Show all

எப்படி வந்தது அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு கொரோனா! தீயாய் பரவும் புகைப்படங்கள் ஆதாரங்களாகுமா

ஹிந்தித் திரையலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் குடும்பத்தில் அவர் உட்பட மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தித் திரையலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் குடும்பத்தில் அவர் உட்பட மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பரவ காரணம் இது தான் என்பது போல் சில புகைப்படங்கள் தீயாகி வருகின்றன. 

அமிதாப் பச்சனுக்கும், அவருடைய மகனும் முன்னணி நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் ஆராத்யா ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜெயா பச்சனுக்கு மட்டுமே தொற்று இல்லை என்பது திட்டவட்டமாக நிரூபணமானது. 

இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அமிதாப் பச்சனுக்கு சொந்தமான நான்கு வீடுகளையும் பூட்டி முத்திரையிட்டனர். வீட்டின் அனைத்து பகுதிகளிலும் நுண்நச்சுக் கொல்லி தெளிக்கும் பணியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அமிதாப் பச்சன் இல்லத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது எவ்வாறு என அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். அபிஷேக் பச்சன் தற்போது நிழல்களுக்குள் சுவாசம் என்ற இணையத் தொடரில் நடித்துள்ளார்.

அதற்காக லாக்டவுன் காலத்திலும் குரல்பதிவுப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார். இதற்காக அவர் அன்றாடம் வீட்டை விட்டு குரல்பதிவு நிறுவனத்திற்கு காரில் சென்று வந்துள்ளார்.

அப்படி அவர் சென்ற இடத்தில் யாருக்காவது தொற்று இருந்து அதன் மூலம் அபிஷேக் பச்சன் உள்ளிட்ட அனைவருக்கும் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. இந்நிலையில் அதே இணையத் தொடரில் அபிஷேக் உடன் நடித்து வந்த நடிகருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு எதிர்மறை (கெரோனா இல்லை) என வந்துள்ளது. நானும் அபிஷேக் பச்சனும் ஒரே நாளில் குரல்பதிவு செய்ய வரவில்லை என அந்த நடிகர் மறுப்பு தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.