Show all

கல்வி என்பது அனுபவங்களின் தொகுப்பு! அதைத் தனிப்பட்ட குழு தீர்மானிக்கிற போது, அது அந்தக் குழுவைத் தொடர்வதற்கான விதிமுறைகள் ஆகிறது

தமிழ்நாடு- முன்னோர்களின், மற்றும் திரைகடலோடி தேடிய, பெற்று கற்று, செதுக்கப்பட்ட அனுபவ கற்களால் வலுவான கல்லணையாக கல்விக் கட்டுமானங்கள் வடிவமைக்கப்பட்டு பொறிஞர்களை, மருத்துவர்களை பல்துறை விற்பன்னர்களை வெளியனுப்பிக் கொண்டிருக்கிறது. அதை தரைமட்டமாக்கி விட்டு எழுப்ப முயலும் புதிய கல்விக் கொள்கையை தமிழர்கள் ஏற்பது தற்கொலை முயற்சியாகவே முடியும். 

19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு பள்ளிக்கு வைத்திருக்கிற ஒரே அளவுகோல்- அந்தப் பள்ளி தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான பள்ளிதானா என்பதுதாம். 

நல்ல ஆசிரியர், நல்ல தலைமை ஆசிரியர் உள்ள அரசுப்பள்ளிகள் மக்கள் வரவேற்பு பெற்ற பள்ளிகளாக தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் இருக்கின்றன. 

நாம் நமது குழந்தைகள் பாதுகாப்பு குறித்து- அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க, நிர்பந்திக்க முடியாத காரணம் பற்றியே அரசு பள்ளிகள் தமிழகத்தில் புறக்கணிக்கப்படுகின்றன. நல்ல ஆசிரியர்கள் நல்ல தலைமை ஆசிரியர்கள் உள்ள அரசுப்பள்ளிகள் தமிழக மக்கள் வரவேற்பு பெற்ற பள்ளிகளாக தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் இருக்கின்றன. 

இது பாதுகாப்பான பள்ளி என்று முடிவுசெய்து, அந்தப்பள்ளியில் நமது குழந்தைகளை நமது சம்பளத்தின் பெரும்பகுதியைக் கொட்டி படிக்க வைக்கிற பள்ளிகளே கூட சுற்றுலாவிற்கு நமது குழந்தைகளை அழைக்கும் போது பெரும்பாலான பெற்றோர்கள் அனுப்புவதில்லை. சிலர் அனுப்பிவிட்டு தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்.

இந்தக் காரணங்கைள வைத்துக்கொண்டுதாம் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் இருந்து கோடிகோடியாக கொள்ளையடிக்கின்றன.

பள்ளிகளில் அரசு பள்ளிக்கு அனுப்ப இவ்வளவு சிந்திக்கிற அதே பெற்றோர்கள்- மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என்று வரும்போது அரசு நிறுவனங்களையே விரும்பி தேர்வு செய்கின்றனர். 

காரணம்: அரசு கல்வி நிறுவனங்களில்தாம்- விரிவான கல்விக் கட்டமைப்பு, உத்தரவாதம், பாதுகாப்பு அனைத்தும் இருப்பதாக உறுதி செய்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கான கல்வியின் தரம், கல்விக்கான பாதுகாப்பை அங்கே தேடுகின்றார்கள். பள்ளிகளில் தேடிய குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, இங்கே கவலை கொள்வதில்லை. அறிவார்ந்த தங்கள் குழந்தைகள் தங்கள் பாதுகாப்பை அவர்களே உறுதி செய்து கொள்வார்கள் என்று நம்புகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்த வரை கல்வித்திட்டத்தில் குறை என்றால்- அரசுப்பள்ளிகளில் நல்ல ஆசிரியர்களை உறுதிப்படுத்த முடியாமை ஒன்றுதாம். தனியார் பள்ளிகளுக்கு நல்ல ஆசிரியர் கிடைத்து, அரசுப்பள்ளிகளுக்கு நல்ல ஆசிரியர்கள் கிடைக்காமல் போவதற்கான காரணம்: மாணவர்களுக்கு நல்ல கல்வி தருவதற்கானது ஆசிரியர் பணி என்றில்லாமல், நல்ல சம்பளம் வேலை உத்தரவாதத்திற்கானது அரசுப்பள்ளி ஆசிரியர் பணி என்பதுதாம் இங்கே இருக்கிற ஒரே குறை.

கல்வி என்பது அனுவங்களின் தொகுப்பு. அதை முழுமையாக தீர்மானிப்பதற்கு ஒற்றை மனிதனோ, ஒரு சிறிய குழுவோ, குறிப்பிட்ட சமுதாயமோ, பெரும்பான்மை பெற்றிருக்கிற அரசோ தகுதியுடையவர்கள் ஆக மாட்டார்கள். கல்வி அதன்போக்கில் வளர, கல்வியாளர்களுக்கு- அரசு துணையாக நின்றால் மக்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். அந்த வகையான முன்னேற்றம் கடந்த எண்பது ஆண்டுகளாக தமிழகத்தில் தங்குதடையில்லாமல் நிகழ்ந்து கொண்டுதாம் இருக்கின்றது. 

