Show all

இந்திய ஒருங்கிணைப்பை முன்னெடுத்த மொழி எது!

தமிழர் இந்தியாவை நாவலந்தேயம் என்று தாங்கள் கடலோடி வணிகம் புரிந்த நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியிருந்தனர். அவர்கள் தமிழர் தெரிவித்த நாவலந்தேயத்தை ந்தேயா என்று ஒலித்தனர். அதுதான் தற்போது இந்தியாவாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது.

19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒருங்கிணைந்த இந்தியாவில் அங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை பயன்படுத்திட வேண்டும் என்கிற வெறி நேற்று காங்கிரஸ் ஆட்சியாளர்களாலும், இன்று பாஜக ஆட்சியாளர்களாலும் முன்னெடுக்கப் பட்டு வருகிறது? அந்தத் தவறை உடனடியாக நிறுத்தியாக வேண்டும் என்பதற்கான காரணங்களை அலசுகிறது இந்தக் கட்டுரை. 

1.இந்தியாவை ஒருங்கிணைத்தது யார்?
2.இந்திய ஒருங்கிணைப்புக்கு பயன்பட்ட மொழி எது?
3.இந்தியா விடுதலை பெறுகிற போது, ஒருங்கிணைக்கப் பயன் பட்ட மொழியிலிருந்தும் விலக வேண்டுமா?
4.விலகும் போது மாற்றாக முன்னெடுக்கப்பட வேண்டிய மொழி எது?
5.மாற்றாக முன்னெடுக்க வேண்;டிய மொழி ஒன்றாக இல்லாமல் பலவாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? 
6.மாற்றாக இருக்கிற மொழி பலவாக இருக்கிற போது, ஏதாவது ஒரு மொழியை ஏதாவதொரு தகுதியின் அடிப்படையில் ஒருங்கிணைப்புக்கு பயன்படுத்துவது மாற்ற மொழியினருக்கு பெற்ற விடுதலை அடிமைத்தனமாக தொடருமா? 
 
இந்தியா, பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றபோது அன்றைக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற்றிருந்த காங்கிரசில் பெரும்பான்மையோர் ஹிந்தியை தாய்மொழியாக கொண்டிருந்ததால் இந்தக் கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டிருந்தாலும் தவறான பதில்களுக்கு இந்தியா முன்னெடுக்கப்பட்டது.

ஒட்டுமொத்த இந்தியாவில் தமிழகம் மட்டும், தமிழகத்தில் திமுகவின் முன்னோடிகள் மற்றும் திமுக, மட்டும் சரியான பதில் காங்கிரஸ் முன்னெடுத்தது அல்லவே அல்ல என்று போராடி. சரியான பதிலுக்கான ஒரு முப்பத்தைந்து விழுக்காட்டு மதிப்பெண்ணுக்கான பயனை மட்டும் பெற்றுள்ளது. 

இந்த நிலையில் பாஜகவிற்கு காங்கிரசின் பாதையில் தவறுகளை அரங்கேற்றுவதற்கு சட்டம் மற்றும் சட்ட அமைப்புகள் ஒத்துழைப்பனவாகவே உள்ளன.

ஓவ்வொரு கேள்வியாகப் பார்ப்போம்:-
1.இந்தியாவை ஒருங்கிணைத்தது யார்?
இந்திய ஒருங்கிணைப்பு என்பதை விட இந்தியாவைத் தக்க வைக்கும் வாய்ப்பு என்பது முதலாவதாகப் பெற்றவர்கள் தமிழர்கள். 

முப்புறம் கடல் சூழ்ந்து ஒரு பக்கம் பாதுகாப்பு அரணாக மிக உயரமான மலை அமைந்து இயற்கையான பாதுகாப்பைப் பெற்றிருந்த இந்தியாவை- தொடக்கதில் தமிழர் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. 

தமிழர் இந்தியாவை நாவலந்தேயம் என்று தாங்கள் கடலோடி வணிகம் புரிந்த நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியிருந்தனர். அவர்கள் தமிழர் தெரிவித்த நாவலந்தேயத்தை ந்தேயா என்று ஒலித்தனர். அதுதான் தற்போது இந்தியாவாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது.

