Show all

ரவுடி ஆனந்தன் வாழ்க்கை வரலாறு

20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவலர் ராஜவேலுவை ஆனந்தனின் கூட்டாளிகள் சரமாரியாகத் தாக்கினர். அவரின் தலையில் மட்டும் 16 இடங்களில் வெட்டு விழுந்தது. இதுதவிர, இடது காது மற்று கன்னத்திலும் வெட்டுக் காயங்கள் உள்ளன. 18 இடங்களில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிவரும் ராஜவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

காவலர் ராஜவேலுவைத் தாக்கிய ரவுடிக் கும்பலை காவல்துறையினர் விடிய விடியத் தேடி, அரவிந்தன், ஜிந்தா உள்பட 6பேர்களை கைது செய்துள்ளனர்.

இந்த ரவுடிக் கும்பலுக்குத் தலைவனான ஆனந்தன் மற்றும் சிலர் தலைமறைவாக இருந்தனர். அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் வியூகம் அமைத்தனர். 

கூடுதல் ஆணையர் சாரங்கன் மேற்பார்வையில், துணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் உதவி ஆய்வாளர் இளையராஜா கொண்ட அணி, ரவுடி ஆனந்தன் குறித்த தகவல்களைச் சேகரித்தனர். அப்போது, தரமணி அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஆனந்தன் பதுங்கியிருக்கும் கமுக்கத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற தனிப்படை, ஆனந்தனைக் கைதுசெய்ய முயற்சி செய்தது. அப்போது, ஆனந்தனுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தற்காப்புக்காக காவல்துறையினர் ஆனந்தனை சுட்டுக் கொன்றனர். 

ராயப்பேட்டை பி.எம். தர்கா குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆனந்தன். ராயப்பேட்டை காவல் நிலையத்தில், ரவுடிகள் பட்டியலில் ஆனந்தனின் பெயர் உள்ளது. இவர்மீது ராயப்பேட்டையில் மட்டும் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்மீது கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் சகோதரர் அருண் மீதும் வழக்குகள் உள்ளன. ஆனந்தனுக்கு ரஷீதா என்ற மனைவியும் 5 வயதில்  ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். 

ஆனந்தன், பள்ளியில் படிக்கும்போதே குற்றச் செயல்களில் ஈடுபட்டார். இதனால், பள்ளி படிப்பை பாதியில் அவர் நிறுத்திவிட்டு முழு நேரமாக குற்றச் செயல்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் ஆனந்தனின் பெயர் ரவுடிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதுவரை அவர் மீது 5 கொலை முயற்சி வழக்குகள், வழிப்பறி, அடிதடி என 13 வழக்குகள் உள்ளன. 

ரவுடி சாம்ராஜ்ஜியத்தின் தலைவராக திட்டமிட்ட அவர், அதற்காக எப்போதும் ஒரு கூட்டத்துடன் வலம் வந்தார். ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் ஆனந்தனின் பெயரைக் கேட்டாலே தெரியாதவர்கள் யாரும் இல்லை. அந்தளவுக்கு அவரின் ரவுடி செல்வாக்கு இருந்தது என்று தற்போது தகவல் வெளி வருகிறது. 

இப்படி தமிழகத்தில்: காவல்துறை நடவடிக்கைகள், அறங்கூற்று மன்ற நடவடிக்கைகளைத் தாண்டி, ஆனந்தன் போன்று ஒருவர் திருமணம், மனைவி, பிள்ளை குட்டிகள்; என்று, வெளியில் உலா வந்து கொண்டிருக்க, எது அனுமதிக்கிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,838.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.