ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் தனிப்பட்டவர்கள் தவறுதானா? என்று நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார் 15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடைத்திறப்பில் நேரக்கட்டுப்பாடு மீறல் காரணமாக சாத்தான்குளம் காவல்துறையினர் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த முன்னெடுப்பு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. தமிழ்த் திரையுலகப் பேரறிமுகங்கள், ஹிந்தித் திரை பேரறிமுகங்கள், இந்திய மட்டைப்பந்தாட்ட வீரர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சாத்தான்குளம் நிகழ்வு தொடர்பாக நடிகர் சூர்யா, காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சூர்யாவின் அறிக்கையைக் குறிப்பிட்டு அவரது தம்பியும் நடிகருமான கார்த்தி தனது கீச்சுப் பதிவில் கூறியிருப்பதாவது: “இந்த வலிமிகுந்த நிகழ்வும், ஜெயராஜ் குடும்பத்துக்கு அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியும் நமது நினைவுகளை நீண்ட நாட்களுக்கு ஆக்கிரமித்திருக்கும். இது ஒரு சில தனிப்பட்டவர்களின் தவறா அல்லது ஒட்டுமொத்த அமைப்பின் தவறா என்பது இந்த வழக்கு எப்படி கையாளப்படுகிறது என்பதன் மூலம் தெரிந்துவிடும்” இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