நாவலந்தேயம் என்ற விரிந்த நிலப்பகுதியை தங்கள் பண்பாட்டின் உறைவிடமாக கொண்டிருந்தனர் தமிழர்கள் மட்டுமே. அந்நிலம் தங்களுக்குரியது, தாங்கள் அந்நிலத்தின் மக்கள் என்று அவர்கள் கருதியிருந்ததை ஏராளமான வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. 
தென்குமரி வடபெருங்கல் 
குணக் குட கடலா எல்லை 
குன்று மலை காடு நாடு 
ஒன்றுபட்டு வழிமொழிய. 
என்ற புறநாநூற்றுப்பாடலில், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பற்றிப் பாடும் குறுங்கோழியூர் கிழார் ஓர் நில எல்லையை அளிக்கிறார். தெற்கே குமரி, வடக்கே மாமலை. கிழக்கும் மேற்கும் கடல்கள் கொண்டது தங்கள் நாடு என. 

அந்த நாட்டிலுள்ள அனைவராலும் ஏற்கப்பட்டவன் என அம்மன்னனை சொல்கிறார். சிலர் இந்த வட எல்லையின் மலை எந்த மலை என்ற வினாவை எழுப்பக்கூடும். அதற்கு இன்னும் தெளிவான விடை புறநாநூற்றின் ஆறாவது பாடலில் உள்ளது. 

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் 
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் 
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும் 
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் (புறம் - 6) 
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை காரிகிழார் பாடிய பாடல் இது. இங்கே வடக்கே உள்ள மலை பனிபடர்ந்த பெரிய மலை என்று திட்டவட்டமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கே இமயம் எல்லையாகச் சொல்லப்பட்டதுமே தெற்கே குமரி சொல்லப்படுகிறது. இப்பாடல்கள் தெளிவாகவே நாவலந்தேயம் என்ற தேசத்தை நிலவியல் அடிப்படையாக வகுத்துவிடுகின்றன. அந்த நிலத்துமக்கள் தாங்கள் என்ற தன்னடையாளம் அக்காலத்தில் வலுவாகவே இருந்துள்ளது.

முதலாவதாக நாடகத் தமிழ் என்கிற பல ஆயிரம் ஆண்டுகள் சைகை மொழியின் காலம், அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக இசைத்தமிழ் என்கிற வாஆஆஆஆ போஓஓஓஓஓ என்ற அளபெடை மொழி பல ஆயிரம் ஆண்டுகள். மூன்றாவதாக முத்தமிழின் மூன்றாவது தமிழாக இயற்றமிழ் வளர்ந்து வந்த காலத்து தமிழன்- தொடக்கத்தில் ஆற்றங்கரையில் மட்டுமே நாகரிகம் கண்ட காலத்தில் அவனுக்கு காவிரியில் சிந்து வரை திட்டு திட்டாக பல ஆற்றங்கரை பகுதிகள் கிடைத்தன.

பின்பு நாவலந்தேயத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலைத்தை திருத்தி தமிழன் வாழத் தலைப்பட்ட போது தமிழகத்;தில் மட்டும் செந்தமிழும் மற்ற பகுதிகளில் தமிழ் கொடுந்தமிழாகி திசை மொழிகளாக மாறின. பல காலம் திசை மொழிகளையும் செந்தமிழ் ஒருங்கிணைத்தே வந்தது. 

கொடுந்தமிழுக்குத் தொல்காப்பியமும், நன்னூலும் இலக்கணம் கூறுகின்றன. இந்த இலக்கண நூல்கள் இரண்டுமே செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்திருக்கும் 12 நிலப்பகுதியில் பேசப்படும் கொடுந்தமிழ் மொழியைத் திசைச்சொல் என்றே குறிப்பிடுகின்றன. தொல்காப்பியர் தம் பாடலில் கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டு என்று கூறுகிறார். 
 தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி
பன்றிஅருவா அதன்வடக்கு நன்றாய
சீதமலநாடு புனல்நாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிரு நாட்டெண். 
என்ற வெண்பா வழி பன்னிரு நாடுகள் கீழ்க்கண்டவைதாம் என்று அறியப்படுகின்றன.
1. தென்பாண்டி நாடு
2. குட்ட நாடு
3. குட நாடு
4. கற்கா நாடு
5. வேணாடு
6. பூழி நாடு
7. பன்றி நாடு
8. அருவா நாடு
9. அருவா வடதலை நாடு
10. சீத நாடு
11. மலையமான் நாடு
12. புனல் நாடு

