15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஷ்மீரில் தாசில்தார் பணிக்கு தேர்வு எழுத, கழுதைக்கு அறைஅனுமதி சீட்டு வழங்கி இருக்கும் சம்பவம் அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காஷ்மீரில் கடந்த முறை மாநில அரசு நடத்திய நுழைவுத்தேர்வு ஒன்றுக்கு பசுவுக்கு அறைஅனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் அப்போது பெரும் கேலி, கிண்டலுக்கு உள்ளானது. இந்த சம்பவத்தை போல மீண்டும் ஒரு சம்பவம் தற்போது அங்கு நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில அரசு சார்பில் நாளை வட்டாட்சியர் பணிக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான அறைஅனுமதி சீட்டு மாநில அரசுப்பணிகள் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. இதில் கழுதை ஒன்றுக்கும் அறைஅனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருக்கிறது. கழுதை ஒன்றின் படத்துடனும், 'பழுப்பு கழுதை' என்ற பெயருடனும் வழங்கப்பட்டுள்ள இந்த அறைஅனுமதி சீட்டு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் ஒருபுறம் வினோதமாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் அதிகாரிகளின் அலட்சியம் குறித்து மக்கள் கடுமையாக தங்கள் அச்சத்தை பதிவு செய்து வருகிறார்கள். நமது பெயரில் ஒரேயொரு செல்பேசி இணைப்பு இருந்தாலே போதும்- நம்முடைய வங்கி கணக்குகள் விவரம் உட்பட அனைத்தும் இணைத்தில் பதிவாகி விடுகிறது. அப்படியிருக்கும் நிலையில், இது போன்ற அலட்சியங்களும், பொறுப்பற்ற தன்மைகளும், எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு பெரிய தீங்கும் இழைத்து விடக் கூடும். இது நிகழக் காரணமான பொறுப்பற்ற நபர்களைக் கண்டு பிடித்து அவர்களை ஒழுங்கு படுத்தியாக வேண்டும் என்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தவறு நிகழ்ந்தது குறித்து கேட்பதற்காக தேர்வாணைய அதிகாரிகளை செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட போது, அவர்கள் இது குறித்து பதிலளிக்க மறுத்து விட்டனர். மாநில அரசு தேர்வுக்காக ஏற்கனவே பசுவுக்கு அறைஅனுமதி சீட்டு; வழங்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் கழுதைக்கு அறைஅனுமதி சீட்டு வழங்கி இருக்கும் நடவடிக்கை காஷ்மீர் அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,771.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



