20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஆனால், துணைநிலை ஆளுநராக பாஜகவைச் சேர்ந்த அஜித் பைஜல் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் நேரடி மோதல் நடந்துவருகிறது. முதல்வர் சொல்வதுபடி நடப்பதா, இல்லை ஆளுநர் சொல்வதுபடி நடப்பதா என்பது தெரியாமல், அதிகாரிகள் குழம்பியிருக்கின்றனர். இந்நிலையில், ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக டெல்லியில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின் முடிவில், ஆளுநருக்கு ஆதரவாக உயர் அறங்கூற்றுமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில், உச்ச அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 அறங்கூற்றுவர்கள் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றுவந்தது. இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கிய இந்த வழக்கில், முதலில் டெல்லியின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் அரசியல் சாசனப் பிரிவின் அம்சங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பு வாசிக்கத் தொடங்கிய தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா கூறுகையில், 'அரசியலமைப்பை மதிப்பது அனைவரின் கடமை. துணைநிலை ஆளுநர், மாநில அரசுடன் சேர்ந்து சுமுகமாகச் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகள் மீது ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். துணைநிலை ஆளுநருக்குத் தனி அதிகாரம் கிடையாது. என கூறினார். மேலும், அமைச்சரவையின் எல்லா செயல்களிலும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை. அமைச்சரவை முடிகள் மீது கருத்து வேறுபாடுகள் இருந்தால் பேசி தீர்வு காணலாம். ஆளுநர் அனைத்து முடிவுகளையும் குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டியதில்லை. மாநில நிர்வாகம் முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது.' என உச்ச அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக ஆளுநரும். பாண்டிச்சேரி ஆளுநர்களும் இனி அடக்கி வாசிப்பார்களா? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,838.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



