கேரள மாநிலத்தில், 10 லட்சம் மின்சார வாகனங்களை சாலைக்கு கொண்டு வர இலக்கு. கேரள அரசு இந்தியாவிற்கே முன்னோடியாக பல திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வரிசையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தீவிரமாக செயலாற்ற தொடங்கியுள்ளது சமூக ஆர்வலர்களால் பாராட்டு பெறுகிறது. 08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகளும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் தீவிரமாக உள்ளன. கேரள அரசின் மின்சார வாகன கொள்கை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதன்படி அடுத்த இரண்டு ஆண்டிற்குள் கேரள மாநிலத்தில், 10 லட்சம் மின்சார வாகனங்களை சாலைக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நடப்பாண்டு இறுதிக்குள், 2 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள், 50 ஆயிரம் மின்சார தானிகள், ஆயிரம் மின்சார சரக்கு வாகனங்கள், 3 ஆயிரம் மின்சார பேருந்துகள் மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் 100 பயணிகள் படகுகள் ஆகியவற்றை சேவைக்கு கொண்டு வர கேரள அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுதத மாதத் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களைத் தேர்வு செய்யும்படி அரசு துறைகளின் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இனிமேல் வாகனங்களை வாங்குவதற்கு பதிலாக குத்தகைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வீண் செலவை குறைக்க முடியும் என்பதால், அரசு இந்த முயற்சியில் ஆர்வமாக உள்ளது. இதன்படி நடுவண் அரசின், எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட்; நிறுவனத்திடம் இருந்து மின்சாரக் கார்கள் பணியமர்த்தப்பட உள்ளது. தற்போதைய நிலையில் டெல்லி உள்பட இந்தியாவின் பல நகரங்கள் காற்று மாசுபாடு சிக்கலால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் முதன்மையான காரணமாக உள்ளன. இதுதவிர கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிட்டு வரும் தொகை மிக அதிகமாக இருப்பதும், காரணம் என்று சொல்லப்படுகிறது. (உண்மையில் பெட்ரோல் இறக்குமதியால் உற்பத்தி நாடுகளை விடவும் அதிக தொகை நடுவண் அரசுக்கு வரியாக கிடைக்கிறது என்பது அண்மையில் வெளியாகி அதிர்ச்சியூட்டிய செய்தியாகும்.) கேரள அரசு இந்தியாவிற்கே முன்னோடியாக பல திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வரிசையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தீவிரமாக செயலாற்ற தொடங்கியுள்ளது சமூக ஆர்வலர்களால் பாராட்டு பெறுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



