தலைமைஅமைச்சர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு அற்றிய உரையில் இனி கொரோனா தடுப்பூசி ஒன்றிய அரசு இலவசமாக வழங்கும் என்று அறிவித்த இன்ப அதிர்ச்சியைக் கூட அவ்வளவாகப் பாராட்டாமல், அவர் உரையில் முன்னெடுக்கப் பட்ட பிழையான தரவுகளைச் சுட்டிக்காட்டி அதிரடிகாட்டி வருகின்றன ஊடகங்கள். 25,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, நேற்று நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய போது இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் பயன்பாடு பற்றி ஒரு விவரத்தைச் சொன்னார். அந்த பேச்சு தொடர்பாக துணிச்சலாக ஊடகங்கள் இப்போது சர்ச்சை கிளப்பத் தொடங்கியுள்ளன. நடந்து முடிந்த தமிழ்நாடு, வங்கநாடு, மலையாள நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக விரட்டியடிக்கப்பட்ட நிலையில், பணிந்த ஒன்றிய பாஜக அரசு இலவசமாக தடுப்பூசி வழங்க ஒப்புக் கொண்டிருப்பதும், அதைக்கூட பாராட்டாது அந்த அறிவிப்பின் போது மோடியின் உரையில் முன்னெடுக்கப் பட்ட பிழையான தரவுகளைத் துணிச்சலாக சுட்டிக்காட்டி அதிரடிகாட்டி வருகின்றன ஊடகங்கள். இனி இந்தியாவில் பாஜக ஆட்சிதான் என்று இதுவரை அரசின் மேலாண்மைத் துறைகளின் அதிகாரிகளும், ஊடகங்களும் கூட, பாஜகவின் பெரிதான குறைகளையும் சுட்டிக்காட்டவோ, திறனாய்வு செய்யவோ அஞ்சி நடுங்கி வந்தனர். தற்போது மூன்று மாநிலங்களில் மக்கள் பாஜக வீழ்ச்சியைத் தந்த பிறகு, பணிந்திருக்கும் ஒன்றிய பாஜக, மக்களுக்கு சேவையாற்ற முனைந்திருப்பதும், ஊடகங்கள் திமிரத் தொடங்கியிருப்பதும் இந்தியாவில் அடாவடி ஆதிக்கவாத அரசியலை முன்;னெடுத்துவரும் பாஜக வீழ்ச்சிக்கு நல்ல தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. நேற்று மோடி பேசுகையில், இந்தியாவில் தடுப்பூசி வரலாற்றை எடுத்துப் பார்த்தால், சின்னம்மை, ஹெபடைடிஸ் பி, போலியோ போன்றவற்றுக்கு தடுப்பு மருந்துகளைச் செலுத்த பல பதின்ஆண்டுகளாக இந்தியா வெளிநாடுகளை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலம் இருந்தது. பிற நாடுகளில் தடுப்பூசிகளைப் போட்டு முடித்த பிறகுதான் நமது நாட்டுக்கு அந்த மருந்துகள் கொண்டுவரப்பட்டு நமது நாட்டில் தடுப்பூசி போடப்படும் நிலைமை இருந்தது என்று கூறியிருந்தார் மோடி. தற்போதைய பாஜக அரசு காலத்தில்தான் இந்தியா உடனுக்குடன் தடுப்பூசிகளை பெறுகிறது, முன்பு போல இருந்தால், பிற நாடுகளை நோக்கி காத்துக் கொண்டு இருக்கும் என்ற பொருள்படும் வகையில் அவரது பேச்சு அமைந்து இருந்தது. ஆனால் இதில் கிஞ்சித்தும் உண்மை இல்லை என்று பழைய தரவுகள் தெரிவிப்பதாக பேரறிமுக ஆங்கில நாளிதழ் ஹிந்து சர்ச்சையைத் தொடங்கி வைக்க, அனைத்து ஊடகங்களும் தற்போது பின்தொடர்கின்றன. இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பாகவே உள்நாட்டில் தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் திறமை பெற்ற நாடு இந்தியா. உலகில் எங்கு தடுப்பூசிகள் புதிதாக கண்டறியப்பட்டாலும் இந்தியாவில் அதை அடுத்த ஒரு ஆண்டுக்குள் உற்பத்தி செய்யும் வசதிகள் நம்மிடம் இருந்துள்ளன என்று வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகள் கிடைப்பது பெரிய அளவுக்கு அப்போதெல்லாம் சிக்கலை ஏற்படுத்தியது கிடையாதாம். எடுத்துக்காட்டுக்கு சின்னம்மை தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம். இந்திய மருத்துவ ஆய்வு இதழில் சின்னம்மை தடுப்பூசி பற்றி 2012 ஆம் ஆண்டு டாக்டர் சந்திரகாந்த் லகாரியா கூறுகையில், 1802 ஆம் ஆண்டு 3அகவை குழந்தைக்கு இந்தத் தடுப்பூசி இந்தியாவில் முதல் முறையாக செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேய மருத்துவ வல்லுநர் எட்வர்ட் ஜென்னர் இந்த மருந்தை கண்டுபிடித்து வெறும் நான்கு ஆண்டுகளில் அந்த தடுப்பு ஊசி இந்தியாவிலுள்ள குழந்தைக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது. அதுவும் 1800களின் தொடக்கத்தில் என்றால் எந்த அளவுக்கு நாம் சரியான பாதையில் பயணித்துக் கொண்டு இருந்தோம் என்பது தெளிவாகத் தெரிகிறது. 1850 ஆம் ஆண்டு வரை சின்னம்மை தடுப்பூசிகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு கொண்டிருந்தன. ஆனால் அதன் பிறகு மருந்துகளைப் பாதுகாப்பாக சேமித்து வைப்பதில் உள்ள அறைகூவல்களை இனம் கண்டு தீர்வை நோக்கி பயணிக்க தொடங்கியது இந்தியா. 