15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தினகரன் ஆதரவு பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் என்ன தீர்ப்பு தரப்போகிறது அறங்கூற்று மன்றம் என்பதை, 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' பழமொழியின் அடிப்படையாக நமக்கு உணர்த்தப் பட்டிருக்கிறது- பன்னீர் உட்பட்ட பதினோரு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு. சட்டப் பேரவைத் தலைவர் தீர்ப்பில் நாங்கள் தலையிடப் போவதில்லை என்பது அறங்கூற்றுமன்றத் தீர்ப்பாகிப் போன நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அங்கிகரித்த பன்னீர் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி இழக்க மாட்டார்கள். சட்டப்பேரவைத் தலைவர் நீக்கிய தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி இழப்பார்கள் என்பதுவே அறங்கூற்று மன்றத் தீர்ப்பாகிறது என்று மணியோசையாக இன்றே நாம் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பன்னீர் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்அறங்கூற்று மன்றம் பன்னீர் உள்ளிட்ட 11 பேரும் சட்டமன்ற உறுப்பினர்களாக நீடிக்கலாம் என உத்தரவிட்டு, (சட்டப் பேரவைத் தலைவருக்கு எதிராக திமுக பதிகை செய்த வழக்கை) வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அறங்கூற்றுமன்ற நடவடிக்கையில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது என தெரிவித்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை நடுவண் அரசின் நேரடி ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அமைச்சரவை ஒட்டு மொத்தமும் கீழ்கண்ட சுலோகத்;தை மக்களுக்கு கருத்துப் பரப்புதல் பணிக்காக தக்க வைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்கான அதிகாரம், பன்னீர் எதிராக திருப்பப் பட்டபோதே முடிந்து விட்டது. உங்கள் ஆட்சி முடிந்து விட்டது ஆனால் நீங்கள் பதவியில் மட்டும் இருக்கிறீர்கள் என்று அதிமுகவிற்கும், அதிமுக ஆட்சி முடியவில்லை, இவ்வளவு கேவலமாகவும் அதிமுக தான் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது என்று தமிழ் மக்களுக்கும், தனது ஆட்சியை அதிமுக ஆட்சி போல காட்டிக் கொண்டிருக்கிறது மோடிஅரசு. அதிமுக பாஜக பணித்தபடி கீழ்கண்ட சுலோகத்தை தமிழ் மக்களுக்கு உணர்த்துவதை தனது கடமையாகக் கொண்டுள்ளது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய். எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோஅது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும். தமிழ் மக்கள், தமிழ் அடையாள அமைப்புகள், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதற்காக போராட்டம் நடத்த வேண்டும்? காவிரி மேலாண்மை வாரியம், நீட்தேர்வு, நியுட்ரினோ திட்டம், கெயில் எரிவாயு, ஸ்டெர்லைட் ஆலை, அணுஉலைகள் எல்லாவற்றிலும் இந்த அடிப்படையில் தானே ஹிந்துஸ்தானத்தை காத்து இரட்சிக்கும் கிருஷ்ணராக மோடி சரியாகத்தான் நகர்த்திக்; கொண்டிருக்கிறார் என்கிறார்கள் எடப்பாடி- பன்னீர் படையணிகள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,771.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



