17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் என்பது உத்தரப் பிரதேச நகரத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் உள்ள அமைப்பாகும். இந்த ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம், வருமானவரிச் சட்டத்தில் இருந்து விலக்கு கேட்டு வருமானவரித் துறையிடம் விண்ணப்பித்து இருந்தது. ஆனால், அதை கடந்த பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை ஆணையர் அந்த விண்ணப்பத்தை நிராகரித்து, தொண்டு நிறுவனத்தின் கீழ் வராது என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம், வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் மனு செய்து வருமான வரி விலக்கு பெற்றது. இதை எதிர்த்து வருமானவரித்துறையினர் அலகாபாத் உயர் அறங்கூற்று மன்றத்தில் மேல் முறையீடு செய்ததில், வருமானவரித்துறை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம், உயர் அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச அறங்கூற்றுமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச அறங்கூற்றுமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மனு மூத்த அறங்கூற்றுவர் மதன் பி.லோக்கூர் தலைமையில அறங்கூற்றுவர்கள் எஸ்.அப்துல் நசீர், தீபக் குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில் ஆவணங்களையும், விளக்கங்களையும் பதிகை செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. மேலும், பதிகை செய்த ஆவணங்களிலும் தவறான விவரங்கள் கூறப்பட்டு இருந்தன. இதைக் கேட்டவுடன அறங்கூற்றுவர் மதன் பி.லோக்கூர் தலைமையிலான அறங்கூற்றுவர்கள் கடும் கோபமடைந்து, வருமான வரித்துறை சார்பில் அணியமாகிய வழக்கறிஞரையும், நடுவண் அரசின் வழக்கறிஞரையும் கடுமையாகச் சாடினார்கள். அறங்கூற்றுவர்கள் கூறுகையில், 'இந்த வழக்கு விசாரணைக்கு வந்து 596 நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு முறை அழைப்புக்கு வரும் போதும் ஏதாவது காரணங்களைக் கூறி அவகாசம் கேட்கிறீர்கள். உங்களுக்கு ஆவணங்களைத் பதிகை செய்ய அவகாசம் போதவில்லையா, அல்லது விளக்கம் கொடுக்க முடியவில்லையா? இதை உச்ச அறங்கூற்றுமன்றம் என்று நினைத்தீர்களா அல்லது பொழுது போக்குச் சுற்றுலாவிற்கான இடம் என்று கருதினீர்களா. அறங்கூற்றுமன்றம் என்ற நினைப்புடன் நடந்து கொள்ளுங்கள். இதுதான் அறங்கூற்றுமன்றத்தை நீங்கள் அணுகும் விதமா? உச்ச அறங்கூற்றுமன்றத்தில் இப்படியெல்லாம் உங்கள் சவுகரியத்துக்கு அணுக முடியாது. இத்தனை நாட்களாக ஆவணங்கள் அளிக்கவும், உரிய விளக்கம் அளிக்கவும் தாமதம் செய்த வருமானவரித்துறைக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கிறோம். இந்த விசயத்தை நடுவண் அரசும், வருமானவரித்துறை ஆணையரும் மிகவும் மேம்பாக அணுகியதை நினைத்து வேதனைப்படுகிறோம், அதிர்ச்சி அடைகிறோம்' என்று தெரிவித்தனர். அது சரி ஒரு நிறுவனம் வருமானவரி விலக்குக்கு தகுதியானது தானா என்பதை நிரூபனம் செய்ய இத்தனை குளறுபடிகள் ; இத்தனை ஆண்டுகள் தேவைதானா? சாதாரண மனிதர்கள் தாங்குவார்களா? இந்த நிலை மாறுமா? எப்படிப் பட்டவரால் மாறக்கூடும்? இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதந்தானே? இப்படி எத்தனை ஆயிரம் பேர்கள் அன்றாடம் பாதிக்கிறார்கள்? வேதனைதான் விடையா! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,898.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