நடுவண் பாஜக அரசு தங்கள் சமுதாயத்திற்கு, தங்கள் விரும்பும் மொழிக்கு ஆதரவான குழுவை அமர்த்தி ஒட்டுமொத்த கல்வி முறையையும் மாற்ற முனைவது என்பது- கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் யானையை தடவிப்பார்த்து யானையைத் தீர்மானித்த கதையாகவே முடியும்.

புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியின் தொடக்கத்தையே கண்டிராத வட மாநிலங்களுக்கு பயன்படக்கூட செய்யலாம். ஆனால் வளர்ந்து கல்வியின் உச்சத்தைத் தொட்டிருக்கிற தமிழகக் கல்விக் கட்டுமானத்தை இடித்து விட்டு கட்டுவதற்கு நீங்கள் இதுவரை இடித்து, இடித்துத் தள்ளிக் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு, சரக்கு சேவைவரி போன்ற எளிய கட்டுமானங்கள் அல்ல; காலம் கடந்து நிற்கக் கூடிய ஆற்றல் பெற்ற, பொருள் பொதிந்த கல்லணை. 

பார்ப்பனியர்கள், முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு தமிழகத்தின் கல்வி கலை இலக்கிய வரலாற்றை அழித்தொழிக்க- ஹிந்தி, சமஸ்கிருதம், குலக்கல்வி என்று முன்னெடுத்த அனைத்து வேலைத் திட்டங்களையும் திராவிட இயக்கங்கள் முறியடித்தன. 

அதோ பார்ப்பனியர்கள் தற்போது பாஜகவில் இருந்து கொண்டு தற்போது புதிய கல்விக் கொள்கையை தூக்கிக் கொண்டு வருகிறார்கள். தமிழ்மக்கள் கவனமாக இருக்க வேண்டும். 

இதில் தமிழக அரசின் பாடாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன் வைக்கிற செய்திகள் என்ன வென்று பார்ப்போம்;. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடுவண் பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, இன்று வெளியிட்ட அறிக்கை: 

தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். 1963ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3வது பிரிவில், ஹிந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில், நடுவண் மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இருமொழி கொள்கை தீர்மானம் இருந்த போதும், 1965ஆம் ஆண்டில் ஹிந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை எதிர்த்து, மாணவர்களும், மக்களும், தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தினர். மக்களிடைய மும்மொழி கொள்கையைப் பற்றிய கவலைகள் நீங்காததால், பேரறிஞர் அண்ணா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 23.1.1968 அன்று ‘தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து ஹிந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது’ என்று வரலாறு போற்றத்தக்கதீர்மானத்தை நிறைவேற்றினார். 

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி, பாடத் திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணாவால் தெளிவுற உரைக்கப்பட்ட இரு மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதுதான் எம்.ஜி.ஆரின் உறுதியான கொள்கையாக இருந்தது. அதன்படியே, அவர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, அதாவது, 13.11.1986 அன்று, இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஹிந்திக்கு எதிராக ஜெயலலிதா ‘ஹிந்தி பேசாத மாநில மக்கள் மீது ஹிந்தியை திணிக்கக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம்’ என்று சூளுரைத்தார் முதல்வராக இருந்த செயலலிதா. 

மேலும், இந்தியாவில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் செயலலிதா. 

இவ்வாறு எம்.ஜி.ஆர், செயலலிதா ஆகியோர் ஹிந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர். இப்படிப்பட்ட மாபெரும் தலைவர்கள் வழி வந்த தமிழகஅரசும், நடுவண் அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்ட போதே, அதில் மும்மொழிக் கொள்கை இடம் பெற்றதை சுட்டிக் காட்டி, அதனை தீவிரமாக எதிர்த்தது. மேலும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இரு மொழிக் கொள்கையையே கடைபிடிப்போம் என உறுதிபட தெரிவித்து 26.6.2019 அன்றே தலைமைஅமைச்சரை வலியுறுத்தி நான் கடிதம் எழுதினேன். 

மும்மொழி கொள்கைக்கு ஒருபோதும் அனுமதி இல்லை. இரு மொழிக் கொள்கையையே தமிழக அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்பதை கடந்த ஆண்டு எனது விடுதலைநாள் உரையிலும், சட்டமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின் போதும் தௌ;ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன். 

தற்போது நடுவண் பாஜக அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், தமிழக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நடுவண் அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது. 

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, நடுவண் பாஜக அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள தலைமைஅமைச்சரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ, பாதிப்பு ஏற்படும் போது, அந்தப் பாதிப்பிiனைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு, தமிழக அரசு தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.