Show all

மாணவர்களின் எதிர்காலம் என்ன! பள்ளிக்கு சென்ற 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்கு சென்ற 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பெற்றோர்களும் அதிகாரிகளும் அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளனர்.

20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் தொற்று பரவல் இன்னும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.  இந்தியாவில்  கடந்த  24 மணி நேரத்தில் மேலும் 74,442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஐந்து மாத காலம் பொதுமுடக்கம் நடைமுறை படுத்தப்பட்டிருந்த போதும் தொற்று குறையவில்லை. ஆனாலும் ஒன்றிய பாஜக அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் பள்ளிக்கு ஐயம் கேட்க பெற்றோர் அனுமதியுடன் செல்லலாம் என ஒன்றிய அரசு கூறியது.

அடுத்த மாதம் முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் விஜயநகர் மாவட்டத்திலுள்ள இரண்டு பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பள்ளிகளில் நடந்த முறைசாரா வகுப்புகளில் பங்கேற்ற பெற்றோர் அனுமதியுடன் மாணவர்கள் சென்றதாக தெரிகிறது.

பள்ளிக்கு சென்ற 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோர் மற்றும் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பள்ளிகளில் எடுத்து இருந்த காரணத்தால் மாணவர்கள் வேறு இடங்களில் கொரோனா தொற்றால் பாதித்திருக்கலாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் ஐயம் தெரிவிக்கின்றனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.