Show all

ஒரு கோடி ரூபாய் காரில் வந்தவரிடம் இறக்கம் காட்டாத சட்டமும் காவல்துறையும்!

பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் ஒருகோடி ரூபாய் காரின் உரிமையாளர் ஒருவர், செல்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளது குறித்த காணொளி தீயாகப்பரவி வருகிறது. 

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மிகவும் கடுமையாக உயர்த்தப்பட்டன. அனைத்து விதமான விதிமீறல்களுக்கும் அபராத தொகைகள் உயர்த்தப்பட்டதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். 

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்குக் காவல்துறையினர் கடுமையான அபராதத்தை விதித்து வரும் நிலையிலும், இன்னும் ஒரு சிலர் விதிமுறைகளை பின்பற்ற மறுக்கின்றனர். குறிப்பாக செல்பேசியில் பேசி கொண்டே வாகனங்களை ஓட்டுவது, இன்னமும் பொதுவான விதிமுறை மீறலாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் ஒருகோடி ரூபாய் காரின் உரிமையாளர் ஒருவர், செல்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளது குறித்த காணொளி தீயாகப்பரவி வருகிறது. 

அவருக்கு காவல் துறையினர் 5,000 ரூபாயை அபராதமாக விதித்தனர். ஆனால் அவரோ, அபராத தொகையை 100 அல்லது 200 என குறைக்கும்படி காவல்துறையினரிடம் கெஞ்சியதாகத் தெரியவருகிறது. 

அந்தக் காணொளியில் இரண்டு காவலர்கள், பிஎம்டபிள்யூ 5 வகைக் கார் ஒன்றை நிறுத்துவதை பார்க்க முடிகிறது. அந்தக் காரை ஓட்டி வந்த நபர், உடனடியாக காரை நிறுத்தினாலும், தொடர்ந்து செல்பேசியில் பேசி கொண்டே இருந்தார். இதற்காக அபராதம் செலுத்த வேண்டும் என அவரிடம் காவல்துறையினர் கூறினர். 

ஆனால் அவரோ காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்தார். அத்துடன் தற்போதுதான் வீட்டில் இருந்து வெளியில் வருவதாகவும், அவசரமாக ஓரிடத்திற்கு போக வேண்டியுள்ளதால், தன்னை அங்கிருந்து செல்ல அனுமதிக்குமாறும் கேட்டு கொண்டார். இதுபோதாதென்று அந்த காரின் உரிமையாளர், சிலரைப் பேசியில் அழைத்து, தனக்கு உதவி செய்யும்படி கேட்டு கொண்டார். ஆனால் யாரும் காவல்துறையினருடன் பேசவில்லை. 

இறுதியாக காரை விட்டு இறங்கிய அந்த நபர், காவல் துறையினருடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது இந்த காரின் மாடல் என்ன? இதன் விலை என்ன? என்பது போன்ற கேள்விகளை காவல் துறை அதிகாரி கேட்டார். இதற்கு அந்த கார் உரிமையாளர் 83 லட்ச ரூபாய் என பதில் அளித்தார். இதன்பின் செல்பேசியில் பேசி கொண்டே கார் ஓட்டிய குற்றத்திற்காக, அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக காவல் துறை அதிகாரி கூறினார். ஆனால் அந்த காரின் உரிமையாளரோ 100 அல்லது 200 ரூபாய் மட்டும் அபராதம் விதித்து விட்டு, தன்னை அங்கிருந்து செல்ல அனுமதிக்கும்படி வலியுறுத்தினார். ஆனால் காவல் துறை அதிகாரியோ இறங்கி வரவில்லை. அபராதம் செலுத்தியே ஆக வேண்டும் என்று அந்த காரின் உரிமையாளரிடம் கறாராக கூறி விட்டார். அந்த காரின் உரிமையாளர் ஒரு சில முறை கேட்டு பார்த்தார். ஆனால் இறுதியில் காவல் துறை அதிகாரி 5,000 ரூபாய் அபராதத்தை வசூலித்தே விட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.