Show all

விஜய் தொலைக்காட்சி தமிழர்தாம் அகன் ஐந்திணை குறிஞ்சித்திணையில் குழப்பம் விளைவிப்பதேன்

20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக மொழிகள் எல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் கொண்டுள்ளன. நம்முடைய தமிழ் முன்னோர் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துத் தந்திருக்கின்றனர். அது அகப்பொருள், புறப்பொருள் என்கிற பொருள் இலக்கணம்.

அகப்பொருள் இலக்கணத்தை ஐந்திணை என்றும் அன்பின் ஐந்திணை என்றும் போற்றுவர் நம் தமிழ்முன்னோர். 

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து பெயர்களில் வழங்கப்படும். 

இவை தலைவன் - தலைவி இருவரது மனம் ஒத்த அன்பை மையமாக வைத்து வகுக்கப்பட்ட இலக்கணங்கள் ஆகும்.

இதில் குறிஞ்சிக்கான உரிப்பொருள் தலைவன் தலைவி கூடலும் கூடல் நிமித்தமும் என்பதாகும்.

கார்ப்பரேட் தொலைக் காட்சியான விஜய் தொலைக்காட்சி இந்த அழகியலை அலங்கோலமாக காட்சிப் படுத்தும் வேலையில் மிகப் பெரும்பாலான நாடகங்களில் ஈடுபட்டிருப்பதே இங்கே நாம் பார்க்கவிருக்கிற வேடிக்கை. 

கணவன் மனைவி பிரிந்திருப்பது, என்பதை பெரும்பாலன நடகங்களின் கருப்பொருளாக வைத்து நாடகங்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இராஜராணி என்பது ஒரு நாடகம்: அதில் கதைத் தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணமாகி விட்டாலும், தலைவன், தலைவி பிரிந்திருப்பதையே மையக்கருவாக வைத்துக் கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

நெஞ்சம் மறப்பதில்லை என்றொரு நாடகம்: காவல்துறையை சார்ந்த கதைத்தலைவன் மருத்துவம் பயிலும் கதைத்தலைவி, திருமணம் செய்து வைத்து விட்டார் கதைஆசிரியர்; ஆனால் இதிலும் தலைவன், தலைவி பிரிந்திருப்பதையே மையக்கருவாக வைத்துக் கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

கல்யாணமாம் கல்யாணம் என்றொரு நாடகம். இதிலும் தலைவன், தலைவி பிரிந்திருப்பதையே மையக்கருவாக வைத்துக் கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் இருவர் நமக்கு இருவர் இப்படியொரு நாடகம்: மணம் செய்விக்கப் பட்ட இருவேறு தலைவன் தலைவிகள் இரண்டு இணையரிலும் தலைவன், தலைவி பிரிந்திருப்பதையே மையக்கருவாக வைத்துக் கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

சின்னத்தம்பி என்றொரு நாடகம்: பணக்கார கதைத்தலைவி, பயில்வான் கதைத் தலைவன் இங்கேயும்- தலைவன், தலைவி பிரிந்திருப்பதையே மையக்கருவாக வைத்துக் கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழர்தம் குடும்ப அமைப்பை சிதைப்பதான இது போன்ற நாடகங்களை குடும்பத்திற்குள் வந்து நமது காசில், நமது தொலைக்காட்சி பெட்டியில் நடத்தும் இழிவை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,838.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.