Show all

இந்தியாவிற்கு ஹிந்தி: நேற்று அமித்சாவின் வாயடி- பதிலடியாக, தமிழரை உயர்த்திப் பிடிக்க கிடைத்தது கீழடி!

இந்தியாவிற்கு ஹிந்தி என்று நேற்று முழக்கப்பட்ட அமித்சாவின் வாயடி, இந்தியா தழுவி கடும் எதிர்ப்புகளால் முடக்கப்பட்டது. அமித்சா உங்கள் வாயடி பொய்மையானது; எங்கள் கீழடி எங்களைத் தூக்கி நிறுத்துவதற்கான, கொத்து கொத்தான சான்றுகளின் கெத்து! 

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கீழடியில் தமிழக அரசு சார்பில், நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன.

(!) ஒரு ஏக்கர் நிலத்தில் தந்தத்திலான 89 தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன. பண்பாட்டு, தொழில் நாகரிக அடையாளங்களை உணர்த்தும் வகையில் இந்த முடிவுகள் அமைகின்றன. கி.மு 600-களிலேயே பேச்சும் எழுத்தும் இருந்திருப்பது, இந்திய மொழிகளிலேயே அதிக அகவையுடைய மொழி, தமிழ்தான் என்பதை உறுதிசெய்கிறது. 

(!) கீழடி ஆய்வில் 1,001 குறியீடுகள் கிடைத்திருப்பது, சாதாரண செய்தியல்ல. சிந்துவெளி ஆய்விலும் கீழடி ஆய்விலும் நிறைய ஒற்றுமைகள் தெரிய வருகின்றன. விரைவில் சிந்து வெளிநாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது சான்றுகளோடு நிறுவப் படும்; ஆம்! இந்தியாவின் தொல் குடிகள் தமிழர் என்பது சான்றுகளோடே நிறுவப் படும். 

(!) சங்ககாலத் தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகம் என்பதற்குச் சான்றாகப் பெயர்கள் பொறிக்கப்பட்ட பானைகள். இருவேறு நிறங்களில் பானைகள், நூல் நூற்கும் தக்கழிகள், கூர்முனை கொண்ட எலும்பால் செய்யப்பட்ட கருவிகள், தங்க அணிகலன்கள், மணிகள், தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, சதுரங்கம் மற்றும் பகடைக் காய்கள் போன்றவையும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

(!) தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், துறையின் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ஆய்வு முடிவுகள் கையேடாக வெளியிடப்பட்டது. இதில், சங்க காலம் என்பது முந்தைய கணிப்புகளைவிட மேலும் 400 ஆண்டுகள் பழைமையானதாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.

(!) கீழடி அகழாய்வு முடிவுகள்: கருதுகோளாக இதுவரை எழுதப்பட்டு வந்த இந்திய வரலாற்றை, திருத்தி எழுதும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வுகளுக்குத் தூண்டுகோலாக இருந்த, இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.  மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது 
“கீழடியின் நான்காம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியிருப்பது குறித்து பேசுகையில், பத்து நாட்களாக நாங்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து, கீழடியின் நான்காம் கட்ட அகழ்வாய்வு முடிவுகளைத் தமிழகத் தொல்லியல்துறை இப்போது வெளியிட்டுள்ளதில் மகிழ்ச்சி.

கீழடியில், அமர்நாத் மேற்கொண்ட ஆய்வின்போது 6 மீட்டர் ஆழக்குழி அமைத்து அதில் 3-வது மீட்டர் ஆழத்தில் கிடைத்த மாதிரிகள் கி.மு 290 காலத்தினதாக அமைந்தன. தற்போது, எதிர்பார்த்ததைவிட மேலாக கி.மு 6-ம் நூற்றாண்டுப் பதிவுகளின் சான்றுகளாக இந்த முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இந்த முடிவுகள், இந்திய வரலாற்றுக்கே வெளிச்சம் பாய்ச்சுவதாக அமைந்துள்ளன. அகழ்வில் இன்னும் ஆழம் சென்றால், இதற்கும் முந்தைய காலத்தின் சான்றுகள் கிடைக்கும்.

கீழடி ஆய்வு தொடங்கிய அதே ஆண்டில் தொடங்கப்பட்டது, பாட் நகர் அகழாய்வு. அங்கே உணரும் அருங்காட்சியகம் அமைக்க இந்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் சனோலி பகுதியில் பழங்காலத்தேர் கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பகுதி, பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகளுக்காக 6,000 கோடி ரூபாயை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், அதில் கீழடி இடம்பெறவில்லை.

பாட் நகர், சனோலி ஆய்வுகள், எற்பாடுகள் எல்லாமே பாராட்டுக்குரியவைதான். அதேசமயம், கீழடியையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். ஆய்வுக்கும் அருங்காட்சியகம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கி அடுத்தகட்ட அகழாய்வை இந்திய அரசு நடத்த வேண்டும்.

முதல் இரண்டாண்டுகள் அமர்நாத் மேற்கொண்ட ஆய்வறிக்கை, இடைக்கால அறிக்கையாகக் கொள்ளப்பட்டது. மூன்றாம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சிறிதர், அகழாய்வு செய்த இடத்திலிருந்து கட்டுமானத் தொடர்ச்சி எதுவும் கிடைக்கவில்லை என்று தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். இதை முன்வைத்து, ஆய்வை முடித்து கீழடியைக் கைவிட்டது இந்திய அரசு; இது, அரசின் காழ்ப்புணர்வையே காட்டுகிறது. தொடர்ந்து தமிழகத் தொல்லியல்துறையும் இந்தியத் தொல்லியல்துறையும் இந்த ஆய்வுப் பணியைத் தொடர வேண்டும்” என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,282.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.