13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து நீண்ட நாட்களாக சர்ச்சை நீடித்து வருகிறது. ஆதார் தகவல்கள் அனைத்தும் பத்திரமாக இருப்பதாக அரசும் பலமுறை அறிவித்துள்ளது. எனினும், இது தொடர்பான ஐயங்கள் அவ்வப்போது வெடிக்கின்றன. இந்நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும் ஆதார் ஆணையத்தின் முன்னாள் பொதுமேலாளருமான ஆர்.எஸ் ஷர்மா, தனது கீச்சுப் பக்கத்தில் தன்னுடைய 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டு, 'உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இந்த விவரத்தை வைத்துக் கொண்டு, எனக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள்' என பதிவிட்டிருந்தார். ஆதார் திட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வரும் ஷர்மாவின் இந்த திடீர் சவால் கீச்சுப்;பக்கத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சவாலுக்கு பதிலடியாக, பிரான்ஸை சேர்ந்த எல்லியட் ஆல்டர்சன் என்ற பாதுகாப்பு நிபுணர், ஷர்மாவின் பிறந்த நாள், இடம், தற்போதைய முகவரி, செல்பேசி எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டார். 'வெளியிடப்பட்ட தகவல்கள் போதும் என நினைக்கிறேன். அதனால் நிறுத்திக்கொள்கிறேன். ஆதார் எண்ணை பொதுவெளியில் பதிவிட்டது தவறு என்பதை தற்போது புரிந்துகொள்வீர்கள் என்பதை நம்புகிறேன்' என எல்லியட் ஆல்டர்சன் ஷர்மாவுக்கு பதில் கூறியிருந்தார். எல்லியட் ஆல்டர்சன் வெளியிட்ட தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்காமல், 'செல்பேசி எண் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பாக நான் சவால் விடுக்கவில்லை. என்னுடைய ஆதார் எண் மூலம் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் என்ன செய்யமுடியும்? என்பதே சவால்' என மீண்டும் ஷர்மா கீச்சுப் பதிவிட்டிருந்தார். எனினும், சமாளிக்கும் விதமான ஷர்மாவின் பதில் இணைய ஆர்வலர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. 'உங்களது பிறந்ததேதி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆதார் எண் மூலம் எடுத்துவிடலாம் என்பது பாதிப்பை ஏற்படுத்தாதா?' என பலர் ஷர்மாவிடம் கேட்டுள்ளனர். மேலும், 'பல அடி நீளத்தில் சுவர் கட்டி ஆதார் தகவல்களை பாதுகாப்பது இப்படிதானா?' எனவும் பலர் கேட்டுள்ளனர். மேற்கண்ட இந்த நிகழ்வால் மீண்டும் ஆதார் பாதுகாப்பு குறித்தான சர்ச்சையை கிளப்பியுள்ளார் தூங்குகிற மக்களை எழுப்பிய டிராய் தலைவர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,863.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