ஆக இந்தியாவை தமிழர்களால், தமிழ்மொழியால் தக்க வைக்க முடியவில்லை. தொல்காப்பியர் காலத்திலேயே இந்தியா பனிரெண்டு தமிழின் கிளை மொழிகளை புதிய மொழிகளாக வளர்த்தெடுக்க தொடங்கிவிட்டன என்பதாகும்.

இந்தியா ஐந்திணை வாழ்க்கையை பனிரெண்டு மொழிகளோடு தொடங்கிவிட்ட நிலையில், அடுத்து கைபர் போலன் கணவாய் வழியாக ஆற்றங்கரை நாகரிகர்களாக இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள் கங்கை கரையில் வேதகால நாகரிகத்தைத் தொடங்கினர். அவர்கள் சொந்தமாக கொண்டு வந்த இசை மொழியை கொஞ்சமும் முன்னேற்றத் தலைப்படவேயில்லை. 

அவர்கள் தங்கள் அடுத்தகட்ட இயல்மொழியை இந்திய மொழியினரோடு கலந்தே முன்னெடுத்தார்கள். முதலில் அவர்கள் உருவாக்கிய மொழி சமஸ்கிருதம். அதை இயல் மொழியாய் புனைவுகளை எழுத முற்பட்டார்களேயன்றி அதை பேச்சு மொழியாக முன்னெடுக்கவேயில்லை. அதை தாய்மொழியாக்கியும் வளர்க்க வில்லை. பின்னர் முகலாயப்படையெடுப்புகளால் உருது மொழியை உள்வாங்கிக் கொண்டு ஹிந்தி மொழியை உருவாக்கினார்கள். 

ஆக ஆரியர்கள் ஒரு நிலையான மொழியை கொண்டிருக்க வில்லை. அந்தந்த இந்திய மொழிகளைத் தங்கள் தாய்மொழியாக்கிக் கொண்டுவிட்டார்கள். எடுத்துக்காட்டாக தமிழ்ப் பார்ப்பனியர்களின் தாய்மொழி தமிழ். வங்காளப் பார்ப்பனியர்களின் தாய்மொழி வங்காளம். இந்தியாவில் பெரும்பாலான பார்ப்பனியர்களின் தாய்மொழி ஹிந்தி. ஆரியர்களின் இந்த தாய்மொழி பேணா நிலையில் இந்தியாவில் பல நூறு மொழிகள் கிளைக்க அவர்கள்தாம் காரணம் ஆனார்கள்.

ஆக தமிழர்களாலும் தங்கள் தமிழால் இந்தியாவைத் தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை. ஆரியர்கள் இந்தியாவை ஒருங்கிணைக்க எந்த மொழியையும் முன்னெடுக்கவில்லை. ஆரியர்களைச் சார்ந்து வடஇந்தியாவை ஆக்கிரமித்த முகலாயர்கள் கூட ஹிந்தி உருவாகக் காரணம் ஆனார்களே அன்றி தெற்கின் இறுதிவரை அவர்களால் வரமுடியவில்லை.  

அடுத்து இந்தியாவின் தெற்குபகுதியாக இந்தியா வந்தடைந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஒருங்கிணைத்தார்கள். இதுதான் நமது முதல் கேள்விக்கான விடை.

2.இந்திய ஒருங்கிணைப்புக்கு பயன்பட்ட மொழி எது? இது நமது இரண்டாவது கேள்வி.
இந்த இரண்டாவதான கேள்விக்கான விடை ஆங்கிலம் என்பதே.

3.இந்தியா விடுதலை பெறுகிற போது, ஒருங்கிணைக்கப் பயன் பட்ட மொழியிலிருந்தும் (ஆங்கிலம்) விலக வேண்டுமா? இது நமது மூன்றாவது கேள்வி.

