவமனைகள், எத்தனை பேரிடம் பரிசோதிக்கப்பட்டன என்ற விவரங்கள், நிறுவன நெறிமுறை குழு அனுமதி, இந்திய மருத்துவ பரிசோதனைகள் பதிவின் அனுமதி, ஆய்வின் முடிவுகள் ஆகியவற்றை பதஞ்சலி நிறுவனம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராம்தேவின் பதஞ்சலி நாட்டுக்கு ஒரு புதிய மருந்தை வழங்கியிருப்பது ஒரு நல்ல செய்தி ஆனால் அதற்கு அவரது ஆயுஷ் அமைச்சகத்தின் சரியான அனுமதி தேவை என நடுவண் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறினார், உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பானது பல நிலைகளில் உள்ளது. அஸ்ட்ராசெனகா, பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், மெர்க், மாடர்னா, சனோபி மற்றும் சீனாவின் கன்சினோ பயாலஜிக் ஆகிய நிறுவனங்கள் தாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்தை கரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து பரிசோதித்து வருகின்றனர். அதேசமயம் மகாராஷ்டிர அரசு ஆர்செனிக் ஆல்பம் 30 என்ற ஓமியோபதி மருந்தை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கரோனா பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறும் நிலையில் அதுபற்றி தகவல்களை அளிக்க வேண்டும் எனவும், அதுபற்றி விளம்பரங்கள் செய்ய வேண்டாம் எனவும் ஆயுஷ் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விரைவில் கோவிட் சிகிச்சைக்கான மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படும் மருந்தின் பெயர், மூலக்கூறுகள், கோவிட்-19 சிகிச்சை ஆய்வு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடங்கள், மருத்துவமனைகள், அதற்கான ஒப்பந்தங்கள், விதிமுறைகள், ஆய்வு மாதிரி அளவு, நிறுவன அறம், குழு ஒப்புதல்;, சிடிஆர்ஐ பதிவு, ஆராய்ச்சி, ஆராய்ச்சிகளின் புள்ளிவிவர முடிவுகள் ஆகியவற்றை அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து உத்தரகண்ட் மாநில ஆயுர்வேத நிறுவனத்தின் உரிமம் வழங்கும் அலுவலர் கூறியதாவது: பதஞ்சலி நிறுவனம் அளித்த விண்ணப்பத்தில் கொரோனா நுண்நச்சு தொற்றுக்கு மருந்து எனக் குறிப்பிடவில்லை. சளி மற்றும் காய்ச்சல் மருந்து எனவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனடிப்படையிலேயே நாங்கள் அவர்களுக்கு உரிமம் வழங்கினோம். கொரோனா நுண்நச்சு மருந்து எனக் கூறிவருவது குறித்து தற்போது நாங்கள் அவர்களுக்கு விளக்கம் கோரி கவனஅறிக்கை அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



