24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி கழிமுகத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவும், கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முற்றிலுமாக வெளியேற வேண்டும் எனவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கதிராமங்கலம் மக்கள் 264-வது நாளாக போராடி வருகிறார்கள். அவர்களைப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சந்தித்து, தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளதோடு, போராட்டக் குழுவுக்கு எப்போதும் துணையாக இருப்போம் எனக் கூறிச்சென்றார்கள். தஞ்சை மாவட்டத்தில், மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணத்தை தினகரன் நடத்திவருகிறார். அதில், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அவர் பேசிவருகிறார். முதல்கட்ட பயணத்தை நேற்றோடு முடித்துள்ள தினகரன், இன்று கதிராமங்கலம் மக்களைச் சந்தித்தார். அவர் வந்துபார்த்தபோது, 30 பேருக்கும் குறைவான மக்களே கூடியிருந்தனர். பின்னர், நேரம் போகப்போக கொஞ்சம் கூட்டம் கூடியது. அதன் பின்னர் பேசத் தொடங்கிய தினகரன் ‘மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று கல்லணை கட்டி, யானை கட்டி போரடித்த மாமன்னன் கரிகால் சோழன் ஆண்ட இந்த மண்ணில் சிறப்பான முறையில் வேளாண்மை நடைபெற்றது. இந்த மண்ணில் ஓ.என்.ஜி.சி. மீத்தேன் எடுத்தால் மண் பாதிக்கப்படும். மக்கள் வேளாண்மை செய்ய முடியாமல்போகும். இந்த ஊரையும், காவிரியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதற்காகப் போராடிவரும் கதிராமங்கலம் மக்களுக்கு எங்கள் படை என்றும் துணை நிற்கும். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. எங்கள் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அவர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும். இப்போது ஆட்சியில் உள்ளவர்களில், 6 பேரைத் தவிர எங்கள் அணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வேம். அப்படி வந்தால், தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதில், நான் முதல்வர் பொறுப்பை ஏற்க மாட்டேன். என்னோடு வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தியாகிகள்; அவர்களில் ஒருவருக்கு முதல்வர் பதவி தரப்படும்’ என்றார். இந்தத் தகவலைக் கேட்டு தமிழக அரசியல் உலகமே ஆடிப் போயிருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,690
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



