ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தனது புதிய மின்தேரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய மின்தேருக்கான முன்பதிவுகளை ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது ஏற்க தொடங்கியுள்ளது. முன்பதிவு தொகை 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாங்கி மின்தேரில் பயணிக்கலாமா? 13,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் புதிய மின்தேர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிற நிலையில், மின்தேர்கள் மீது மக்களின் கவனம் திரும்பி வருகிறது. எனவே புதிய மின்தேர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் தங்களது தேர்களை மின்தேர்களாக மாற்றி கொள்ள முடியும் என டாடா அறிவித்துள்ளது. ஐசி பொறி (என்ஜின்) பொருத்தப்பட்ட நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி தேரின் மின்பதிப்பை (வெர்சன்) டாடா ஏற்கனவே விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மின்தேராக டாடா நெக்ஸான் மின் எஸ்யூவி உள்ளது. இதை தொடர்ந்து அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் தேரின் மின்பதிப்பையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா தயாராகி வருகிறது. முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது, தொடக்கநிலை நிறுவனங்களும் பல்வேறு மின் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் என்ற நிறுவனமும் தனது புதிய மின்தேரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மின்தேருக்கான முன்பதிவுகளை ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது ஏற்க தொடங்கியுள்ளது. முன்பதிவு தொகை 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டோர்ம்ஆர்3 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மின்தேருக்கு 4.50 லட்ச ரூபாய் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுக சலுகை விலையாம். இது இரண்டு இருக்கைகளை கொண்ட மூன்று சக்கர வாகனம் ஆகும். இந்த வாகனத்தின் முன் பகுதியில் இரண்டு சக்கரங்களும், பின் பகுதியில் ஒரு சக்கரமும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த வாகனத்தை ஒரு முறை முழுமையாக மின்னேற்றம் செய்தால், 200 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யலாம். மின்கலத்தை முழுமையாக மின்னேற்றம் செய்வதற்கு 3 மணி நேரம் ஆகும். ஸ்ட்ரோம் நிறுவனம் ஆர்3 வாகனத்தை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு 0.40 ரூபாய் மட்டுமே ஆகும் என்று தெரிவிக்கிறது. அதாவது இந்த வாகனத்தை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கான செலவு வெறும் 40 காசுகள் மட்டுந்தானாம். தமிழகத்தில் பல்வேறு கட்டண விழுக்காட்டில் மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது. இவர்கள் எந்த கட்டண விழுக்காட்டிற்கு கணக்கு போட்டார்கள் என்று தெரிவிக்கவில்லை. ஸ்ட்ரோம் ஆர்3 மின்தேரில் 15 கிலோவாட் உயர்-திறன் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 90 என்எம் உந்து திறனை உருவாக்க கூடியது. இந்த மின்தேரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர்கள். ஸ்ட்ரோம் ஆர்3 தேரில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்கலம் 1 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் நீடித்து உழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ரோம் நிறுவனம் மின்கலத்திற்கு 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோ மீட்டர்களுக்கான உத்தரவாதத்தை வழங்குகிறது. இந்த மின்தேரின் மொத்த எடை 550 கிலோ மட்டுமே. இந்த வாகனத்துடன் மின்னேற்றியும் வழங்கப்படுகிறது. ஆர்3 மூன்று சக்கர மின்தேரில்;, ஸ்ட்ரோம் நிறுவனம் பல்வேறு வசதிகளையும் வழங்கியுள்ளது. இதில், தொலைவியக்க சாவி, இயங்கும் சாளரக்கண்ணாடிகள், குளிரூட்டி வசதி, 3 புள்ளி இருக்கை கச்சைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அத்துடன் இதன் ஓட்டுனர் இருக்கையை 12 வழிகளில் மாற்றம் செய்து கொள்ள முடியும். அத்துடன் ஆர்3 மூன்று சக்கர மின்தேரில் சூரியஒளி பாதுகாப்பு வசதியையும் ஸ்ட்ரோம் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், இருவர் பயணிக்க உதவும் இந்த மூன்று சக்கர மின்தேரை பைக்குகளுக்கு மாற்றாக மட்டுமே பயன்படுத்த முடியும். அப்பா அம்மா இருக்கிற குடும்பத்திற்கெல்லாம் தேராது. ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு 40 காசு மட்டுமே செலவு என்ற அம்சம், பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து நிவாரணம் தரும். இது இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை எவ்வளவு ஈர்க்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.