இந்தியா பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றபோது அன்றைக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற்றிருந்த காங்கிரசில் பெரும்பான்மையோர் ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டிருந்ததால், ஆங்கிலத்தில் இருந்து விலகி அந்த இடத்தில் ஹிந்தியை எந்த முயற்சியும் இல்லாமல் எளிமையாக அமைத்துக் கொள்ள சட்டத்தை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

விடுதலை பெற்ற இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயஅவையில் இந்தியாவின் தேசிய மொழி என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற்றன. 

ஹிந்தியா அல்லது உருது அதிகம் கலந்த ஹிந்துஸ்தானியா என்ற விவாதம் நடைபெற்ற நிலையில் இந்த அவையில் இடம் பெற்றிருந்த தென்னிந்தியாவைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், ஜி.துர்காபாய், ராமலிங்க செட்டியார், என்.ஜி.ரங்கா, என். கோபாலசாமி ஐயங்கார், எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் ஆகியோர்- ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவை ஒருங்கிணைக்கப் பயன்பட்ட ஆங்கிலமே அரசு மொழியாக நீடிக்க வேண்டும் என்றனர்.

மூன்றாண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு 1949ஆம் ஆண்டு முன்சி - கோபால்சாமி ஐயங்கார் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி இந்திய அரசியலமைப்பின் 17ஆவது பிரிவின் அடிப்படையில் தேவநாகரி எழுத்துருவில் அமைந்த ஹிந்தி இந்தியாவின் அலுவல் மொழியாக ஏற்கப்பட்டது. இதில் இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி என்று எந்த இடத்திலும் இல்லை. அலுவல் மொழி குறித்து மட்டுமே இந்தப் பிரிவு பேசுகிறது.

இந்திய அரசியலமைப்பு, 1950இல், தேவநாகரி எழுத்துருவில் அமைந்த ஹிந்தி ஒன்றியத்தின் அலுவல் மொழியாக அறிவித்திருந்தது. 

நாடாளுமன்றம் மாறாக தீர்மானிக்காதவிடத்து, அரசியலமைப்பு செயலாக்கத்திற்கு வந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு, சனவரி 26, 1965, அரசுப்பணிகளுக்கு ஆங்கிலத்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்தது.

1964ஆம் ஆண்டு ஆங்கிலப் பயன்பாட்டை ஒரு முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் கடுமையான முயற்சியை முன்னெடுத்தது. நடுவண் காங்கிரஸ் கட்சியின் இந்த ஹிந்தித்திணிப்பு முயற்சியை எதிர்த்து தமிழக மக்களும், திமுக முன்னோடி அமைப்பகளும், திமுகவும் கடுமையாகப் போராடின. பல தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்தனர். 

இதன் விளைவாக, ஆங்கிலத்தை முன்றாக விலக்கிவிட்டு ஹிந்திப் பயன்பாட்டிற்கான திட்ட வரைவு கைவிடப்பட்டதுடன், சட்டமும் 1967ஆம் ஆண்டு திருத்தப்பட்டு ஹிந்தியை அலுவல்மொழியாக ஏற்காத அனைத்து மாநிலங்களும் தங்கள் சட்டமன்றங்களில் ஆங்கிலத்தை பயன்படுத்தாதிருக்க தீர்மானம் நிறைவேற்றாதவரையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கான தீர்மானம் நிறைவேறாத வரையிலும் ஆங்கிலப் பயன்பாடு முடிவுக்கு வராது என்று நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலவரப்படி, இந்திய அரசு ஹிந்தியுடன் ஆங்கிலத்தையும் துணை அலுவல் மொழியாக தொடர்ந்து தனது அலுவல்பணிகளில் பயன்படுத்தி வரும். அதே நேரம் தனது அலுவல்பணிகளில் ஹிந்தியின் பயன்பாட்டைப் படிப்படியாகக் கூட்டிட ஓர் திட்டத்தினை வரைந்து அதனை செயலாக்க வேண்டும். ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தின் பயன்பாடு எந்தளவு மற்றும் எப்பகுதிகளில் என்பதை அரசியலமைப்பு, அலுவல்மொழி சட்டம் 1963, அலுவல் மொழிகள் விதிகள் 1976 மற்றும் இந்தச் சட்டங்களின் கீழமைந்த அலுவல் மொழித்துறையின் சட்ட ஆவணங்களைக் கொண்டு வரையறுக்கப்படுகின்றன என்று ஆங்கிலத்திற்கு மாற்றக ஹிந்தி என்கிற நிலைப்பாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதே அன்றி விலக்கிக் கொள்ளப்படவில்லை.

