Show all

காப்போமா கண்களை! புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு, மோடி தலைமையிலான நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் கல்வி உரிமையை- முழுமையாக, நடுவண் பாஜக அரசு பறித்துக் கொள்வதற்கான புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தலைமைஅமைச்சர் மோடி தலைமையிலான நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் கல்வி உரிமையை- முழுமையாக, நடுவண் பாஜக அரசு பறித்துக் கொள்வதற்கான புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தலைமைஅமைச்சர் மோடி தலைமையிலான நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு 
புண்ணுடையர் கல்லா தவர் 
என்பார் திருவள்ளுவப் பெருந்தகை. நமது கல்வி உரிமையை முழுமையாகப் பறிப்பதற்கு நடுவண் பாஜக அரசு புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது. நமது கல்வி உரிமையை மீட்டு காப்போமா கண்களை? என்பதே கல்வியாளர்களின் கேள்வியாக இருக்கிறது. இதற்கான விடையை மக்கள்தாம் போராடிப் பெறவேண்டும்.

நடுவண் மனிதவள மேம்பாட்டுத்துறையும் இனி நடுவண் கல்வித்துறை என்று மாற்றப்படுகிறது. தமிழகத்தில் நடுவண் பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில் நடுவண் பாஜக அரசு தற்போது ஒப்புதல் அளித்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 

நாளை மறுநாள் வரை புதிய கல்விக் கொள்கை குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று நடுவண் பாஜக அரசு தெரிவித்து இருந்த நிலையில், இன்று திடீரென ஒப்புதல் வழங்கி இருப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. 

நடுவண் பாஜக அரசு அறிவித்து இருந்த புதிய தேசியக் கல்விக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தக் கல்வி கொள்கைக்கு நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். 

இதுகுறித்து பேசி இருந்த சூர்யா, ‘புதிய கல்விக் கொள்கை 30 கோடி மாணவர்களுக்கானது. கிராமப்புற, பழங்குடி மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். மூன்று அகவையிலிருந்தே மும்மொழிகளை கற்க வேண்டும் என்று கூறுவது நியாயம் இல்லை. அவர்கள் மீது மூன்று மொழிகளை திணிப்பது ஆபத்தானது. இன்று 30விழுக்காட்டு மாணவர்கள் ஆசிரியரே இல்லாமல் தான் தேர்வு எழுத செல்கின்றனர்’ என்று பேசி இருந்தார். 

மழலையர் கல்விக்கென்று இதுவரை சிறப்பு திட்டங்கள் இல்லை. ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கையில், 3 அகவையுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், 3அகவை முதல் 8 அகவை வரையிலான ஐந்து ஆண்டு  கல்வி முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தற்போது உள்ள கல்வி முறையில் 6 அகவை முதல் 14 அகவை வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி உரிமைச் சட்டம் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அளித்து வருகிறது. 

ஆனால் புதிய கல்விக் கொள்கை, மழலையர் கல்வி, உயர்நிலைக் கல்வியை உள்ளடக்கி பரிந்துரைக்கிறது. 3 அகவை முதல் 18 அகவை வரையுள்ள அனைத்து குழந்தைகளும் புதிய கல்வித்திட்ட சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். அந்தக் கல்வி முறை 5-3-3-4 ஆண்டுகள் என்ற புதிய கல்வி அமைப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு அடிப்படைக் கல்வி, மூன்றாண்டு ஆயத்தக் கல்வி, மூன்றாண்டு நடுநிலைக் கல்வி, நான்காண்டு உயர்நிலைக் கல்வி என்று மாற்றப்படுகிறது. 

மாணவர்களின் கல்வித் திறனை மதிப்பீடு செய்ய, 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் மாநில அளவிலான மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்தப் பரிந்துரைக்கிறது. தேர்வு முறையிலும் மாற்றங்கள் கொண்டுவரப் பரிந்துரைத்துள்ளது. மாணவர்களுக்குத் தங்களது விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் வழங்க வேண்டும் என்கிறது புதிய வரைவு கல்விக் கொள்கை. 

இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்குள் உயர் கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடுவண் பாஜக அரசின் இந்த புதிய கல்வித் திட்டத்தால் நடப்பு நிலையில் உயர்கல்வி பெறுபவர்கள் வட இந்தியப் பகுதிகளில் மிகக் கேவலமாக இருக்கிற அவலநிலை ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் நடுவண் பாஜக அரசால் முன்னெடுக்கப்படும் என்கின்றனர் கல்வயாளர்கள்.  அதாவது- தற்போது உயர்கல்வி பெறுகிறவர்களின் எண்ணிக்கையில் நாளை இந்தப் புதிய கல்விக் கௌ;கையில் உயர்கல்வி பெறுகிறவர்களின் எண்ணிக்கை சரிபாதிக்குக் கீழாகக் குறையும் என்கின்றனர் உறுதியாக. 

பாஜக முன்னெடுத்த எந்தத் திட்டத்தில் அவர்கள் இலக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்கின்றனர். பணமதிப்பிழப்பால் கடுமையான எதிர்நிலை விளைவுகள் அல்லவா இன்னும் நாட்டை அலைகழித்துக் கொண்டிருக்கிறது என்கின்றனர். 

ஹிந்தி பேசாத மாநிலங்களில் மண்ணின் மக்கள் மொழி, ஆங்கிலம் தவிர ஹிந்தி உள்பட மும்மொழி திட்டம் பரிந்துரைத்துள்ளது. இந்த திட்டத்தில் தான் தமிழகத்தில் ஹிந்தியை திணிக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில்தாம், மக்கள் கருத்து கேட்பு எல்லாம் கிடப்பில் போடப்பட்டு, தற்போது புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகக் கல்வியைப் பொறுத்த வரை, ஆங்கிலம் பெருஞ்சுமை என்றாலும், அதை தமிழகம் தொடர்ந்து தூக்கிப்பிடிப்பது தொடர்புக்கு என்ற தலைப்பில் ஆங்கிலத்தின் இடத்தை, ஆதிக்க வர்க்கத்தின் ஹிந்தி பற்றிக் கொண்டு, நம்மை நிரந்தர அடிமை ஆக்கி கொண்டுவிடக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வு பற்றியே. இவ்வாறாக, இரண்டாவது மொழியே தமிழகத்திற்கு ஒரு நிர்பந்தம்தாம் என்கிற நிலையில், தமிழர்களுக்கு மூன்றாவது மொழியின் சுமைக்கு என்ன கட்டாயம் இருக்க முடியும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.