24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியப் பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரை நடுவண் அரசு வரவு-செலவு அறிவிப்புகளால் தொடர்ந்து சரிந்து வருகிறது. அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவும் இந்திய சந்தைகளிலும் இன்று கடும் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியடைந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் அதிகபட்சமாக 1,274 புள்ளிகள் வரை சரிந்து 33,482 ஆக குறைந்தது. இதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி, அதிகபட்சமாக 310 புள்ளிகள் வரை சரிந்து 10,276 என்ற அளவிற்கு இறங்கியது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்தை விட சிறப்பாக உள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியானதால், அமெரிக்க டாலருக்கான வட்டியை அந்நாட்டின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி விரைவில் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தங்களின் வசமிருந்த பங்குகளை விற்று அதில் கிடைக்கும் தொகையை கையிருப்பாக வைத்திருக்கும் முடிவை எடுத்ததால், பங்குச் சந்தையில் இறக்கம் காணப்படுகிறது. இன்னும், ஒரு வாரத்திற்கு பங்கு வர்த்தகத்தில் திடீர் சரிவுகள் இருக்க வாய்ப்பிருக்கலாம் என முதலீட்டு ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,690
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



