எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் முதன்மைக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்க அணியமாக இல்லை. அதனால் நிறைய கட்சிகளுக்கு இந்த அணியில் இடம் இல்லாத நிலையில்- மூன்றாவது அணியே தீர்வு என்று அரசியல் பார்வையாளர்களால் கணிக்கப்பட்டு வருகிறது. 12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் புதிய கட்சிகளுக்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருக்கின்றன. திமுக கூட்டணியில் இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படாது என்பது தொடக்கம் முதலே சொல்லப்படுகிற செய்தி. இதனைக் கூட்டணி கட்சிகளும் ஏற்றுக் கொள்ளவே அதிக சாத்தியங்கள் உள்ளன. அதிமுக கூட்டணியில் தற்போதைய நிலையில், பாஜக மட்டுமே இடம்பெறக் கூடும். தமிழகத்தில் கால்பதிப்பதே பாஜகவின் நோக்கம் என்கிற நிலையில், பாஜகவிற்கு தங்களுக்கான தொகுதித் தேவை எண்ணிக்கை பற்றியெல்லாம் கவலையில்லை. ஒற்றைத் தொகுதிக்கான வெற்றியும் கொண்டாடத்தக்கதே. நடிகர் இரஜினிகாந்த், மு.க. அழகிரி ஆகியோர் புதிய கட்சியை அறிவிக்க இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தேவைப்பட்டால் இரஜினி கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்திருக்கிறார். பாமகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இரஜினிகாந்த் நீண்டகாலமாகவே கலந்துரையாடல் நடத்தி வருகிறார். தமிழகத்தில் தனித்து தேர்தலைச் சந்திக்க முடியாத பாமக, அழகிரி, இரஜினி, கமல் என நான்கு கட்சிகளுக்கு மூன்றாவது அணிக்கான கட்டாயம் இருக்கிறது. தமிழகத்தில் தனித்து தேர்தலைச் சந்திக்க முடியும். ஆனால் வாகை சூடும் வாய்ப்புக்கு அதிமுக, திமுக அல்லாத கட்சிகள் தேவை என்கிற பெரிய பேரறிமுகமான கட்சியாக இருப்பது அமமுக. இந்த மூன்றாவது அணி பட்டியலில் முதன்மையான இடம் பெறத் தகுதியான கட்சி அமமுக. இன்றோ நாளையோ சசிகலாவும் விடுதலையாகி களத்திற்கு வருகிற நிலை ஒளிமயமாக இருக்கிறது. தற்போதைய நிலையில் இரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதி என்கிற நிலையில் அதிமுக அணியைவிட்டு விலகி இரஜினி பக்கம் பாமக தாவவும் வாய்ப்பிருக்கிறது. எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை மதுரையில் மு.க. அழகிரி தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் முடிவில் கலைஞர் திமுக என்கிற கட்சியை அழகிரி அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது. அழகிரியைப் பொறுத்தவரையில் இரஜினிகாந்துடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வருகிறார். அதனால் ரஜினிகாந்த் கட்சியுடன் அழகிரி கட்சி உறுதியாகக் கூட்டணி அமைக்கும் என்றே தெரிகிறது. ஆக- கூட்டிக் கழித்துப் பார்த்தால், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்றாவது அணி உருவாவது காலத்தின் கட்டாயமாகவே உள்ளது. அந்த மூன்றாவது அணியில் அமமுக, பாமக, மநீம, கதிமுக, தஜக (இரஜினியின் தமிழக ஜனதா கட்சி) ஆகியன அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



