நூற்று முப்பத்தி ஒன்பது கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில்- மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இதுவரை கொடுத்துள்ள தடுப்பூசி தடவைகள் 16.16 கோடி அதாவது 11.62 விழுக்காடு என்பதாக ஒன்றிய நலங்குத்துறை தெரிவித்துள்ளது. அதில் ஐந்து விழுக்காடு சேதாரம் போகவும் ஒவ்வொருவருக்கும் இரண்டு தடவைகள் தேவை என்ற நிலையிலும் 5.5 விழுக்காட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. 17,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் கொரோனா நுண்நச்சின் இரண்டாவது அலை, உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உயிர்வளி பற்றாக்குறை உள்ளதால் நோய்த் தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தடுப்பூசிகள் காலியாகிவிட்டதாகவும், எனவே, தடுப்பூசி திட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியதாக செய்தி வெளியானது. இந்நிலையில் ஒன்றிய நலங்குத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிப்பதாவது: மகாராஷ்டிர மாநிலத்திற்கு இதுவரை 1,63,62,470 தடவைகள் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதில், வீணான மருந்து உள்பட மொத்தம் 1,56,12,510 தடவை மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகவும், 7,49,960 டோஸ் மருந்து தற்போது கையிருப்பில் உள்ளது என்பதாகும். ஒன்றிய அரசு சார்பில் மாநிலங்களுக்கு இதுவரை 16.16 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், வீணான மருந்து உள்பட 15,10,77,933 தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,06,08,207 மருந்துகள் இருப்பில் உள்ளன. அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளுக்கு மேலும் 20,48,890 தடவைகள் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படும்’ என்றும் ஒன்றிய நலங்குத்துறை கூறி உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.