1890ஆம் ஆண்டில் சில்லாங் நகரத்தில் முதல் முறையாக விலங்குகளுக்கான தடுப்பூசி காப்பகம் உருவாக்கப்பட்டது. உலகத்தின் எந்த மூலையிலாவது தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு விட்டால் உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வருவதில் எப்போதுமே சிரமங்கள் இருந்தது கிடையாது. அதே நேரம் அந்த தடுப்பூசி தேவையா என்பதை பார்த்து தான் பொதுமக்கள் போட்டுக்கொண்டனர் என்பதால் பரவலாக சில தடுப்பூசிகள் போடப்படாமல் இருந்திருக்கலாம். சில தடுப்பூசிகள் மீது பயம் காரணமாகவும் போடப்படாமல் இருந்திருக்கலாம். மற்றபடி கொண்டுதருதலில் இந்தியா எப்போதுமே பின்னடைவான நாடாக இருந்தது கிடையாது. 1944 மற்றும் 1945 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் மிக அதிகமாக சின்னம்மை நோய் பரவல் ஏற்பட்டது. இரண்டாவது உலகப் போர் முடிவடைந்ததும் இந்தியாவில் சின்னம்மை தடுப்பூசிகளை அதிக அளவில் போட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக சின்னம்மை வேகமாக கட்டுப்படுத்தப்பட்டது என்று டாக்டர் சந்திரகாந்த் லகாரியா தெரிவித்துள்ளார். 1947ஆம் ஆண்டு சின்னம்மை தடுப்பூசி வகைகளை உற்பத்தி செய்வதில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக இருந்தது என்றும் அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். இளம்பிள்ளை வாதம் என்று அழைக்கக் கூடிய போலியோ நோய்க்கான, தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முன்னணியில் இருந்துள்ளது. வாய்வழியாக போலியோ தடுப்பு மருந்து செலுத்துவது மற்றும் ஊசி மூலமாக செலுத்துவது ஆகிய இரண்டு வகை மருந்துகளையும் இந்தியாவில் உற்பத்தி செய்துள்ளனர். 2011ம் ஆண்டில் போலியோ அற்ற நாடாக இந்தியா மாறி சாதனை படைத்தது. 1897 ஆம் ஆண்டில் மும்பை கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் வால்டெமர் ஹாப்கின் என்பவரால் பிளேக் நோயை ஏற்படுத்தும் பூஞ்சைக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கப்பட்டது, அவர் முதலில் தன் மீதும், பின்னர் பைக்குல்லா சிறைச்சாலையின் கைதிகள் மீதும் தடுப்பூசியை போட்டு பரிசோதித்தார். பிளேக் ஆய்வகம் 1899 இல் அமைக்கப்பட்டது, 1925 இல் ஹாப்கைன் நிறுவனம் என்று அது பெயர் மாற்றப்பட்டது. சென்னையின் கிண்டியில் 1948ல் காசநோய்க்கான (பிசிஜி) ஆய்வகம் உட்பட நாட்டின் பல்வேறு மாகாணங்களில் பல தடுப்பூசி நிறுவனங்கள் அப்போது செயல்பட்டன. இந்த நிறுவனங்கள் 1940க்கு முன்னர் இந்தியாவில் டிப்டீரியா, பெர்டுசிஸ் மற்றும் டெட்டனஸ{க்கான தடுப்பூசி தயாரிக்க உதவியது. தடுப்பூசிக்காக இந்தியா எப்போதும் காந்திருந்தது இல்லை இந்தியாவின் பெரும்பாலான தடுப்பூசிகளை உற்பத்தி செய்த பல பொதுத்துறை தடுப்பூசி அலகுகள், பல்வேறு சந்தர்ப்பங்களில், மூடப்பட்டன, அல்லது அவற்றின் திறன்கள் குறைந்துவிட்டன. இதனால் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்கள் வளர வாய்ப்பு ஏற்பட்டன. எனவே மோடி கூறியதை போல இந்தியா முன்பு தடுப்பூசிக்காக பல பதின்ஆண்டு காலம் காத்திருந்தது இல்லை, எனக் கூறியுள்ளது அந்த நாளிதழ். குழந்தைகளுக்கான தடுப்பூசி பற்றியும் மோடி தனது உரையில் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு இந்திரதனுஷ் என்ற தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அதுவரை 60 விழுக்காடு அளவுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் அளவு 90 விழுக்காடு என்ற அளவுக்கு அதிகரித்ததாகவும் தெரிவித்தார். ஆனால் ஒன்றியக் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள அண்மையத் தகவல் அடிப்படையில் பார்த்தால் ஒரு மாநிலம் கூட 90விழுக்காடு தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றே தெரியவருகிறது. மோடி குறிப்பிட்ட இந்தத் தடுப்பூசி திட்டம் காசநோய் என்று அழைக்கப்படும் டிபி தாக்காமல் தடுப்பதற்காக செலுத்தப்படும் தடுப்பூசியாகும். இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்காளம், கோவா மற்றும் சிக்கிம் ஆகிய 5 மாநிலங்கள் மட்டும்தான் 80 விழுக்காட்டு அளவுக்கே இந்த தடுப்பூசிகளை செலுத்தியுள்ளன என்கிறது நலங்குத்துறை அமைச்சக புள்ளிவிபரம். ஆனால் நரேந்திர மோடி, நாடு முழுக்க குறிப்பிட்டு 90 விழுக்காட்டுக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.