Show all

நேற்றே தொடங்கியது விமானப் போக்குவரத்தை நடுவண் அரசு! மாநிலங்கள் நெருக்கடியால் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன

ஊரடங்கு முடிப்புக்கு இன்னும் வருகிற ஞாயிறு வரை கால அவகாசம் உள்ள நிலையில், நேற்றே விமான போக்குவரத்தைத் தொடங்கியது நடுவண் அரசு. ஆனாலும்- தமிழ்நாடு, மகாரஷ்டிரம் உள்ளட்ட மாநிலங்களின் வேண்டுகோளால் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கு முடிப்புக்கு இன்னும் வருகிற ஞாயிறு வரை கால அவகாசம் உள்ள நிலையில், நேற்றே விமான போக்குவரத்தைத் தொடங்கியது நடுவண் அரசு. ஆனாலும்- தமிழ்நாடு, மகாரஷ்டிரம் உள்ளட்ட மாநிலங்களின் வேண்டுகோளால் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதன் காரணமாக, பரபரப்பாக இயங்கும் விமானநிலையங்களை கொண்ட தமிழ்நாடு, மராட்டியம் போன்ற சில மாநிலங்கள், அந்த விமானநிலையங்களில் இருந்து அதிக விமானங்களை இயக்க ஆர்வம் காட்டாததே, நேற்று குறைவான விமானங்கள் இயக்கப்பட்டதற்கு முதன்மையான காரணம் என்று விமான போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்திற்கு தற்போதைக்கு விமானப் போக்குவரத்தே வேண்டாம் என்று தமிழக முதல்வர் நடுவண் அரசுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார். மும்பை விமானநிலையத்தில் இருந்து முடிந்தவரை குறைந்த அளவில் விமானங்களை இயக்குமாறு நடுவண் அரசை மாரட்டிய அரசு கேட்டுக் கொண்டு இருந்தது.

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டதால், நாளது 12, பங்குனி (மார்ச் 25) முதல் இந்தியாவில் பேருந்;து, தொடர்வண்டி, விமான போக்குவரத்து இரத்து செய்யப்பட்டன.

விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் சேவை அறவே நிறுத்தப்பட்டது. 4-வது கட்ட ஊரடங்கு வருகிற ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், உள்நாட்டு பயண விமான போக்குவரத்து நேற்று முதலே தொடங்கும் என்று அந்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடந்த கிழமை அறிவித்தார்.

பயணிகள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும், ஆரோக்கிய சேது செயலியை செல்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. கொரோனா தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அறிவிக்கப்பட்டபடி நேற்று இந்தியாவில் விமான போக்குவரத்து தொடங்கியது. மேற்கு வங்காளம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் விமானங்கள் இயக்கப்பட்டன.

முதல் விமானம் டெல்லியில் இருந்து நேற்று அதிகாலை 4.45 மணிக்கு மராட்டிய மாநிலம் புனே புறப்பட்டு சென்றது. இதேபோல் மும்பையில் இருந்து முதல் விமானம் காலை 6.45 மணிக்கு பீகார் தலைநகர் பாட்னா கிளம்பிச் சென்றது.

சென்னை விமானநிலையத்தில் இருந்து முதன் முதலாக நேற்று காலை 6.35 மணிக்கு இண்டிகோ விமானம் ஒன்று 116 பயணிகளுடன் டெல்லி புறப்பட்டு சென்றது. அதன்பிறகு பெங்களூரு, கொச்சி, கோவை, வாரணாசி, திருவனந்தபுரம் நகரங்களுக்கும் விமானங்கள் சென்றன.

பிறகு மும்பை, ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு நேற்று வர வேண்டிய விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு 25 விமானசேவைகளுக்கு மேல் இயக்க வேண்டாம் என்று நடுவண் அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது

இதனால் டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு நேற்று 16 விமானங்களும், இதேபோல் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கோவை, மதுரை, போர்ட்பிளேர் உள்ளிட்ட நகரங்களுக்கு 19 விமானங்களும் இயக்கப்பட்டதாக விமான போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.

பல்வேறு ஊர்களில் இருந்தும் சென்னை வந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, இடது கையில் முத்திரை குத்தப்பட்டது. டெல்லியில் இருந்து பகலில் வந்த ஒரு விமானத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வந்தார். அவரது கையிலும் முத்திரை குத்தப்பட்டது.

உள்நாட்டு விமானங்கள் மூலம் தமிழகத்துக்கு வரும் பயணிகள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்ய கட்டாயம் இணையதள ஒப்புதல்சீட்டு பெற வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி விமான நிலையத்தில் பயணிகள் தங்கள் செல்பேசியில் உள்ள அந்த ஒப்புதலை அதிகாரிகளிடம் காட்டினார்கள். அந்த ஒப்புதல் இல்லாத பயணிகள் தங்கள் சுயவிவரங்களை தெரிவிப்பதற்காக இரு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு அவர்கள் தங்களை பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.

கொரோனா பரவலைத் தடுக்க மிக மிக முதன்மைத் தேவையான முதலாவதாக தொடங்கியிருக்க வேண்டிய விமான முடக்கத்தை தொடங்குவதில் தாமதித்த தவற்றைச் செய்தது நடுவண் அரசு, 

அதே சமயம், பொது ஊரடங்கு முடிப்புக்கே, வருகிற ஞாயிற்றுக் கிழமை வரை காலஇடைவெளி உள்ள நிலையில், விமானப் போக்குவரத்தை நடுவண்அரசு அவசரமாகத்  தொடங்கியது- மாநிலங்களுக்கு கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் அறநெருக்கடியை உருவாக்குவதாக மாநிலங்கள் உணர்கின்றன. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.