Show all

பொது ஊரடங்கு முழுத்தோல்வி! ஊரடங்கை சொதப்பிய உலகின் ஒரே நாடு இந்தியாவே: இராகுல் காந்தி

பொது ஊரடங்கு முழுத்தோல்வி அடைந்துள்ளதாகவும், ஊரடங்கை சொதப்பிய உலகின் ஒரே நாடு இந்தியாவென்றும், மாநிலங்களின் அதிகாரங்களை நடுவண் பாஜக குவித்துக் கொள்ளாமல், மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரம் இருந்திருக்குமானல், ஊரடங்கு இந்தியாவில் இவ்வளவு சொதப்பியிருக்காது என்றும் குற்றஞ்சாட்டுகிறார் இராகுல் காந்தி

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பொது ஊரடங்கு முழுத் தோல்வி. கொரோனா நுண்ணுயிரிப் பரவலைக் கட்டுப்படுத்த நடுவண் அரசு நடைமுறைப்படுத்திய பொதுஊரடங்கு முழுத்தோல்வி அடைந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும், முன்னணித் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

டெல்லியில் இருந்தபடி காணொளி கலந்துரையாடல் மூலமாக மூத்த செய்தியாளர்களைச் சந்தித்தார் இராகுல் காந்தி. அப்போது அவர் நடுவண் பாஜக அரசு முன்னெடுத்த பொது ஊரடங்கை நடைமுறை படுத்திய விதத்திற்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. ஆனால் நடுவண் அரசு இப்போது ஊரடங்கு நடைமுறைகளை தளர்த்திக் கொண்டு வருகிறது. ஊரடங்கை அறிவித்து விட்டால் போதுமா? ஊரடங்கு காலத்தில் மக்கள் ஊரடங்கால் அடையப்பெறுகின்ற பாதிப்புகளை களைந்து, ஊரடங்கில் அவர்கள் ஈடுபாட்டோடு சமூக இடைவெளியை பேண நடுவண் அரசு ஒத்துழைக்கவில்லையே.

மற்ற மற்ற மாநிலங்களில், காங்கிரஸ் ஆளக்கூடிய மாநிலங்களில் ஏழைகளுக்கு நிதி உதவி, உணவு வசதிகள் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்து வருகிறோம். ஆனால் மாநில அரசுகளால் தன்னிச்சையாக அனைத்து உதவிகளையும் செய்து விட முடியாது. ஒருவேளை, மாநிலங்கள், சுயாட்சி பெற்ற மாநிலங்களாகவே தொடர்ந்து இருந்திருந்தால் அது சாத்தியபட்டிருக்கும். ஆனால் நடுவண் பாஜக அரசு, மாநிலங்களின் உரிமையை பறித்து கொண்டு, உரிய உதவிகளை செய்ய விடாமல் தடுத்து வருகிறது.

ஊரடங்கு காலத்தில் உருப்படியாக ஏதுவுமே செய்யாமல், ஊரடங்கு காலம் முடிந்ததும் (கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருப்பது குறித்து பார்வையோ, படிப்பினையோ இல்லாமல்) ஊரடங்கை தளர்த்தியது இந்தியாவில்தான். ஊரடங்கு எதற்காக கொண்டுவரப்பட்டதோ, அந்த வியூகம் மொத்தமாகத் தோல்வி அடைந்து விட்டது. தற்போது, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு காரணம் ஊரடங்கு தோல்வியடைந்ததுதான். நான்கு கட்ட ஊரடங்கும் தலைமைஅமைச்சர் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை என்பது தெளிவாகிறது. 

அடுத்து என்ன கொரோனா பாதிப்பை எப்படித் தடுக்கப் போகிறோம் என்பது குறித்து நடுவண் அரசிடம் இதுவரையில் ஒரு தெளிவான பார்வை இல்லை. 21 நாட்களில் கொரோனா நுண்ணுயிரியை ஒழித்துக் கட்டி விடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். இப்போது 60 நாட்கள் கடந்து விட்டன. ஆனால் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று அடுக்கடுகாக குற்றச்சாட்டுக்களை வைத்தார் இராகுல் காந்தி.

ஊரடங்கு தேவையுள்ள பகுதிகள்: விமானப் போக்குவரத்து, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் தொடர்வண்டி போக்குவரத்து, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்து போக்கு வரத்துகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத்தளங்கள், இவைகளே கொரோhனாவின் தூரப்பயணத்தையும், பொதுவான பரவலையும் தடுக்கும். 

ஊரடங்கு தேவையில்லாத பகுதிகள்: எந்த உள்ளூர் கடை கண்ணிகள், எந்த உற்பத்தி நிறுவனங்களும், பைக்குகள், கார்கள் இவற்றின் மூலமான உள்ளூர் பயணிப்புகள். புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றிய உற்பத்தி நிறுவனங்கள். இவையெல்லாம் கொரோhனாவின் தூரப்பயணத்தையும், பொதுவான பரவலையும் முன்னெடுப்பவை அல்ல. அனால் நடுவண் பாஜக அரசு ‘பொதுஊரடங்கு’ என்று இந்தியா முழுவதும் அடைப்பதாகச் சொல்லி உத்தரவு பிறப்பித்து விட்டு- மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், காவல்துறையினர் அனைவரையும் செயற்கையாகப் பிதுங்கி வழியச் செய்தது பொதுஊரடங்கால். ஊரடங்கில் செலுத்திய கவனம், கொரோனாவிற்கு எதிரான பாதுகாப்பு நடைமுறைகள், மக்களுக்கு தாராள மருத்துவச் சோதனைகள், பாதுகாப்புக் கருவிகள் வழங்குவதில் கவனம் செலுத்தவில்லை. மொத்தத்தில் கொரோனா பாதித்தது வேறுவட்டத்தில். கொரோனா பாதிக்கப் படவேயில்லை. ஆனால் ‘பொதுஊரடங்கால்’ ஒட்டு மொத்த மக்களும் பாதித்தார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.