இரஜினி காணொளியைத் தற்போது கீச்சு நீக்கியுள்ளது. தங்களது விதிமுறைகளை இந்தப் பதிவு மீறுகிறது, என்று கீச்சு குறிப்பிட்டுள்ளது. அவர் பேசியதில் உண்மைக்குப் புறம்பான தகவல் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. 08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாளை சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்திருக்கும் தலைமைஅமைச்சர் மோடிக்கு, பேரறிமுகங்கள் பலரும் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். நடிகர்கள் இரஜினி, கமல் இருவருமே இதுகுறித்து காணொளிகளை இன்று வெளியிட்டனர். இதில் இரஜினி காணொளியை நீக்கியுள்ளது கீச்சு! இரஜினி வெளியிட்ட காணொளியில்:- கொரோனா பாதிப்புகளில் இந்தியா இரண்டாம் கட்டத்தில் இருக்கிறது அது மூன்றாவது கட்டத்திற்குப் போய்விடக்கூடாது. பொது இடங்களில் இருக்கும் கொரோனா நுண்ணுயிரி, 12-14 மணிநேரங்கள் பரவாமல் இருந்தாலே இந்த மூன்றாவது கட்டத்தை அடையாமல் தடுத்து நிறுத்திவிடலாம். இதற்காகத்தான் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி அவர்கள், சுய ஊரடங்கு உத்தரவைக் கொடுத்துள்ளார். இதே போன்று இத்தாலியிலும் கொரோனா இரண்டாவது கட்டத்தில் இருக்கும்போதே அரசால் இப்படியான சுய ஊரடங்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் அந்த மக்கள் அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிபோயுள்ளது. இதனால் இதை நாம் நிச்சயம் கடைப்பிடிக்கவேண்டும். என்று பேசியிருந்தார். இந்த காணொளியைத் தற்போது கீச்சு நீக்கியுள்ளது. தங்களது விதிமுறைகளை இந்தப் பதிவு மீறுகிறது, என்று கீச்சு குறிப்பிட்டுள்ளது. 'கொரோனா நுண்ணயிரி 12-14 மணிநேரங்கள் பரவாமல் இருந்தாலே அது செயலிழந்துவிடும்” என்னும் நோக்கில் அவர் பேசியதில்தான் சிக்கல் இருந்திருக்கிறது. ஏனென்றால் இந்தத் தகவல் உண்மைக்குப் புறம்பானது. கொரோனா சில பரப்புகளில் மூன்று நாள்கள் வரை தங்கவல்லது. மேலும், பாதிக்கப்பட்ட ஒருவர் இரண்டு வாரங்கள் வரை இன்னொருவருக்குக் கொரோனா நுண்ணுயிரியைப் பரப்பமுடியும் என்பது நலங்குத்துறைகளின் அதிகாரப்பாட்டுத் தகவல் ஆகும். கீச்சு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் அனைத்துமே கொரோனா வதந்திகளை மிகவும் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றன. இதன் விளைவாகப் பல ஆயிரம் பதிவுகள் கடந்த சில நாட்களில் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



