கோகோ கோலா, தம்ஸ் அப்புக்கு தடை கேட்டு பொது நலவழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது உச்ச அறங்கூற்றுமன்றம் 30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த மாதம், கவுதம்சிங் என்பவர் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை பதிகை செய்தார். இந்த மனுவில் கொரோனா தொற்று இருப்பதால் மதுக்கடைகளில் சமூக விலகலை யாரும் கடைப்பிடிக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த அறங்கூற்றுவர்கள் இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல. இது தொடர்பாக அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும். இது பொதுநல வழக்கு அல்ல. இந்த மனுவை பதிகை செய்த நபருக்கு ரூபாய் ஓர் இலட்சம் அபராதம் விதிப்பதுடன், இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர். கோகோ கோலா, தம்ஸ் அப்புக்கு தடை கேட்டு பொது நலவழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது உச்ச அறங்கூற்றுமன்றம் நேற்று. கோகோ கோலா மற்றும் தம்ஸ் அப் குளிர்பானங்களில் மனிதர்களின் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதாக கூறி அவற்றின் விற்பனையை தடை செய்யக் கோரி உமேத்சிங் பி சாவ்தா என்பவர் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் பொது நல மனுவை பதிகை செய்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சஅறங்கூற்றுமன்றத்தில் அறங்கூற்றுவர்கள் டி.ஒய் சந்திர சூட், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகிய மூன்று அறங்கூற்றுவர்கள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர்கள், மனுதாரர் ஒரு சமூக ஆர்வலர் என்று கூறுகிறார். அது ஏன் குறிப்பிட்ட இந்த இரண்டு வணிக அடையாள குளிர்பானங்களை மட்டும் தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றார் என்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினர். மேலும், மனுதாரருக்கு இந்தப் பாட்டில் தொழில் நுட்ப அறிவு எதுவும் இல்லாமல் மனுவைப் பதிகை செய்துள்ளார் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். அதோடு மனுதாரர் உமேத்சிங் பி சாவ்தாவிற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். அறங்கூற்றுவர்கள் மேலும் தங்கள் உத்தரவில், மனுதாரர் பொதுநல வழக்கு பதிகை செய்யப்படும் சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும், உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற தனது கருத்தை அவரால் உறுதிபடுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தனர். இதுபோன்ற வழக்கை தொடர்ந்த மனுதாரர் வழக்கு செலவாக இந்த அபராதத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். ஒருமாதத்திற்குள் 5 லட்சம் ரூபாயை உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வைப்பு செய்ய வேண்டும். அந்தப் பணத்தை உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கத்திற்கு வழங்குமாறு சாவ்தாவிற்கு அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



