திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திமுக பொதுச்செயலாளராக மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் பேராசிரியர் க. அன்பழகன், அகவை முதுமையால் அவர் காலமானார். இதனையடுத்து திமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது. பொதுச் செயலாளராக துரைமுருகனை நியமிக்க கட்சித் தலைமை விரும்பிய நிலையில், திமுகவில் துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு வேறு நபரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்புமனுத் பதிகை நடைபெற்றது. பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் பொருளாளர் பதவிக்கு த.இரா. பாலுவும் வேட்புமனுக்களைத் பதிகை செய்தனர். இந்த இரு பதவிகளுக்கு வேறு யாரும் மனு பதிகை செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். திமுகவின் நான்காவது பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் துரைமுருகன். திமுகவில் இதுவரை அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் பொதுச்செயலாளர்களாக இருந்துள்ளனர். திமுகவில் பொதுச்செயலாளராகத் தேர்வாகியுள்ள துரைமுருகனுக்கு எண்பத்தி இரண்டு அகவை ஆகிறது. இவர் திமுகவில் பொருளாளராக பதவி வகித்து வந்தவர். வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். திமுக வின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டவியல் இளவல் மற்றும் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் சட்டவியல் முதுவர் கல்வி பயின்று பட்டம் பெற்றார். துரைமுருகன் முதன் முதலில் தமிழாண்டு 5073ல் (1971) சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று தற்போதும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். திமுகவில் பொருளாளராகத் தேர்வாகியுள்ள த.இரா.பாலுவுக்கு (தளிக்கோட்டை இராசுத் தேவர் மகன் பாலு) 79 அகவை ஆகின்றது. இவர் இயலறிவு இளவல் (பி.எஸ்சி) பட்டம் படித்துள்ளார். த.இரா.பாலு தன்னுடைய பதினாறாம் அகவையில் திமுகவில் இணைந்தார். இவர் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். திருப்பெரும்புதூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசில் கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராகப் பணியாற்றினார். நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில், திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



