இஸ்ரேலை அடுத்து இரண்டாவது நாடாக அமெரிக்கா தடுப்பூசி மீதான நம்பிக்கையை மேம்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டும் முகமூடி அணிய தேவையில்லை என்பதாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 16,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா நுண்நச்சு உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் இந்த கொடிய நுண்நச்சால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்பு நாடுகளின் பட்டியலில் நமது இந்தியா பாஜக ஆட்சியாளர்களின் பொறுப்பின்மை காரணம் பற்றி முதலிடத்திற்கு வந்துள்ளது. அமெரிக்கா இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது. அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதேபோல் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 87 ஆயிரத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேசமயம் அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி திட்டமிட்டதைவிட மிக வேகமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் இதுவரை 14 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் ஒன்பதரை கோடி பேர் தடுப்பூசியின் 2 தடவைகளையும் போட்டுக் கொண்டவர்கள் ஆவர். இதன் பலனாக அமெரிக்காவில் கடந்த சில கிழமைகளாக கொரோனா தொற்றும், உயிரிழப்பும் பெருமளவு குறைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்ட நபர்கள், அதாவது தடுப்பூசியின் 2 தடவைகளையும் போட்டுக் கொண்டவர்கள் இனி பொதுவெளியில் முகமூடி அணியத் தேவையில்லை என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. (முகமூடி கொரோனா பாதுகாப்புக்கானது என்ற போதும், அது வாய்வழியான மூச்சு இழுப்புக்கு காரணமாகிறதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்;பிடத்தக்கது. வாய்வழி மூச்சிழுப்பு முகபொலிவைக் கெடுக்கும் என்பது மருத்துவச் செய்தியாகும்.) இதுகுறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கொரோனா தொற்று வெளியில் நிகழலாம் என்றாலும் பரவும் அபாயம் மிக குறைவு என்று சான்றுகள் கூறுகின்றன. தொடக்க கால ஆய்வுகள் முழு தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே முழு தடுப்பூசி போட்டவர்கள் இனி பொது வெளியிலும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கூட்டங்களிலும் முகமூடி இன்றியும் பாதுகாப்பாக இருக்கலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், இந்த அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் பெரிதும் வரவேற்றுள்ளார். மேலும் கொரோனா நுண்நச்சுக்கு எதிரான போரில் இது ஒரு நல்லவகை முன்னேற்றம் என அவர் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் ‘‘மற்றவர்களிடமிருந்து நுண்நச்சு பெறுவது அல்லது மற்றவர்களுக்கு நுண்நச்ச கொடுப்பது மிக மிகக் குறைவு என்கிற தரவுகளை நமது இயல்அறிவர்கள் நம்புகின்றனர். அதன் வெளிப்பாடே முழு தடுப்பூசி போட்டவர்கள் முகமூடி அணிய தேவையில்லை என்கிற அறிவிப்பாகும். தடுப்பூசி போட்டுக் கொண்டால் நீங்கள் இன்னும் பலவற்றை செய்யலாம். எனவே இதுவரை தடுப்பூசி பெறாத நபர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி உங்கள் உயிரை காப்பாற்றுவதோடு உங்களை சுற்றி உள்ள மக்களின் உயிரையும் காப்பாற்றுவதாகும். மேலும் அவை இயல்பான வாழ்க்கைக்கு நெருக்கமாக வர நமக்கு உதவுகின்றன’’ என கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.