Show all

ஜப்பானியர்களிடம் இந்திய ஆதார்அட்டைகள்! விசாரணை நடந்து வருகிறது

கார் ஒன்றை சோதித்த போது காரில் ஒரு பெண் உள்ளிட்ட 3 ஜப்பானியர்கள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்தனர். அவர்களிடம் பெங்களுர் மற்றும் ஹரியானா குர்கான் பகுதி முகவரியில் ஆதார் அட்டைகள் வைத்திருந்தது தெரியவந்தது. 

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் வருவாய் துறையினர், காவல்துறையினர் சனிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் காரில் வந்த 3 ஜப்பானியர்களிடம் அவர்களது பெயரில் இந்திய ஆதார் அட்டைகள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் குமார், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது கார் ஒன்றை சோதித்த போது காரில் ஒரு பெண் உள்ளிட்ட 3 ஜப்பானியர்கள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சின்யா கராடா(43),  நசாரு நகஜிமா(57), மற்றும் நுகமி யமாசிடா(40) என்ற பெண் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் தமிழக எல்லையை ஒட்டிய ஆரம்பாக்கம் அருகே வசித்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் பெங்களுர் மற்றும் ஹரியானா குர்கான் பகுதி முகவரியில் ஆதார் அட்டைகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ந்த காவல்துறையினர் மூவரையும் கியூ பிரிவு காவல்துறையினரிடம் ஓப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.