Show all

வேகமாகப் பரவிவரும், மாற்று மதத்தினரைத் துன்புறுத்தும், ‘ஜெய்சிறிராம்’ முழக்க கலாச்சாரம்!

மேற்கு வங்கத்தில், ஜெய் சிறி ராம் என்று சொல்ல மறுத்த ஒரு இஸ்லாமிய இளைஞரை, தொடர்வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கான மதரசா பள்ளியில் ஆசிரியராக உள்ளார் ஹபீஸ் மோகத் சாருக் கால்டர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் ஜெய்சிறிராம் சொல்ல மறுத்ததற்காக தொடர்வண்டியில் இருந்து வீசப்பட்டிருக்கிறார். 

இந்தத் தாக்குதல் குறித்து தெரிவித்த ஹபீஸ், ‘சௌத் 24 பார்கனாஸ் மாவட்டத்திலிருந்து ஹூக்ளிக்கு தொடர்வண்டியில் சென்றுகொண்டிருந்தேன். அந்தத் தொடர்வண்டியில் பயணித்த ஒரு கும்பல், என்னை ‘ஜெய் சிறி ராம்’ முழக்கத்தைச் சொல்லச் சொல்லி கடுமையாகத் தாக்கியது.

அப்போது, தொடர்வண்டியில் இருந்த யாரும் உதவவில்லை. பார்க் சர்க்கஸ் தொடர்வண்டி நிலையம் வரும்போது தொடர்வண்டியிலிருந்து என்னைத் தூக்கி வீசிவிட்டனர். அங்கிருந்த சிலர் எனக்கு உதவி செய்தனர் என தெரிவிக்கிறார்.

இதுகுறித்து தெரிவித்த தொடர்வண்டி காவல்துறையினர், தொடர்வண்டியில் ஏறும், இறங்கும் பிரச்னையில் அவர் தாக்கப்பட்டிருக்கலாம். அவருடைய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்கள்.

இதுகுறித்து தெரிவித்த கொல்கத்தா காவல்துறையினர், ‘இந்தச் சம்பவத்தை உறுதி செய்வதற்கான விசாரணை நடைபெறுகிறது. இந்தச் சம்பவத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,195.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.