இதற்குப் பிறகும் சில போராட்டங்களால் மொழிவழி மாநிலம், அட்டவணை எட்டின்படி இந்தியாவின் அலுவல் மொழிகள் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் என்றெல்லாம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவின் முதல் மொழிகள்: அட்டவணை எட்டில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் என்றும்- இரண்டாவது மொழி இந்தியாவை ஒருங்கிணைத்த ஆங்கிலமே என்றும் இந்தியாவை ஒருங்கிணைத்த ஆங்கிலத்தில் இருந்து பலமொழிகளைத் தாய்மொழியாக கொண்ட இந்தியா விலக முடியாது. என்பதுதாம் இந்தியா எடுக்க வேண்டிய உறுதியான முடிவாக இருக்க வேண்டும். 

தற்போது தமிழகம் பின்பற்றி வருகிற இருமொழிக் கொள்கையை ஒட்டு மொத்த இந்தியாவும் முன்னெடுப்பதே நிரந்தரமாக இந்தியா ஒருங்கிணைந்திருப்பதற்கான உபாயமாக இருக்க முடியும் என்பதாக கருநாடகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. 

4.விலகும் போது மாற்றாக முன்னெடுக்கப்பட வேண்டிய மொழி எது? இது நம்முடைய நான்காவது கேள்வி.
இந்தியாவில் எந்த மொழியினரும் ஆங்கிலத்தில் இருந்து விலகும் போது அவர்கள் முன்னெடுக்க வேண்டியது அவரவர்தம் தாய்மொழியே என்பதே உலகின் மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கும் தெளிவான முடிவு ஆகும்.

5.மாற்றாக முன்னெடுக்க வேண்;டிய மொழி ஒன்றாக இல்லாமல் பலவாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இது நமது ஐந்தாவது கேள்வி.

ஆம். ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாவில் முன்னெடுக்க வேண்டியது எந்தவொரு தனிமொழியும் அல்ல. எனவே- பிழையாக ஹிந்தி வளர்ச்சிக்கு இதுவரை செலவிடப்பட்ட தொகையைக் கணக்கிட்டு அதே அளவு தொகையை மற்ற இருபத்தியோரு மொழிகளின் வளர்ச்சிக்கும் செலவிட அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கிவிட வேண்டும். இனி நடுவண் அரசின் சார்பாக இந்தியாவின் எந்த மொழிக்கும் ஒரு காசு கூட செலவிடக்கூடாது. செலவிட்டால் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சமமாகச் செலவிட வேண்டும்.

6.மாற்றாக இருக்கிற மொழி பலவாக இருக்கிற போது, ஏதாவது ஒரு மொழியை ஏதாவதொரு தகுதியின் அடிப்படையில் ஒருங்கிணைப்புக்கு பயன்படுத்துவது மாற்ற மொழியினருக்கு பெற்ற விடுதலை அடிமைத்தனமாக தொடருமா? இது நம்முடைய ஆறாவது கேள்வி.

ஆம்! ஹிந்தி தொடர்ந்து திணிக்கப் படுமேயானால் அது மற்ற மொழியினரின் மீதான ஆதிக்கப் போக்கே. தமிழகம் மட்டுமே ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்களின் அடாவடிப் போக்கை தேலுரித்து வந்த நிலையில், தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இந்த அடாவடித்தனத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. அதனால் இந்தியாவை தமிழ் உள்ளிட்ட 22தாய் மொழிகளால் ஒருங்கிணைக்க வாய்பான காலம் எட்டும் வரை ஆங்கிலமே தொடர வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.