ஊரடங்கு கொரோனாவைக் கட்டுப்படுத்தவில்லை என்று ஊரடங்கை மேலும் மேலும் நீட்டித்துக் கொண்டேயிருக்கிறோம். காரணம் ஊரடங்கின் ஊடே முன்னெடுக்கப்படுகிற தளர்வுகள். 15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரவலைத் தடுக்க என்று அரசு ஊரடங்கை அறிவித்து வருகிறது. ஊரடங்கு எதற்குப் பயன்படும்? கொரோனா இருப்பவர்களிடம் இருந்து வீடடங்கி இருப்பவர்களுக்கு கொரோனா வராது. கொரோனா இருப்பவர்களைக் குணப்படுத்தி விட்டால் கொரோனா அப்படியே ஒழிந்து விடும். சரி கொரோனாவைக் குணப்படுத்துவது யார்? ஊரடங்கை நடைமுறைபடுத்த காவல் காப்பது யார்? ஆக குணப்படுத்துகிற மருத்துவத் துறைக்கும், காவல் காக்கிற காவல்துறைக்கும் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்படுகிறது. ஆக, ஊரடங்கிலும் கொரோனா பரவுவதற்கான இந்த இரண்டு கதவுகள் திறந்திருக்கின்றன. இந்தக் கதவுகள் வழியாக யார் வந்தார்கள், யார் போனார்கள் என்று கண்காணிக்க முடியும். அதன் காரணமாக இந்தத் துறைகளுக்கும் கொரோனா வருகிற போது அதை முளையிலேயே கிள்ளி எறிய முடியும். அடுத்து பொதுமக்களுக்கான கட்டாயத் தேவைப் பொருட்கள் என்று பால், மளிகை, மீன் இறைச்சி வகைகள், காய்கறிகள், மருந்துப் பொருட்கள், பணம் என்று வங்கிகள், குடும்ப அட்டைப்பொருள் விற்பனைக் கடைகள் என இவைகள் தளர்வுப்பாட்டுக்கு கொண்டுவரப் படுகின்றன. இதில் மளிகை, மீன் இறைச்சி வகைகள், காய்கறிகள் இவைகள் மூலமாக கொரோனா அடையாளம் காணப்படாமல் விரைவாகப் பரவ முடியும். சென்னையின் பெரும்பான்மையான கொரோனா- காய்கறிச்சந்தை கோயம்பேட்டின் கொடையே. ஏனென்றால் இங்கெல்லாம் யார் யார் வந்து போனார்கள் என்கிற வருகைப் பதிவு இல்லாத காரணத்தால் கொரோனா அடையாளங் காணப்படாமல் கமுக்கமாக வேகமாகப் பரவி விடுகிறது. இந்த மூன்றையும் முறைப்படுத்த வேண்டும். பால்பொருட்கள் போல இவற்றை வீட்டுக்கே கொண்டு சேர்க்கலாம். அதற்கு புலனத்தைச் சிறப்பாக பயன்படுத்த முடியும். அதிலும் யாரை யார் எப்போதெல்லாம் சந்தித்தார்கள் என்கிற பட்டியல்- பொருட்களுக்கான இரசிதுகள் மூலமாக கணக்கு வைத்துக் கொள்ளப்பட்டால், இந்தத் தொடர்பாளர்களில் யாருக்காவது கொரோனா பரவினால் முளையிலேயே கிள்ளி எறிய இந்த சந்திப்பு பதிவு அட்டவணை பயன்படும். தங்கள் பணியாளர்களைத் தங்கள் வண்டிகள், ஊர்திகள் மூலம் அழைத்துச் செல்லும் பெரிய நிறுவனங்களுக்கு ஊரடங்கு தேவையேயில்லை. அவர்களுக்கான வருகை பதிவு, கொரோனா பாதுகாப்பு ஆகியவற்றைப் பகுதியாக நிறுவனங்களிடமே ஒப்படைக்கலாம். மிக முதன்மையாக டாஸ்மாக்குக்கு, பொதுப் போக்குவரத்துகளுக்கு, பள்ளிகளுக்கு, கொரோனா அறுதியாக நம்மை விட்டு வெளயேறும் வரை தளர்வு கூடவே கூடாது. இதில் தளர்வுகள் நம்மை கடுமையான ஆபத்தில் சிக்க வைக்கும். விமானப் போக்குவரத்தை தொடக்கத்திலேயே நிறுத்தியிருந்தால் இந்தியாவிற்கு கொரோனா இல்லவேயில்லை என்கிற செய்யாமல் விட்ட மூடத்தனத்தை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது. வருகைப்பதிவேடு பேணுகிற எந்த நிறுவனத்தையும் கொரோனா பாதுகாப்பில் அவர்களுக்கும் பாதி பொறுப்பை ஒப்படைத்து தாராளமாக தளர்வுகளை அறிவிக்கலாம். ஏனென்றால் கொரோனாவை விட ஆபத்தானது ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படுகிற வருமானம் இழப்பு. வருமானம் இழப்பு குறித்து மாநில அரசுகளும், மக்களும் கவலைப்படா வண்ணம் நடுவண் அரசு தாராள நிதியுதவி செய்ய வேண்டும். அதற்கான கடமை நடுவண் அரசுக்கு கட்டாயம் இருக்கிறது. அதுவும் மாநிலங்களின் அனைத்து உரிமைகளையும் பிடுங்கி தன்வசம் வைத்துக் கொண்டிருக்கிற பாஜக நடுவண் அரசுக்கு இன்னும் கூடுதல் கடமை இருக்கிறது. நடுவண் அரசின் இந்தக் கடமை அனைத்து தளங்களிலும் பேசுபொருளாக மாற வேண்டும். நடுவண் பாஜக அரசு- கல்வி, மின்சாரம், சரக்கு சேவை வரி என்று மாநிலங்களின் அனைத்து உரிமைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் பிடுங்கி வைத்துக் கொண்டு, கணவன் வருமானத்திற்கு வெளியே சென்று, வீட்டிற்கு வரும் போது வீட்டைப்பூட்டி விட்டு திரைப்படத்திற்கு சென்றுவிட்ட கதைபோல- எல்லையில் சீனாவோடு மோத வேண்டிய கடமைகளை, இராணுவ அமைச்சகத்தோடு முடித்துக் கொண்டு, நாட்டை பாதுகாக்க வேண்டிய கமுக்கங்களை விளம்பரப்படுத்தி “இராணுவச் சென்டிமென்டில்” மாநில அரசுகளும் மக்களும், கொரோனா பாதிப்புகளின் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் நம்மை வாயடைக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



